இந்த வாரம் மட்டும் 13,000 அகதிகள் நடுக்கடலில் மீட்பு
அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகுகள் நடுக்கடலில் தத்தளிப்பதைக் கண்ட இத்தாலி, அயர்லாந்து, ஜெர்மனியைச் சேர்ந்த கடற்படைகளின் கப்பல்கள் அவசர மீட்புப் பணியில் ஈடுபட்டு 668 பேரை மீட்டன.
இது தொடர்பாக இத்தாலி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
போரினால் பாதிக்கப்பட்டு சிரியா, இராக் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகளை ஏற்றி வரும் படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
இதனைத் தடுப்பதற்காக ஐரோப்பிய யூனியனின் முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படைக் கப்பல்கள் கூட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. லிபியாவையடுத்த மத்தியதரைக் கடல் பகுதியில் இத்தாலி, அயர்லாந்து, ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்த கடற்படைக் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டன.இத்தாலி கடற்படைக் கப்பலான வேகா, சனிக்கிழமை 135 அகதிகளை மீட்டது.
ரோந்துப் பணியில் ஈடுபட்ட லெரோஸின் என்னும் அயர்லாந்து கடற்படைக் கப்பல் நடுக்கடலில் தத்தளித்த 123 பேர் மீட்டது.
இவர்கள் 40 அடி நீள ரப்பர் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது.
மேலும் கடலில் மிதந்த ஆண் சடலமும் மீட்கப்பட்டது.
அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த 4 படகுகளை நடுக்கடலில் தடுத்து அதிலிருந்தவர்களை ஜெர்மனி ரோந்துக் கப்பல் மீட்டது. சனிக்கிழமை பல்வேறு மீட்பு நடவடிக்கைகளில் மொத்தத்தில் 668 அகதிகள் மீட்கப்பட்டனர்.
நடுக்கடலில் பல படகுகள் கவிழ்ந்து ஏராளமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததை தாங்கள் கண்டதாக மீட்கப்பட்ட அகதிகள் கூறினர். அவர்களின் கூற்றுப்படி, சுமார் 400 பேர் உயிரிழந்ததாகத் தெரிகிறது.
எனினும் அந்தத் தகவல்கள் சரியானதா என்பது தெரியவில்லை. அகதிகள் குறிப்பிடும் பகுதிகளில் மீட்புக் கப்பல்கள் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன என்று இத்தாலி கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாரம் மட்டுமே சுமார் 13,000 அகதிகள் நடுக்கடலில் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

Post a Comment