Header Ads



முஸ்லிம் தலைவர்கள் செய்யாதவற்றை, முஸ்லிம்களுக்காக நாம் செய்துள்ளோம் - சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒருபோதும் தமிழ் மக்களிலிருந்து முஸ்லிம்களை தனியாகப் பிரித்துப் பார்த்தது கிடையாது. தமிழ் மக்கள் சார்ந்த நலன்களைக் கவனிக்கும் சகல விடயங்களிலும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களையும் தமிழ் பேசும் மக்களாகக் கருதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுத்தே வருகிறது என்று தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்கள் விடயத்தில் கவனம் செலுத்துவதில்லை என அமைச்சர் றிசாத் பதியுதீனினால் அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் கட்சி ஒன்றின் அதுவும் வடமாகாண முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு கட்சியின் தலைவர் ஒருவரிடமிருந்து இவ்வாறானதொரு கருத்து வெளிப்பட்டதே தவறான விடயமாகும்.

இதனை நாம் எதிர்பார்க்கவில்லை. முஸ்லிம் மக்கள் தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை அமைச்சர் அறியாமலிருப்பது வேதனை தரும் விடயமாகும்.

வடமாகாண முஸ்லிம்களின் விவகாரங்களைக் கையாள நாம் வட மாகாண சபையில் ஒரு போனஸ் ஆசனத்தை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கு வழங்கியிருக்கிறோம். அவர் முஸ்லிம் மக்களுக்கான தனது பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறார்.

முன்னர் பாராளுமன்ற போனஸ் ஆசனம் ஒன்றையும் முஸ்லிம் சகோதரருக்கு வழங்கியிருந்தோம். இது தவிர எமது பாராளுமன்ற அல்லது மாகாண அல்லது பிரதேச சபையைச் சார்ந்த எவருமே தமிழர் முஸ்லிம் என்று பிரித்துப் பார்க்காமலே தமது அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் இன்னமும் அவர்களது சொந்தக் காணிகளில் முறையாக மீள் குடியமர்த்தப்படவில்லை. அதற்காக நாம் தினந்தினம் போராடி வருகிறோம். அந்த எமது போராட்டத்தில் முஸ்லிம் மக்களது விவகாரமும் உள்ளடங்கியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஜெனீவாவில் கூட நாம் தமிழருக்காக மட்டும் எனக் குரல் கொடுத்தது கிடையாது. தமிழ் பேசும் மக்கள் எனக் கூறி இரு இன மக்கள் குறித்துமே வாதாடி வருகின்றோம்.

கடந்த அரசாங்கங்கள் எல்லாவற்றிலும் முஸ்லிம் தலைவர்கள் பலர் ஆட்சியில் அரசாங்கத்தின் முக்கியமான பங்காளிகளாக இருந்து வந்தபோதிலும் தமது சமூகத்திற்குச் செய்யாத பலவற்றை அம்மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துள்ளது. அரசாங்கத்துடனும் சரி, சர்வதேசத்திலும் சரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுக்களில் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுத்தே வருகிறது என்பதை முஸ்லிம் மக்கள் நன்கறிவர். இதனை முஸ்லிம் தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

3 comments:

  1. There are no specifics in Mr. Sampanthan,s reply and hope he will prove a fair politician.

    ReplyDelete
  2. சரி இதெல்லாம் ஏற்றுக்கொள்கிறோம். தமிழ் கூட்டமைப்பின் அண்மைய செயற்பாடுகள், முஸ்லிகளுக்கு அவர்கள் மீதுள்ள கடுமையான மனப் போக்கை தனித்தாளும் , நீங்கள் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக எதையுமே இதுவரை வெளிப்படையாக பேச வில்லை. அதற்கு தேவையான எந்த ஒரு ஆரம்ப கட்ட செயற்பாடாவது இன்னும் முன்னெடுக்க வில்லை. இப்போது கூட அமைச்சர் ரிஷாத் அவர்களின் பாராளமன்ற உரையை விமர்சிக்கிண்றீர்களே தவிர அவர் உரையில் பொதிந்துள்ள விடயம் பற்றி கருத்து சொல்ல மறுக்கின்றீர்கள்.
    உண்மையிலே தமிழ் பேசும் மக்கள் என்று எங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டால் ! எங்களுக்கும் சேர்த்துதான் நீங்கள் சர்வதேசத்திடம் பேசுகிறீர்கள் என்பது உண்மை என்றால் !! இனிமேலும் காலம் கடத்தாமல் எமது மக்களின் மீள் குடியேற்றத்தில் அதீத கவனம் செலுத்தி மிக விரைவாக அவர்களை அங்கு குடியமர்த்த முக்கிய தீர்மானம் எடுத்து அதற்க்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்ற வேண்டும். இதனை செய்ய நீங்கள் முன்வருவீர்கலானால் உங்களை முஸ்லிம் சமுகம் மிக உயர்வாக நோக்கும்.

    ReplyDelete
  3. நீங்கள் கூறுவதை எல்லாம் முஸ்லிம்கள் மீது கொண்ட அக்கறையின் காரணமாக செய்தீர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் கடந்த காலங்களில் அரசு எவ்வாறு தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குகிறோம் என்று கூறி ஒரு சிலதை செய்து காலத்தை கடத்தியதோ அதே போன்றதொரு நடவடிக்கைதான் நீங்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கையுமாகும். மனிதன் நடந்து செல்லும் பாதையில் புற்பூண்டுகள் முளைக்காது. சுமார் 25 வருடத்திற்கு மேல் நடமாட்டமின்றி காடாக மாறிப்போன முஸ்லிம்களின் நிலங்களை அவர்கள் சுத்தம் செய்த போது. தமிழ் மக்களை தூண்டி விட்டு ஆர்பாட்டம் செய்த உறுப்பினர்கள் உங்கள் கட்சியில் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதே நேரம் கௌரவா பா.உ. மாவை சேனாதிராஜா அவர்கள் பேசும் போது காணியையும் கல்வியையும் எம் சமூகத்தின் எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது எமது பொறுப்பாகும் என்று கூறினார். விரட்டப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை பற்றி உங்கள் கட்சியின் அதிகமான உறுப்பினர்கள் பேசுவதில்லை.

    ReplyDelete

Powered by Blogger.