Header Ads



தூசனம் பேசிய கோத்தாவுக்கு, பாடம் புகட்டிய விக்டர் ஐவன் (பகுதி 2 )

-நஜீப் பின் கபூர்-

-முந்திய தொடர்ச்சி-  பாகம் 1

யுத்தத்தின் பின்னர் சீனா நட்புடனும் மேற்கத்திய விரோதப் போக்குடனும் அரசு வழிநடாத்தப் பட்டுக் கொண்டிருந்தது. இது நாட்டைப் பெரும் இக்கட்டில் மாட்டி விடும் என்று நான் எழுதிக் கொண்டும் அவ்வப்போது ஜனாதிபதியுடன் பேசும்போது சுட்டிக்காட்டிக் கொண்டுமிருந்தேன்.

ஒரு நாள் நான் இலங்கையின் வெளியுறவு பற்றி எழுதி இருந்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதி எங்களுடைய வெளியுறவுக் கொள்கைதானே உங்களுக்குப் பிடிக்காதே? ஒரு நல்ல சம்பவத்தைச் சொல்கின்றேன் அதையாவது கேளுங்கள் என்று அதிசயமான ஒரு கதையை என்னிடத்தில் கூறினார்.

ஜனாதிபதியின் கதையின் படி முன்னாள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரின் ஆலோசனைப்படி பிரபல இராணுவ அதிகாரியை அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு அழைத்து, ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் விரோதமாக சாட்சி கூறும்படி கேட்டிருக்கின்றார்கள். அந்த அதிகாரி இதற்கு இணங்கினால் அவரது முழுக் குடும்பத்துக்கும் அமெரிக்காவில்போய் குடியேறுவதற்கான அனைத்து வசதிவாய்ப்புக்களையும் செய்வதாக அவருக்கு வாக்குறுதியும் வழங்கி இருக்கின்றார்கள். இந்தக் கதையை அந்த உயர் அதிகாரியே ஜனாதிபதியிடத்தில் சொல்லியும் இருக்கின்றார் என்பது கதை.!

அமெரிக்கா என்பது ஒரு புனிதமான நாடு அல்லாவிட்டாலும், முட்டாள்தனமாக, அதுவும் ஒரு அதிகாரியை அழைத்து இப்படியான ஒரு கோரிக்கையை விடுக்குமா என்ற விடயத்தில் எனக்குச் சந்தேகம் இருந்தது. ஜனாதிபதி இந்த கதையைச் சொல்கின்ற தினத்தில் மேற்குறிப்பிட்ட ரொபார்ட் பிளேக்  இங்கு வருகின்ற நாளுமாக அமைந்திருந்தது. ஜனாதிபதியின் இந்தக் கதையின் உண்மைத் தன்மையை கண்டறிய வேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. இது விடயத்தில் தேடிப் பார்த்த போது இந்தக் கதைக்கு நேர் மாற்றமான ஒரு கதை இதில் பொதிந்திருப்பதை என்னால் கண்டு கொள்ள முடிந்தது.

குறிப்பிட்ட இராணுவ அதிகாரி ரொபார்ட் பிளேக் இலங்கையில் அமெரிக்கத் தூதுவராக இருந்த போது ஒரு முறை அவரைப் போய் சந்தித்திருக்கின்றார். அப்போது இறுதிக் கட்ட யுத்தத்தின் கடைசி சில நாட்கள் நடந்த சம்பவங்கள் பற்றி அவரிடத்தில் விளக்கி இருக்கின்றார் பிரபல்யமான இராணுவ அதிகாரி. இந்த வாக்குமூலத்தை உடனடியாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் தூதுவர் பிளேக். இந்த இரகசியத் தகவலை விகீலீக்ஸ் இணையத்தளம் தனது இலட்சக்கணக்கான வாசகர்களுக்கு அப்போதே பகிர்ந்திருக்கின்றது. ஆனால் இதுபற்றி இலங்கை எதுவுமே அறிந்திருக்கவில்லை.

தனக்குத் தகவல் கொடுத்த விவகாரத்தை இலங்கை தெரிந்து கொண்டது.! இதனால் குறிப்பிட்ட இராணுவ அதிகாரிக்கு நெருக்கடிகள் ஏற்படும் என்ற காரணத்தால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிளேக் தூதரக அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டிருக்கின்றார். என்னிடம் கூறியதைப்போன்றே அந்த இராணுவ அதிகாரியின் கதையைப் பலரிடம் ஜனாதிபதி கூறி இருக்கின்றார். அதனால் இந்தக் கதை பிளேக்கிற்கும் தெரிய வந்தது. இங்கு வந்திருக்கின்ற அவர் நாடு திரும்புவதற்கு முன்னர் இந்தக் கதையின் உண்மைத் தன்மை அடங்கிய கேபல் பதிவின் ஒரு பிரதியை பாதுகாப்புச் செயலாளருக்கு கையளிக்க இருப்பதும் எனக்குத் தெரிய வந்தது.

