முஸ்லிம்கள் மீது அரசாங்கம், உரிய அக்கறை செலுத்தவில்லை - இந்திய ஊடகத்திற்கு NM அமீன் பேட்டி
இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நிலை குறித்து நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன் இந்தியாவின் புதிய விடியல் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ரியாஸ் அஹ்மத்- புதிய விடியல் இணை ஆசிரியர்
விடியல்: இலங்கை முஸ்லிம்களின் கல்விச் சூழல் தற்போது எவ்வாறு உள்ளது?
அமீன்: இலங்கையில் 9.7 சதவிகிதம் முஸ்லிம்கள் உள்ளனர். பொதுவாக இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை ஓரளவு திருப்தி கொள்ளும் அளவில் உள்ளது. ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 3.5 சதவிதம் அல்லது நான்கு சதவிகிதம் இருந்தது. தற்போது, அது ஏழு சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால், இதில் பெரும்பான்மை மாணவர்கள் கலைத்துறைகளையே தேர்தெடுக்கின்றனர். அறிவியல், விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஆர்வப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொழும்பு நகரில் முஸ்லிம்கள் மத்தியில் கல்வியின் நிலை மோசமாகத்தான் உள்ளது. அரசாங்க துறைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மூன்று சதவிகிதம் என்ற அளவில்தான் உள்ளது. தற்போது கல்வி குறித்த ஒரு விழிப்புணர்வும் அரசு துறைகளில் நமது பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற ஆர்வமும் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களிலும் கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆன்மீக துறையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் இன்ன பிற அமைப்புகளும் தற்போது கல்வியிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றன.
விடியல்: முஸ்லிம்கள் நடத்தக்கூடிய பல்கலைக்கழகங்கள் ஏதும் இலங்கையில் உள்ளதா?
அமீன்: பேருவளை பகுதியில் இருக்கக்கூடிய ஜாமிஆ நளீமியா பல்கலைக்கழகம் முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது. சமீபத்தில் மட்டக்களப்பிலும் ஒரு கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இலங்கையில் தனியார் நடத்தும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாகும். உலக அறிவையும் ஆன்மீக அறிவையும் கொடுக்கக்கூடிய நல்லதொரு இடமாக ஜாமிஆ நளீமியா திகழ்கிறது. அங்கு பயிலும் மாணவர்கள் பட்டப்படிப்பை முடிப்பதுடன் இஸ்லாத்தை குறித்தும் நன்கு கற்று வெளி வருகிறார்கள். இலங்கையில் முக்கிய பதவிகளில் இருக்கக்கூடியவர்கள் நளீமியாவில் கல்வி கற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடியல்: இலங்கை முஸ்லிம்களின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது?
அமீன்: பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக முன்னணியில் இருக்கின்றனர் என்ற ஒரு மாயை உள்ளது. பெரு நகரங்களில் முஸ்லிம்கள் சில்லறை வியாபாரங்களில்தான் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய பெரு நிறுவனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். முஸ்லிம்களின் சில்லறை வர்த்தகத்தை குறிவைத்து நான்கைந்து வருடங்களாக கடும்போக்கு பௌத்த அமைப்புகள் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், பெரும்பான்மை சமூகத்திடம் இது எடுபட்டதாக தெரியவில்லை. இந்த சவால்களை எதிர்கொண்டு முஸ்லிம்கள் முன்னேறி வருகிறார்கள்.
விடியல்: முஸ்லிம்களுக்கும் பிற சமூகங்களுக்கும் இடையிலான தொடர்பு எப்படி உள்ளது?
அமீன்: ஆயிரம் வருடங்களுக்கும் அதிகமாக முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே நெருங்கிய உறவு நிலவி வருகிறது. அவ்வப்போது மோதல்களும் ஏற்பட்டுள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய பேருவளை மற்றும் மாவனல்ல போன்ற பகுதிகளில் முஸ்லிம்களை இலக்காக வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை பெரும்பாலும் வியாபாரத்தை மையமாக வைத்தே நடத்தப்பட்டன. அத்துடன் நகரங்களில் மஸ்ஜித்களை காண்பதும் இவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ்கிறார்கள். முஸ்லிம்களை அவர்களின் பிரதேசங்களில் இருந்து விடுதலை புலிகள் வெளியேற்றினர். யுத்தம் முடிந்து ஆறு வருடங்கள் கழிந்த நிலையிலும் முஸ்லிம்கள் தங்களின் இருப்பிடங்களில் இன்னும் மீள்குடியேற்றம் செயப்படவில்லை. வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொங்கு நிலையில்தான் உள்ளனர். முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் இடிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு இன்று காடுகளாக உள்ளன. இங்கு முஸ்லிம்கள் குடியேற்றம் செயப்பட வேண்டும். சில முஸ்லிம் நாடுகள் உதவி வருகின்றன. இந்திய அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீடுகளில் சில முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், வழங்கிய விகிதாச்சாரம் போதுமானதாக இல்லை.
