Header Ads



அஷ்ரப் குறித்த மறுவாசிப்பு...!

(எம்.எம்.பாஸில் - விரிவுரையாளர்)

உலகின் தலை சிறந்த கவிஞர்களுள் ஒருவரான Longfellow  என்பவரால் எழுதப்பட்ட 'அறிவுஞானம்' எனும் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மேற்கோளுடன் இக்கட்டுரை ஆரம்பிக்கப்படுகின்றது. அம்மேற்கோள் 'சிறந்த மனிதர்களின் வாழ்க்கையை நாம் நினைவூட்டுவது நாம் எமது வாழ்வில் உயர்ந்து நிற்க வழிவகுக்கும்' என்பதாகும். இந்த உணர்ச்சி பூர்வமான கருத்தை அஷ்ரஃபில் எம்மால் பார்க்க முடிகின்றது. இதன்படி இக்கட்டுரை முஸ்லிம்களின் கல்வி வரலாற்றை மிகச் சுருக்கமாக ஆராய்வதுடன் இலங்கை முஸ்லிம்களின் உயர்கல்வி வளர்ச்சியில் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பங்களிப்பு குறித்த மறுவாசிப்பாகவும் அமைகின்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கப் பின்னணி  

இக்காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியினை (1981) ஆரம்பித்தது. 1986 ஒக்டோபரில் கிழக்குப் பல்கலைக்கழகம் என இக்கல்லூரி பெயர் மாற்றப்பட்டது. 1986.09.25ஆம் திகதியிடப்பட்ட பல்கலைக்கழக கட்டளைச் சட்டத்தின்படி அதன் அமைவிடம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பாக இருக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இன ஐக்கியத்தினை முதன்மையாகக் கொண்டே இவ்விட அமைவிடம் நிர்ணயம்செய்யப்பட்டது.   ஆனால் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதற்கு மாற்றமாக, சட்டத்திற்குப் புறம்பாக விஞ்ஞானம் மற்றும் விவசாயம் ஆகிய பீடங்கள் வந்தாறுமூலையில் அமைக்கப்பட்டதனால் இப்பல்கலைக்கழக உருவாக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட இன ஐக்கியம் ஏற்பட வாய்ப்பில்லாமல் போனது. எனினும் வர்த்தக முகாமைத்துவ, கலைப் பீடங்கள் மட்டக்களப்பிலே இயங்கின.  

இந்நிலையில் 1986.02.06ஆம் திகதியன்று உயர்கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கமைய இப் பல்கலைக்கழகத்தின் பீடங்கள் கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் (ஆரடவi ஊயஅpரள) இடம்பெறக் கூடியவகையில் அமையப்பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதற்கமைவாகவே இப்பல்கலைக்கழம் கிழக்குப் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. இவ்விடயம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது மூலோபாயத் திட்டத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதய கிழக்குப் பல்கலைக்கழகம் 1981இல் பல்கலைக்கழகக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட போது அங்கு இன ஐக்கியம் ஏற்படுத்துவதற்கு ஏற்ப மூன்று இன மாணவர்களும் உள்வாங்கப்பட்டதுடன் ஆங்கிலம் அதன் போதனா மொழியாக்கப்பட்டது. ஆனால் 1983 ஜூலைக் கலவரத்திற்கு பின்னர் சிங்கள மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பின்மையால் அவர்கள் வேறு பல்கலைக்கழகங்களிற்கு நிரந்தரமாக இடமாற்றப்பட்டதுடன் இதன் பின்னரான காலப்பகுதியில் சிங்கள் மாணவர்களை இப்பல்கலைக்கழகத்திற்கு அனுமதிப்பதும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வந்தாறுமூலை வளாகம் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பிடும்படியானளவு பாதகமாக அமையாததால் அவர்கள் தொடர்ந்தும் அங்கு கல்வி கற்றனர்.  

எனினும் 1990களுக்குப் பின்னர் தீவிரமாக அதிகரித்த இனரீதியான பிளவு வந்தாறுமூலையில் இருந்த முஸ்லிம் மாணவர்களின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தினை ஏற்படுத்தியது. இக்காலப் பகுதியில் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, அவர்களின் சொத்துக்கள் பறிக்கப்பட்டு தமது வாழ்விடங்களை விட்டும் வெளியேற்றப்பட்டமை, கடத்தப்பட்டமை போன்றன முஸ்லிம்கள் மத்தியிலான பாதுகாப்பின்மையை உணர்த்தியது. இதனால் இப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களிற்கு இடமாற்றப்பட்டனர். 

