Header Ads



மே தின ஏற்பாடுகள் தயார் - பாதுகாப்பும் தீவிரம்

மே முதலாம் திகதியான நாளை 130 ஆவது உலக தொழிலாளர் தினமாகும். உழைக்கும் வர்க்கத்தினரைக் கௌரவிக்கும் முகமாக இலங்கையிலும் கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதனையிட்டு 18 மே தினக் கூட்டங்களும் 17 ஊர்வலங்களும் நாளை நடத்தப்படவுள்ளன. இதனையொட்டி கொழும்பு, காலி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்புக் கடமைகளில் 6,500 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடத்தவுள்ள கூட்டம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் சுதந்திர தொழிலாளர் சங்கம், பெண்கள் மற்றும் இளைஞர்களின் சங்கங்களும் ஒன்றிணைந்து பங்குபற்றவுள்ளன.

“நாட்டை வெல்லும் கரம் உலகம் வெல்லும் நாளை” என்பதே சு.கவின் தொனிப்பொருளாகும்.

இந்த ஊர்வலமானது காலி அதிவேக பாதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்தும் மஹாமோதர பெரியாஸ்பத்திரிக்கு அருகிலிருந்தும் இரண்டு வழிகளில் சமனல விளையாட்டரங்கை நோக்கி வந்தடையவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு பொரள்ளை கெம்பல் மைதானத்தில் மே தின கூட்டத்தை நடத்தவுள்ளது. தேசிய தொழிலாளர் சங்கம், பெண்கள் மற்றும் இளைஞர்களின் சங்கங்கள் ஆகியன இதில் ஒன்றிணைந்து பங்குபற்றவுள்ளன. “அர்ப்பணிக்கும் மக்களுக்கு புதிய நாடு” என்பதே இவர்களின் தொனிப்பொருளாகும். இதற்கான ஊர்வலம் மாளிகாவத்தை பி.டி. சிறிசேன விளையாட்டு மைதானத்திலிருந்து காலை 11 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த ஊர்வலமானது சங்கராஜா மாவத்தை, எல்பின்ஸ்டன், மருதானை, புஞ்சிபொரளை, பொரள்ளை, பேஸ்லைன் வீதியூடாக கெம்பல் மைதானத்தை வந்தடையவுள்ளது. இந்தக் கூட்டம் பிற்பகல் 03 மணியளவில் ஆரம்பமாகும்.

ஜே. வி. பி. மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய தொழிற்சங்கங்கள் தெஹிவளை எஸ். டி. எல். ஜெயசிங்ஹ பாடசாலை அருகில் 12 மணிக்கு ஆரம்பமாகும். கட்சி தலைவர் அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பிரதான கூட்டம் நடைபெறும்.

மஹிந்த ஆதரவு அணியின் மே தின கூட்டம் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்புடன் கிருலப்பனையில் நடத்தப்பட இருக்கிறது. இதில் 10 கட்சிகளும் 100 தொழிற்சங்கங்களும் பங்குபற்ற உள்ளதோடு மஹிந்த ராஜபக்ஷ உட்பட 16 பேர் உரையாற்றவுள்ளனர். சாலிகா விளையாட்டரங்கி்ற்கு அருகில் ஊர்வலம் ஆரம்பமாகி கிருலப்பனை மைதானத்தை அடைய உள்ளது.

ஐக்கிய சோஷலிச கட்சியின் மே தின கூட்டம் கொஸ்கஸ் சந்தியில் மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.

சுயாதீன தொழிற்சங்க கூட்டணியின் மே தின கூட்டம் முத்தையா மைதானத்தில் நடைபெறும். 18 தொழிற் சங்கங்கள் இதில் பங்குபற்ற இருப்பதோடு கொள்ளுப்பிட்டியில் இருந்து மே தின ஊர்வலம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஜனநாயக கட்சியின் மே தின ஊர்வலம் ராஜகிரியவில் ஆரம்பமாகி புத்ததாஸ விளையாட்டரங்கை அடைய உள்ளது. 1.00 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும்.

தொழிலாளர் சகோதரத்துவத்தின் மே தின கூட்டம் கொள்ளுப்பிட்டி பொல்வத்தை மிகாயெல் ஆலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊர்வலமும் கூட்டமும் இன்று (30) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்ட் கட்சி மாற்றுக்குழுவும், சமசமாஜ கட்சி பெரும்பான்மையான குழுவும், தேசிய தொழிற்சங்க முன்னணியும் இணைந்து நடத்தும் மே தின கூட்டம் 3.00 மணிக்கு நுகேகொட ஆனந்த சமரசிங்க திறந்தவெளி அரங்கில் நடத்தப்படும். ஊர்வலம் 1.00 மணிக்கு நாரஹேன்பிட்டி பொலிஸ் ஆஸ்பத்திரிக்கு அருகில் ஆரம்பமாகும்.

முற்போக்கு சோசலிச கட்சியின் மே தின கூட்டம் பெஸ்ரியன் வீதியில் நடத்தப்படும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் மே தின கூட்டம் கொழும்பு புதிய நகர மண்டபத்திலும் தமிழ் முற்போக்கு முன்னணியின் கூட்டம் நுவரெலியா தலவாக்கலையிலும் தோட்ட ஊழியர் சங்க மே தின ஊர்வலம் மத்துகமயிலும் நடத்தப்படும்.

த. தே. கூ. இன் மே தின கூட்டம் எதிர்க் கட்சி தலைவரின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட உள்ளது. ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் மே தின கூட்டமொன்றை நடத்துகிறது.

எம். எஸ். பாஹிம், லக்ஷ்மி பரசுராமன்

No comments

Powered by Blogger.