விடியல்: பொதுபல சேனா பிரச்சனைக்கு பிறகு முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏதும் ஏற்பட்டுள்ளதா?
அமீன்: பொதுபல சேனாவின் பிரச்சாரத்தை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர் அவர்களின் பிரச்சாரத்திற்கு பலியாகினர். முஸ்லிம்கள் சிலரின் ஆடை கலாச்சாரம் சிங்கள மக்களிடையே ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கின் அலை இங்கே அடிக்கிறதோ என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். முஸ்லிம்களை இணைந்து செல்லாத ஒரு சமூகமாக அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், இந்த நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது. சில இடங்களில் பெரும்பான்மை மக்கள் பிரச்சனைகளை உருவாக்கினர். உதாரணமாக, அலுத்காமா என்ற இடத்தில் ஒரே நாளில் பல கோடி மதிப்பிலான முஸ்லிம்களின் சோத்துக்கள் நாசமாக்கப்பட்டன. இரண்டு முஸ்லிம்கள் படுகொலை செயப்பட்டனர். நூற்றுக்கணக்கான கடைகளும் வியாபார நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. முஸ்லிம்களின் இருப்பு பாதுகாப்பாக இருக்கிறது என்று சோல்ல முடியாத நிலைதான் உள்ளது. ஆனால், கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் சிறுபான்மை மக்கள் நலனில் சிறிது அக்கறை கொண்டு செயல்படுவதால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
விடியல்: பத்திரிகை துறையில் இங்கு முஸ்லிம்களின் பங்களிப்பு எப்படி இருக்கிறது? பொதுவாக பத்திரிகைகள் முஸ்லிம்களை எப்படி சித்தரிக்கின்றன?
அமீன்: இந்தியாவுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் முஸ்லிம்களை பத்திரிகைகள் அவ்வளவு மோசமாக சித்தரிக்கவில்லை. தமிழ் பத்திரிகைகள் தமிழர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவதால் முஸ்லிம்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. அதே சமயம் சில விஷம பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் தற்போது அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு நிலவுகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் முஸ்லிம்கள் அப்பகுதியில் சிறுபான்மையினராகி விடுவர். எனவே, தங்களுக்கு தனி மாகாணம் வேண்டும் என்று முஸ்லிம்கள் கேட்கும்போது, முஸ்லிம்களும் தனி நாடு கோரிக்கையை வைக்கிறார்கள் என்று சில சிங்கள பத்திரிகைகள் எழுதுகின்றன. (இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் உள்ளனர். ஆனால், வடக்கு மாகாணத்தில் அவர்கள் குறைந்த அளவில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது). இலங்கையில் முஸ்லிம் மீடியா போரம் என்ற பத்திரிகையாளர் அமைப்பு செயல்படுகிறது. பத்திரிகை துறையில் உள்ள ஏறத்தாழ 98 சதவிகித முஸ்லிம் பத்திரிகையாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். முஸ்லிம் மீடியா ஃபோரம் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாளிப முன்னணிகளின் சம்மேளனம் இணைந்து பத்திரிகைகளில் வெளிவரும் செதிகளை கண்காணித்து தேவையான தெளிவுகளை வழங்கி வருகிறோம். தவறான செதிகள் வந்தால் உடனடியாக பதில்களை அனுப்பி பத்திரிகையின் தலைவருடன் பேசுகிறோம். தேவையேற்படின் சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம்.
விடியல்: இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு எப்படி உள்ளது?
அமீன்: இலங்கை நாடாளுமன்றத்தில் பல கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம்கள் ஏறத்தாழ 22 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கேபினட் அமைச்சர்கள் அந்தஸ்தில் நான்கு நபர்கள் உள்ளனர். இருந்தபோதும் தமிழர்களுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்கள் மீது உரிய அக்கறையை அரசாங்கம் செலுத்தவில்லை என்ற மனக்குறை முஸ்லிம்களிடம் உள்ளது. ஆனாலும், அரசியல் துறையில் முஸ்லிம்கள் ஓரளவு செல்வாக்குடன் உள்ளனர். வரலாற்றில் முதன் முறையாக கிழக்கு மாகாணத்தில் முதல் அமைச்சராக முஸ்லிம் ஒருவர் 2012ல் பதவியேற்றார். தற்போதும் முஸ்லிம் ஒருவர்தான் முதலமைச்சராக உள்ளார். நாடாளுமன்றம், மாகாணம், உள்ளாட்சி அமைப்புகள் என அனைத்திலும் செல்வாக்காக இருந்தாலும் பிரிந்து செயல்படுவதால் சில விஷயங்களை வென்றெடுப்பது கடினமாக உள்ளது.

Post a Comment