ஜம்மிய்யது அன்ஸார் ஸுன்னத்து முஹம்ம்தியா வெளியிட்ட, அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு
-அபூ இமான் ஸஹ்வி-
சம்பதப்பட்டவர்கள் சொல்வார்கள் எனக் காத்திருந்தேன், அவர்களின் அதீத அமைதியையும், நிகழ்வுகளை மக்கள் மயப்படுத்துவதில் அவர்களின் அசமந்த போக்கினையும் கண்டு அமைதியிழந்தே, நான் இங்கு சில வரிகளை எழுத விழைகிறேன்.
"ஜம்மிய்யது அன்ஸார் ஸுன்னத்து முஹம்ம்தியா" (JASM) - ஷேய்க் அப்துல் ஹமீது பக்ரி (ரஹ்) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இலங்கை பரகஹதெனியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு.
இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரத்தினையும் சமூக சேவையினையும் மிகவும் வீரியமாக முன்னெடுத்த, இன்றுவரை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மிகவும் பழமை வாய்ந்த ஒரு அமைப்பு. இலங்கையில் தூய மார்க்கத்தை நிலை நாட்டுவதில் இதன் பங்கை மறப்போர் வரலாற்றுத் திருடர்களாகும்.
இந்த அமைப்பு கடந்த ரமழானுக்கு சற்று முன் தஃவாவில் வரலாற்று மைல்கல்லாக இடம்பிடிக்கக்கக் கூடிய ஒரு சிறந்த சேவையைச் செய்தது.
சிறந்த ஒரு அறிஞர் குலாத்தினைக் வைத்து புனித அல் குர்ஆனை, அனைவரும் புரிந்துகொள்ளத் தேவையான அடிப்படைத் தகவல்களுடனும், சமகால முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோரின் பல்கோண வினாக்களுக்கும் விடைகூறும் வகையிலும் முதன் முறையாக சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டது. தற்போது அதன் விநியோகப் பணி மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றது. இது சிங்களம் பேசும் உலகத்தின் நீண்ட நாள் தேவையை பூர்த்தி செய்ததுடன் தஃவாவில் ஒரு புதிய பாதையையும் தொடங்கி வைத்தது.
JASM ஏற்கனவே சத்தமில்லாமல் செய்துமுடித்துவிட்ட பணியை இன்று சிலர் சத்தம்போட்டு செய்து, இதுதான் இலங்கையின் முதல் சிங்கள மொழிபெயர்ப்பு என்பதுபோல் பிரச்சாரம் செய்து பேரானந்தப்பட்டுக் கொண்டிருப்பதனையும் ஒரு வரலாற்று நிகழ்வுக்கு சொந்தம் கொண்டாடுவதையும் என்னவென்று சொல்லுவதென்று எனக்குத்தெரியவில்லை. இலங்கை தவ்ஹீத் தஃவாவின் முன்னோடியான ஷேய்க் அப்துல் ஹமீது பக்ரியை தன் வரலாற்றோடு இணைக்க முற்பட்டவர்கள் முதன்முதலாக வெளியான அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பை குறிப்பிடாமல் குழிதோண்டிப் புதைத்ததேனோ புரியவில்லை.
எல்லாத் தரப்பாலும் கணத்த விமர்சனத்துக்குள்ளான பீஜேயின் தமிழ் மொழிபெயர்ப்பின் சிங்கள மொழியாக்கம்தான் தற்போது சிலரால் வெளியிடப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
இப்படித்தான், இலங்கையில் உயிர்ப்பலி தொடக்கம் கை கால் முறிவு அடக்கம் பல தியாகங்களுக்கு மத்தியில் மிகவும் கஷ்டப்பட்டு சத்திய மார்க்கத்தை பேசவும், பகிரவும், வாழவும் தேவையான சூழல் உருவாக்கப்பட்ட பின் புதிதாக சிறகுகள் முளைத்த சிலரால் அதன் வரலாற்றை எள்ளினகையாடும் அல்லது சொந்தம் கொண்டாடும் நிலை கடந்த சில ஆண்டுகளாக இலங்கையில் இடம்பெற்று வருகின்றது.
பெயரும் புகழும் விரும்பாப் பக்குவத்துடன் தொடர்ந்தும் அமைதிகாக்கும், ஊமைப் போராட்டம் நடத்தும் JASM போக்கு சமகால தஃவாவின் போக்குக்கு பொருத்தமானதல்ல. இதே பாணியில் தொடர்ந்து பயணிப்பது தஃவாவின் நலனுக்கு ஆரோக்கியமானதல்ல.
தனது நிகழ்ச்சிகள், பணிகளை வெளியுலகுக்கு கொண்டுவருவது புகழ் அல்ல. அதுவும் தஃவாவின் ஒரு அங்கம் என்பதை JASM உணர வேண்டும் என வேண்டுகின்றேன். இன்றைய தஃவாவின் வெற்றி அல்லாஹ்வின் உதவியுடன் மீடியாவை சரியாகக் கையாள்வதிலேயே தங்கியுள்ளது என்ற யதார்த்தம் புரியப்படல் வேண்டும். யார் நல்லது செய்தாலும் பாராட்ட வேண்டும் என்பது பொதுவான நிலை. ஆனால் நலத்தை நல்ல வழியில் செய்வதே சரியான முறை. அதுவே எமது நிலை.
தஃவா என்பது போட்டியல்ல, அது சுவர்க்கத்துக்கான ஒரு தியாகப் போராட்டம். தாயிகள் எல்லோரும் சுவனத்துக்கு போகும் போராளிகள் கிடையாது. தாயிகளில் முதலில் நரகத்துக்குப் போவோரும் உண்டு. அல்லாஹ் எம்மைக் காப்பானாக.

Post a Comment