இந்த நாடகத்தின் முக்கிய கட்டமாகக் கருதப்பட வேண்டியது அன்றைய இரவு எங்களது சந்திப்பாகும். அந்த இரவு முக்கியமான பத்திரிகை ஆசிரியர்களுக்கு இராச் சாப்பாட்டுக்காக ஜனாதிபதியால் அழைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது. சன்டே டைம்ஸ் ஆசிரியர் சிங்ஹ ரணதுங்ஹ, லங்காதீப ஆசிரியர் சிரி ரணசிங்ஹ, த ஐலண்ட் ஆசிரியர் பிரபாத் சகபந்து, அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்ஹ, மேலும் ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர் பந்துல ஜயசேக்கர ஆகியோருடன் ஜனாதிபதியும் அங்கு இருந்தார்.

சந்திப்பின் துவக்கத்திலேயே இன்று காலை என்னிடத்தில் குறிப்பிட்ட இராணுவ அதிகாரியின் கதையை அங்கும் ஜனாதிபதி உச்சாகத்தில் கூறிக் கொண்டிருந்தார். இந்தக் கதையின் உண்மைத் தன்மையைத் தெரிந்து வைத்திருந்த எனக்கு அங்கு பொறுமையாக இருக்க முடியவில்லை.

ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து எனக்குத் தெரிந்த தகவலை நான் அங்கு குறிப்பிட்டேன். உற்சாகத்தில் இருந்த ஜனாதிபதிக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அப்போது செயலாளர் லலித் வீரதுங்க ஐவன் கூறியதுதான் உண்மை! இது பற்றி பிளேக் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபேக்குக் கொடுத்த கேபல் பதிவின் பிரதி ஒன்றை இதோ அவர் உங்களுக்கு சற்று முன் அனுப்பி வைத்திருக்கின்றார் என்று அவர் ஜனாதிபதிக்கு நீட்ட அவர் ஆடிப்போய் நின்றார். அவரது முகம் கறுத்துப் போய்விட்டது. என்னுடன் இருந்த பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இது பேரதிர்ச்சியாக அமைந்தது. நாட்டின் முக்கிய தீர்மானங்களை இப்படிப்பட்ட அதிகாரிகளை நம்பி எடுத்திருப்பது எவ்வளவு பாரதூரமான ஒரு விடயம் என்பதற்கு இது ஒரு உதாரணம். 

தூசனம் பேசிய கோத்தா!

எனது அடுத்த தலைப்பு சன்டே லீடர் ஆசிரியர் ப்பிரடரிக்கா ஜென்ஸ் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாவிடம் தொலைபேசியில் விளக்கம் கேட்கப் போன இடத்தில் அவருக்குக் கடுமையான தூசன வார்த்தைகளால் ஏசியது தொடர்பானது. இந்த சம்பவம் நடந்த அடுத்தநாள் ஜனாதிபதி இராச் சாப்பாட்டுக்காக அவரது ஊடகச் செயலாளர் பந்துல ஜயசேக்கர மூலம் என்னை அழைத்திருந்தார். அதற்காக அவர் என்னைத் தொடர்பு கொண்டபோது சகோதர பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு ஜனாதிபதியின் சகோதரர்  தூசனத்தால் ஏசி இருக்கின்றபோது ஜனாதிபதி வழங்கும் விருந்துக்கு நான் எப்படி வர முடியும் என்று கூறி அழைப்பை நிராகரித்து விட்டேன்.

மீண்டும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஜனாதிபதியின்  ஊடகச் செயலாளர் பந்துல ஜயசேக்கர    நீங்கள் கூறியவற்றை நான் ஜனாதிபதியிடத்தில் கூறினேன். என்றாலும் உங்கள் வருகையை அவர் கட்டாயம் எதிர்பார்க்கின்றார் என்று குறிப்பிட்டார். சரி போவோம் போய் ஜனாதிபதியின் முகத்துக்கே சில கேள்விகளைக் கேட்கலாம் என்று அங்கு போனேன். முக்கியமான ஐந்து ஆறு பத்திரிகை ஆசிரியர்கள் அங்கு வந்திருந்தார்கள். அவர்களுடன் சர்ச்சைக்குரிய கோத்தாவும் அங்கு நான் அமர்ந்திருக்கின்ற ஆசனத்துக்கு அடுத்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

