மாட்டுக்கறி சாப்பிட அனுமதி மறுத்த பொலிஸார், இடம்கொடுத்த பள்ளிவாசல்
மாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று திருச்சியில் மாட்டுக்கறி விருந்து போராட்டம் நடத்தப்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் தர்தரி மாவட்டத்தில் உள்ள பிசாதா கிராமத்தில் மாட்டை வெட்டி சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தி காரணமாக முகம்மது இக்லாக் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுக்க கண்டனங்கள், போராட்டங்கள் வலுத்து வருகின்றது. பாதிக்கப்பட்ட குடும்பம் தற்போது டெல்லிக்கு குடி பெயர்ந்துள்ளார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு நாடு முழுக்க மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் காஷ்மீரில் சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவர் மாட்டுக்கறி விருந்து வைத்ததால், பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களால் தாக்கப்பட்டார்.
இந்நிலையில், திருச்சியில் உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் 09-10-2015 நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் முற்போக்கு மாணவர் பேரவையின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், திருச்சி காங்கிரஸ் கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளார் ஜி.எம்.ஜி.மகேந்திரன், அல் அன்பு அறக்கட்டளை நிர்வாகிகள், வரகனேரி மஹில்லா வாசிகள் உசுமான் அலி ஆகியோர் தலைமையில் திருச்சி வரகனேரி பள்ளிவாசல் அருகே சாலையில் வைத்து சூடாக மாட்டுக்கறி விருந்து வைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது, இதை பார்த்து சுதாரித்துக்கொண்ட போராட்டக்காரர்கள், பள்ளிவாசல் கட்டடத்தில் மாட்டுக்கறியை வைத்து வெள்ளிக்கிழமை என்பதால் மதியம் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்த முஸ்லிம்கள், தேடி வந்த பொதுமக்கள் என எல்லோருக்கும் மாட்டுக்கறியினை வழங்கினர்.
இதனை பெற்றுக்கொண்ட அவர்கள் பள்ளிவாசல் வாயிலில் மாட்டுக்கறியினை சாப்பிட்டனர். கூடவே தொழுகையில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கும் சூடான மாட்டுக்கறி பக்கோடா வழங்கப்பட்டது. சந்தோசமாக மாணவர்கள் சாப்பிட்டபடி சென்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உசுமான் அலி, ''மாட்டுக்கறியை முஸ்லிம்கள் மட்டும் சாப்பிடுவதில்லை. அனைத்து மதத்தினரும் சாப்பிடுகிறார்கள். எனவே முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை கண்டிக்கத்தக்கது, உணவு என்பது நமது உரிமை அதை ஒருபோதும் இழக்கமாட்டோம்'' என்றார்.



This is going to create another disaster
ReplyDeleteIndia going to face big musiba soon
ReplyDelete