இடமாற்றம் பெற்றுச் சென்ற முஸ்லிம் மாணவர்கள் பல்வேறு அளெகரியங்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய முஸ்லிம் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் என்போர் தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்குள்ளாகினர். இவ்வச்சுறுத்தல்கள் காரணமாக முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தமது அலுவல்களுக்குச் செல்வதற்கு அச்சப்பட்டனர். இப் பல்கலைக்கழக நியமனங்களைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதில் இருந்தும் முஸ்லிம் கல்வியியலாளர்கள் பலர் ஒதுங்கிக்கொண்டனர். 

அதேவேளை 1995இல் மட்டக்களப்பு நகர எல்லைக்குள் இயங்கி வந்த பிரதான பீடங்களில் கல்வியினைத் தொடர்வதிலும் முஸ்லிம் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அங்கும் முஸ்லிம் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டதுடன் முஸ்லிம் உத்தியோகத்தர்களும் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கில் மாணவர் போராட்டம் எழுச்சியடைந்தது. இதன்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற பல மாணவர்கள் இணைந்து முஸ்லிம் மாணவர் சம்மேளனத்தின் தலைமையின் கீழ் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். அக்கோரிக்கைகளுள் எல்லா இனத்தவர்களும் சுதந்திரமாக அச்சமின்றி நடமாடக்கூடிய இடத்தில் பல்கலைக்கழகம் அல்லது அதன் பீடங்கள் அமைய வேண்டும் எனக் குறுpப்பிடப்பட்டதுடன் இன ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு அது இன்றியமையாதது என்ற விடயமும் எடுத்துக்காட்டப்பட்டது.  

நெருக்கடி நிறைந்திருந்த இக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் ஒப்பீட்டு ரீதியாக குறைந்த ஆபத்துமிக்க பிரதேசமாக அம்பாரை மாவட்டமே காணப்பட்டது. இதனால் இன ஐக்கியத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம்கள் உட்பட ஏனைய இனத்தைச் சேர்ந்த மாணவர்;களும் சுதந்திரமாகக் கல்வி கற்கக் கூடிய வகையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடங்கள் அம்பாரையில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இக்கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன்போது முஸ்லிம் மாணவர்கள் தற்காலிக இடமாற்றத்தை எதிர்த்து, சிங்கள மாணவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்று தங்களுக்கும் நிரந்;தர இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என கோரி நின்றனர். அவ்வாறின்றி கிழக்குப் பல்கலைக்கழகத்திலேயே தமது கல்வி நடவடிக்கையினை தொடரவேண்டும் என்றால் சிங்கள மாணவர்களும் அங்கு அனுப்பப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இவையனைத்தும் சாத்தியமற்றுப் போகும் பட்சத்தில் அம்பாரை மாவட்டத்தில் தனியான பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.  சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின் முஸ்லிம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அவர்களது உயர் கல்விக்கான போராட்டம் பின்வரும் மூன்று பதிலீட்டுக் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அவை: அம்பாரை மாவட்டத்தில் பீடங்களை அமைத்துத்தரல் ஃ மாணவர்களை ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு நிரந்தரமாக இடமாற்றுதல் ஃ அம்பாரை மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கித் தரல் என்பனவாகும்.

புதிய பல்கலைக்கழக உருவாக்கத்திற்கான அரசியல் தலைமைத்துவம் 

இத்தகையதொரு பின்புலச் சூழ்நிலையிலேயே அஷ்ரஃபின் தென்கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கப் பிரவாகம் ஆரம்பிக்கின்றது. முதலிரு கோரிக்கைகளும் தமது சமூகத்தின் உயர் கல்வி வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது அல்ல எனத்தென்பட்ட நிலையில் புதிய பல்கலைக்கழக உருவாக்கத்திற்கான அரசியல் தலைமைத்துவத்தினை வழங்குவதற்கு அஷ்ரஃப் முற்பட்டார்.  

