Header Ads



முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யவில்லை என, வாதிடும் வம்பர்களுக்கு..!

-யாழ். அஸீம்-

கறுப்பு ஜுலைக்காய்
கண்ணீர் சொரிந்த எம் 
கண்களில் குத்திவிட்டு
கறுப்பு ஒக்டோபருக்கு
முகவரி எழுதி
முதுகில் குத்திய
துரோகத் தனம்
இனச் சுத்திகரிப்பே அல்ல!

முழுப் பூசனிக்காயை 
முழுமையாய்ப் புதைத்து
அரியதொரு வித்தை காட்டும்
இதயத்தோரே!

சோனகர் என்றோர் 
இனமெதுவும் இல்லை
இனத்தால் தமிழர்
மதத்தால் முஹம்மதியரென
இழித்துக் கூறிய 
இராமநாதனின்
எச்சமாய் நீரும்
இனச் சுத்திகரிப்பே 
இல்லையென
விஷத்தை உமிழ்கிநீர்!

உள்ளதையெல்லாம்
உரித்துக் கொண்டு
வேரோடு பிடுங்கி
வீசிய பாதகம்
பாவமே அல்ல
பாவம் நீங்களென்று 
பாதுகாக்கவே
அனுப்பி வைத்தோம்

வழிப்பறி கொள்ளை
இடையிலே கள்வர் பயம் 
அநியாயம் உங்கள் 
அருமந்த சொத்துக்கள்
அத்தனையும் காத்திடுவோம்
என்றோ நீர் அனுப்பி வைத்தீர்!
அன்று 
ஜின்னா மைதானத்தில்
ஈழத்தைக் கடப்பதற்கு 
இருநூறு போதுமென்று
ஈழத்தில் உழைத்த சொத்து
எமக்கே சொந்தமென 
அத்தனையும் அபகரித்த 
பாதகம் என்றும்
மறக்குமோ இதயம்?
பாதுகாப்பென்றோ
பகிடி விடுகிறீர்...?

வேரோடு பிடுங்கி வீசி
வெறித்தனமாடியதை
பாதுகாப்பென்றால் ஐயா
பழுதுமக்கு மூளையன்றோ
பலரும் உரைப்பார்கள்!

'வெளியேற்றம் நியாயம்
காலத்தின் கட்டாயம் எனக் 
கதை விடும் ஐயா 
காலம் கட்டாயம்
பதில் சொல்லும்
காத்திரும் ...

இதயத்தைக் கீறி
இரணமாக்கும்
உம்பெற்றோர் ஒரு சிலரே...
எங்கள்
விழி நீரைத் துடைக்கும்
இனிய தமிழ் சோதரரின்
ஆயிரம் கரங்களுண்டு


வாழ்விழந்து வாடும் 
வடபுல முஸ்லிம் மகனின்
காலடிபடாத வரை என் 
பாதமும் மிதிக்காதென
ஆளுரைத்து வாழ்ந்த 
உடுப்பிட்டிச் சிங்கம்
சிவசிதம்பரம் ஐயாவும்...

இருமணி நேரத்தில்
எம் முஸ்லிம் சோதரரை
அகதிகளாக்கிய கொடுமை
இனச்சுத்திகரிப்பென
உரத்துக் கூறிய 
சுமந்திரன் ஐயாவும்...

தாயக மண்ணிழந்து 
துயரினில் வாடும் எங்கள்
வாழ்வினில் ஒளியேற்ற 
வழிகாட்டும் தமிழ் தலைவர்களும்...

ஒக்டோபர் முப்பதில் 
ஓங்கார அலையொன்றில் 
மணல் வீடு சிதைந்தது போல்
எம் வாழ்வு சிதைந்த போது
வாய்பொத்தி அழுத
இனிய தமிழ் சோதரும்...

கால் நூற்றாண்டு 
கடந்து விட்ட போதிலும்
கறையேதுமில்லாது
நிறைவான அன்புடன்
வாருங்கள் வாருங்கள்
வந்து குடியேறுங்களென
இன்முகம் கொண்டழைக்கும்
இனிய தமிழ் சோதரரும்
இதயத்தில் இன்னும்
உயர்வாக வாழ்கின்றார்


2 comments:

  1. யாழ் அஸீம், வார்த்தை இல்லை சொல்வதற்கு. பலமுறை வாசித்தேன். இந்த பக்கத்தை விட்டு செல்ல மனம் இல்லை. பக்குவம், பைவியம், கருத்தின் முதிர்ச்சி, எழுத்தின் முதிர்ச்சி, தமிழன் முதிர்ச்சி, நாகரீகம்.... நன்றி.

    ReplyDelete
  2. யாழ் அஸீம், வார்த்தை இல்லை சொல்வதற்கு. பலமுறை வாசித்தேன். இந்த பக்கத்தை விட்டு செல்ல மனம் இல்லை. பக்குவம், பைவியம், கருத்தின் முதிர்ச்சி, எழுத்தின் முதிர்ச்சி, தமிழன் முதிர்ச்சி, நாகரீகம்.... நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.