Header Ads



கிழக்கு மாகாணம், அரசியல் தலைமையை இழந்து தவிக்கின்றது - சுபைர்

(எஸ்.அஷ்ரப்கான்)

முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட கிழக்கு மாகாணம் ஒரு சிறந்த அரசியல் வாழிகாட்டித் தலைமையை இழந்து தவிக்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்காக கிழக்கு முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு சிறந்த தலைமை ஒன்றை உருவாக்க வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடும்போது,

கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தங்களுக்கென்றொரு சரியான அரசியல் தலைமையினை உருவாக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவை கிழக்கு மாகாண முஸ்லீம் மக்களின் ஆதரவினைப்பெற்று இன்று முஸ்லிம் அரசியல் தலைமைகள் என மார்தட்டிக்கொள்வோர் அம்மாகாண மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்கின்ற விடயத்தில் சிறிதளவேனும் அக்கறை செலுத்தவில்லை.

ஆனால் அவர்கள் தங்களுக்கென பெறுமதியான அமைச்சுக்களையும், பதவிகளையும் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றார்களே தவிர, இன்னும் எமது சமூகத்தின் தேவைகளை பற்றி சிந்தித்த வரலாறுகள் கிடையாது. இதனை கிழக்கில் வாழுகின்ற கல்விமான்களும், புத்திஜீவிகளும் நன்கு உனர்ந்திருக்கின்றார்கள்.

நாட்டிலே அமையப்பெற்றுள்ள நல்லாட்சியில் எமது முஸ்லீம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் எமது சமூகத்திற்காக எதனைப் பெற்றுக்கொடுத்தார்கள் என்று பார்க்கின்றபோது விடை பூச்சியமே.

இன்று இம்மாகாணத்திலே பல பிரச்சினைகளை மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக கல்வி தொடர்பான பிரச்சினைகளைப் பார்க்கின்ற போது பின்தங்கிய பிரதேசத்திலுள்ள ஏழை மக்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதனையிட்டு மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய கல்வி விடயத்தில் எமது தலைமைகள் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. இதனால்தான் புதிய தலைமை ஒன்றை நாம் தேட வேண்டிய தேவை இருக்கின்றது. இது எதிர்காலத்தில் நம்மவர் மத்தியில் புரிந்து கொள்ளப்படுமானால் அதனால் புதிய உத்வேகத்துடன் கிழக்கு அபிவிருத்தி காணும் நிலையும் அத்துடன் கிழக்கு மக்களுக்கான உண்மையான விடிவும் கிடைக்கும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

மக்கள் அரசியல்வாதிகளுக்கு வாக்கு போடுவதும் பின்னர் அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் அலைவதும் மரபாகிப் போயுள்ளது. இந்நிலை மாற்றப்பட்டு பலராலும் ஏமாற்றப்படும் கிழக்கு முஸ்லிம்கள் தமது பிரதேச மண்ணின் மைந்தன் ஒருவனால் ஆழப்படுகின்றபோது தலைவனாக மாறுகின்றபோது அவரால் மட்டுமே கிழக்கு மக்களுக்கு உண்மையான ஆட்சியை கொண்டு சேர்க்க முடியும். அதற்காக கிழக்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என்ற அழைப்பை விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.