1980களுக்குப் பின்னரான காலம் இலங்கை முஸ்லிம் அரசியலின் நெருக்கடி நிறைந்த காலமாயினும் 1994இற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றம் முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியது. பெருவாரியான கிழக்கு முஸ்லிம்கள் அஷ்ரஃபின் அரசியல் தலைமைத்துவத்தினை ஏற்று அங்கீகரித்தனர். அஷ்ரஃப் ஆட்சியினைத் தீர்மானிக்கும் மக்கள் ஆதரவினைப் பெற்றுக்கொண்டார். இதன்படி 1994இல் உருவான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அஷ்ரஃப் முக்கியமான பாத்திரத்தினை எடுத்ததுடன் ஜனாதிபதி சந்திரிகாவுடன் நெருக்கமான அரசியல் உறவுகளையும் வளர்த்துக் கொண்டார். அரசியல் ரீதியாக இருந்த இச்சாதக சூழ்நிலை அஷ்ரஃப் தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்தது. 

இந்நிலையில் முஸ்லிம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு முடிவினைப் பெற்றுக்கொடுக்கும் கைங்கரியத்தில் அஷ்ரஃப் தன்னை இணைத்துக் கொண்டதுடன் தனக்கிருந்த அரசியல் பலத்தினைப் பயன்படுத்தி புதிய பல்கலைக்கழகம் ஒன்றினை அம்பாரையில் அமைப்பதற்கான அனுமதியினையும் பெற்றுக்கொண்டார்.  இப் புதிய பல்கலைக்கழக உருவாக்கச் சிந்தனை அஷ்ரஃபுக்கு சூழ்நிலைவயப்பட்டதாக அன்றி அவரது தூரநோக்குள்ள சமூக அரசியல் பார்வையில் என்றும் நீங்காத இடத்தினைப் பெற்றிருந்தது. குறிப்பாக முஸ்லிம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெறுவதென்பது தமது இன விகிதாசாரத்தை விடக் குறைவான இருந்ததுடன் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடும்போதும் அது மிக மிகக் குறைவானதாக விளங்கியது. இந்நிலையினைப் போக்கி முஸ்லிம்களைக் கல்வியியல் ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதில் அஷ்ரஃப் உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார் என்பதனை அவரது ஆரம்பகால உரைகள் பலவற்றிலிருந்து அறியமுடிகின்றது. 

இதன்படி அஷ்ரஃபின் அரசியல் தலைமைத்துத்துடன் 1995 ஒக்டோபர் 23இல் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 33 இடம்பெயர்ந்த மாணவர்களுடன் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக் கட்டிடத்ததில் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்த இக்கல்லூரி, கலை மற்றும் வர்த்தக முகாமைத்துவ பீடங்களை உள்ளடக்கியிருந்தது. பின்னர் தேசியப் பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக அரசறிவியல் துறை பேராசிரியர் எம்.எல்.ஏ.காதர் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. அட்டாளைச்சேனையில் இயங்கிவந்த இப்பல்கலைக்கழகமானது 1998இல் ஒலுவில் வளாகத்திற்கு இடமாற்றப்பட்டது. 

அஷ்ரஃபின் பல்கலைக்கழக உருவாக்கக் கனவு தனது சமூகத்தின் நலனுடன் பெருமளவு பின்னிப்பிணைந்திருந்த போதிலும் பல்கலைக்கழகமொன்றின் உருவாக்கம் இனத்துவ ரீதியிலானதாக இருந்து விடக்கூடாது என்பதில் அவர் மிகக் கவனமாகச் செயற்பட்டிருக்கின்றார். அதன் காரணமாகவே அஷ்ரஃப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினை ஒரு தேசியப் பல்கலைக்கழகமாக உருவாக்கினார். அவர் அரசியலில் உச்சத்தினை அடைந்திருந்த போது தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் மாணவர்களுடன் தமிழ் மாணவர்களையும் இணைத்து கல்வி நடவடிக்கையினைத் தொடர்ந்ததனையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். தற்சமயம் பெரும்பான்மையின சிங்கள மாணவர்களும் உள்ளீர்க்கப்பட்டு தேசியப் பல்கலைக்கழகமொன்றின் அனைத்துக் குணாம்சங்களும் பொருந்தியதாக தென்கிழக்குப் பல்கலைக்கழம் மாற்றமுற்றுள்ளது. அஷ்ரஃபின் கனவும் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.   

2 comments:

  1. you deliberately not mention the roles play by some lecturers who sanctifies their life , energy for establish of the university. politician roles were very minimal.

    ReplyDelete
  2. உண்மையை ஏற்று துவா செய்யுங்க சகோதரம்.

    ReplyDelete

Powered by Blogger.