வழக்கமாக விருந்துகளுக்குச் செல்கின்ற இடங்களில் நான் பாவிப்பது காரம் கொண்ட மதுபான வகைகளையே! அன்று நான் கடுமையான போதைகளைப் உட்கொள்வதைத் தவிர்த்து மென்மையான வைனை நான் எடுப்பது கண்டு ஜனாதிபதி ஆச்சர்யம் அடைந்தார். தலையை தெளிவாக வைத்துக் கொள்வதற்காகவே நான் அன்று அவ்வாறு நடந்து கொண்டேன். அரை மணித்தியாலங்கள் கடந்திருக்கும் எந்த உறுப்படியான கதைகளும் அங்கு பேசப்பட வில்லை. கதையின் போக்கை மாற்ற வேண்டியது எனது தேவையாக  இருந்தது. நாட்டில் நடக்கின்ற முக்கியமான விடயங்களைப் பேசுவதற்காக நாங்கள் அழைக்கப்பட்டிருப்பதால் அந்தத் தலைப்புக்களைப் பற்றிபேசுவோம் என்று, ஜனாதிபதியிடத்தில் கேட்டுக் கொண்டேன் அப்படியா? விக்டரே ஆரம்பியுங்கள் என்றார் அவர்.

அப்போது உங்களுடைய சகோதரர் கோத்தா சன்டே லீடர் ஆசிரியருடன் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. அத்துடன் அவர் ஒரு பெண் அவரிடத்தில் போய் இப்படி எல்லாம் பேசி இருப்பது  வெட்கக் கேடான ஒரு விடயம் என்று, நான் அங்கு சுட்டிக் காட்டினேன். அந்த நேரத்தில் பாதுகாப்புச் செயலாளர் தனது பக்க நியாயங்கள் என்று எதை எதையோ எல்லாம் பேச முற்பட்டார். அப்போது நான் எனது கடுமையான விமர்சனங்களை அங்கு கொட்டிக் கொண்டிருந்தேன். அதனைத் தாங்கிக் கொள்ள முடியாததாலோ என்னவோ, கோத்தா வெளியே போய் இருந்து விட்டு வந்;தார்.

நான் இந்த விடயத்தை விமர்சனம் செய்து கொண்டிருந்த போது பக்கத்தில் இருந்த டெயிலி மிரர் ஆசிரியரிடம் கோத்தாவின் நடவடிக்கை பிழையானது என்று ஜனாதிபதி கூறுவது எனது காதுகளில் விழுந்தது. இது தவிர எந்த கலந்துரையாடல்களும் அங்கு இடம் பெறவில்லை. ஏனைய பத்திரிகை ஆசிரியர்கள் நடக்கின்ற விடயங்களை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் நான் சாப்பாட்டு மேசைக்குப் போனாலும் எனது மனநிலை சரியாக இருக்கவில்லை. சிறிய ஒரு சாப்பாட்டை எடுத்து விட்டு நான் அங்கிருந்து அவசரமாக வெளியேறிவிட்டேன்.

நான் அப்படி அவசரமாக அங்கிருந்து வெளியேறக் காரணம், நாம் இல்லாத இடத்தில் அவர்கள் என்னை சுதந்திரமாக விமர்சனம் செய்து கொள்ளட்டும் என்பதற்காகவாகும். யுத்த வெற்றிக்குப் பின்னர் மக்களை அச்சமூட்டுகின்ற ஒருவராகவே பாதுகாப்புச் செயலாளர் கோத்த நடந்து கொண்டார். அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முகத்திற்கே செய்ய வேண்டும் என்ற தேவை எனக்கு இருந்தது. எனது இந்த விமர்சனங்கள் நடக்கின்ற போது கோத்தா அரசியல் ரீதியில் பலமிக்கவராக இருந்த போதும் எந்த விதமான தொந்தரவுகளையும் அவர் எனக்குப் பண்ணவிலை என்பதனையும் இங்கு கூற வேண்டும்.

1 comment:

  1. Mahinda agreed with other reporters that Gota was wrong to shout at Sunday Leader
    editor in filth but what happened then ? Gota's behaviour towards the public after war
    victory was scary, says Ivan , but what did Mahinda do about it ? Mahinda and Gota
    went on until people toppled them .Why now about both good and bad side of Mahinda from Ivan ? All people have positive and negative sides , including Vele
    Suda who is sentenced to death !

    ReplyDelete

Powered by Blogger.