Header Ads



ACJU vs SLTJ அறிக்கைகளும், எமது உணர்வுகளும்...!

/Ajmal Mohideen/

அண்மைய நாட்களில் ACJU SL TJ, விடுகின்ற அறிக்கைகள்,அனுப்புகின்ற கடிதங்கள், அதையொட்டி வேறு சிலரின் அறிக்கை என்பன எனக்குள் ஏற்படுத்திய உணர்வலைகள் இப்பதிவினை வெளியிட வைத்துள்ளது  முரண்பாடுகளும், கருத்து வேறுபாடுகளும் உலகில் மனித வாழ்க்கை இருக்கும்வரை எல்லா விடயங்களிலும் இருக்கும் இது இயற்கையின் உலகப் பொதுநியதி. இது தவிர்க்க முடியாத ஒரு விடயம். இதற்குள் சிக்கி நமது சமூகம் சிதைவை சந்திப்பதற்கு முன் தேவையான ஒருகலந்துரையாடலுக்கான களம், சகல சந்திப்புக்களுக்குமான ஒரு அறை இருக்க வேண்டும்.

நிராகரிப்பதும் முரண்பட்டு விலகிநிற்பதும், தொடர்புகளைதுண்டித்துப்பதும் அறிக்கை, மறுப்பறிக்கை என வெளியிடுவதும், மூன்றாம் தரப்பினருக்கு காட்டிகொடுப்பதும், அத்தகையவர்களை ஏவி விடுவதும் ஆரோக்கியமான பாதையல்ல, இவ்வாறு முரண்பட்டு நிற்பதும், அறிக்கை,மறுப்பறிக்கை என வெளியிடுவதும் என்பதானது,நீண்டகால அவதானிப்பில் சாதாரண மக்கள் எல்லா ஜமாஅத்களையும் விட்டு விலகிச்செல்லவும்,உயர்சபைகள் மீதான நம்பிக்கையை இழந்து அவற்றிற்கு கட்டுபடாமல் ஒரு புதிய சமூக வாழ்க்கை ஒழுங்கு முறைக்குள் வாழவும் என்றநிலைமையை தோற்றுவிக்கும்  அவ்வாறான ஒரு சமூகநிலை உருவாகுவதற்கு முன்னர் முஸ்லிம் சமூக சிந்தனையாளர்கள் விழித்துகொள்ளவேண்டும்.

இன்று எழுந்துள்ள இந்த முரண்பாடும் ,அறிக்கைகளும் நமக்கு புதியவை அல்ல , இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில், வெவ்வேறு அமைப்புக்களுக்குள், ஜமாஅத்களுக்குள், இதைவிடமோசமாக, பள்ளிவாசலுக்குள்ளாகவும், வெளியாலும் என அடிதடிகள், எரிப்புக்கள், எதிரெதிர் அறிக்கைகள் என கண்டிருக்கின்றோம், நேரடியாக அனுபவித்தும் இருக்கிறோம் ஆனால் அன்றையகாலமும், நம்மைச்சுற்றியிருந்த களநிலையும் வேறு , இன்றைய காலமும் களநிலையும் வேறு.எப்போது இந்த சமூகம் சறுக்கும், தள்ளி வீழ்த்தி விடுவோம் என ஒரு கூட்டம் நம்மை சுற்றி வளைத்து நிற்கிறது. இந்தத்தளத்தில் இருந்துதான் நாம் சிந்திக்க வேண்டும் சீர்திருத்தத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும்.

இயக்க வெறியும்,உயர் சபைகளின் பக்கச்சார்பானதும், மேலாதிக்க கர்வமும் கொண்ட செயற்பாடும் என்ற கசப்பான உண்மைகள் நமக்குள் முனுமுனுக்கின்ற விடயமாக இருக்காமல் சிந்தனையாளர்களின் கலந்துரையாடல் தளத்திற்கு முன் வைக்கப்பட்டு தீர்வுகள் எட்டப்பட வேண்டும், என்ன விலை கொடுத்தும் ஒற்றுமை நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இயக்கங்களுக்கொரு பள்ளிவாசல், இயக்கங்களுக்கொரு மத்ரஸா ,இயக்கங்களின் ஆளுமையுள்ள ஊர்கள் என்ற நிலைமைகள் மாற்றப்பட வேண்டும்.

சமூக சிந்தனையாளர்களே இந்த மாற்றத்தை உருவாக்குவது இலகுவான விடயமல்ல எந்த இயக்கங்களும், ஜமாஅத்களும், உயர்சபைகளும் விட்டுக் கொடுப்புக்கும், தாராள சிந்தனை மாற்றத்திற்கும் உடனடியாக சம்மதிக்கப் போவதுமில்லை.

ஆனால் சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி தமக்குள் ஒரு கலந்துரையாடல் தளத்தை உருவாக்கிக் கொண்டு அத்தகைய சிந்தனயை  மக்கள் மத்தியிலும் விதைத்துக் கொண்டு ஒற்றுமைக்கான படிகளை ஒவ்வொன்றாக கட்ட வேண்டும். இங்கே சிந்தனையாளர்களின் கொள்கைக்கும் வழிமுறைகளுக்கும் ஆதரவான அழுத்தங் கொடுக்கக் கூடிய ஒரு மக்களணியும் இருக்கும், இயங்கும் நிலையிலேயே இயக்கங்கள், ஜமாஅத்கள், உயர்சபைகள் என்பன ஒற்றுமைக்கான கலந்துரையாடல் தளத்திற்கு வருவார்கள்.

முடிவாக சமூக சிந்தனையாளர்களே இன்னும் ஓரிரு நாட்களுக்குள் நமது சமூகத்திற்குள்வர இருக்கின்ற அறிக்கைகளும், கருத்துக்களும் ஆரோக்கியமாக இருக்கபோவதில்லை.

எனது இந்த பதிவை பத்திரிகைகளில் வெளியிடுவதைவிட இவ்வாறான சமூக வலைத்தள குழுமங்களுக்குள் பதிவிடுவது வினைத்திறன் உடையதாக இருக்கும் என நம்புகிறேன். சமூகவலைப் பதிவுகள் எகிப்திலும்,டுனீசியாவிலும் புரட்சிகளை உருவாக்க வழிசமைத்ததென்றால் ,நமது சமூகவலை பதிவுகளும் ஒரு சமூக மாற்றத்தை உருவாக்க வித்திடட்டும்.

நல்லாட்சியை கொண்டுவர ஒரு சிந்தனை கொண்ட குழு முன் வந்தது போல்,நமது சமூக மாற்றத்திற்கும் ஒரு சிந்தனையாளர் குழு உருவாகட்டும்.
மாற்றத்தை நோக்கிய பயனத்தை ஆரம்பிப்போம்.

No comments

Powered by Blogger.