Header Ads



21 முஸ்லிம் M.P.கள் இருந்தும், ஜெனீவாவில் அநாதைகளாக இருக்கின்றோம்..!

(எஸ்.அஷ்ரப்கான்)

ஜெனீவாவில் பிரேரிக்கப்படுகின்ற விசாரணைப் பொறிமுறையில் முஸ்லிம்களுக்கான பாதிப்பும் உள்வாங்கப்பட்டு விசாரிக்கப்பட  வேண்டும். இதற்காக முஸ்லிம் தலைமைகள் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சட்ட ரீதியான செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுவிடயமாக அவர் மேலும் குறிப்பிடும்போது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தற்பொழுது இலங்கை விவகாரம் தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விவாதத்தின் கருப்பொருள் இறுதி யுத்தத்தின்போது பாரிய மனிதப் படுகொலை இடம்பெற்றிருக்கின்றது. குறிப்பாக படைத்தரப்பினரால் இக்குற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக விசாரணைகள் செய்யப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். எனவே இது தொடர்பான விசாரணை சர்வதேச நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழுவினாலா அல்லது கலப்பு நீதிமன்றத்தினாலா செய்யப்பட வேண்டும். அல்லது அது உள்ளக விசாரணையாக இருக்க வேண்டுமா ? என்பதாகும். இங்கு “விசாரணைகள்” என்ற சொல் குறித்து நிற்பது இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் பாதிப்புக்களையாகும்.

விடுதலைப் புலிகள் 30 வருடகாலம் யுத்தம் புரிந்திருக்கின்றார்கள். இதில் பாதிக்காலம் ஏனைய இயக்கங்களும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இந்த யுத்தம் அரசுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டி செய்யப்பட்ட யுத்தமாக கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில் இந்த யுத்தம் சம்மந்தப்பட்ட அனைத்து இயக்கங்களாலும் இரு முனைகளை நோக்கி செய்யப்பட்டிருக்கின்றது. அதில் ஒன்று அரச படைகளாகும். அடுத்தது முஸ்லிம்கள் என்ற ஒரு அப்பாவி சமூகமாகும். முஸ்லிம்கள் காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்கும்போது சுடப்பட்டார்கள். ஏறாவூர் “சதாம்” கிராமத்தில் கொல்லப்பட்டார்கள். அளிஞ்சப் பொத்தானையில் கொல்லப்பட்டார்கள். கல்முனைக்குடியில் கொல்லப்பட்டார்கள். சாய்ந்தமருது, மாளிகைக்காடு கிராமங்களில் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு பல இடங்களிலும் கொல்லப்பட்டார்கள். மட்டுமல்லாமல் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற பொலிஸ் நிலையங்களில் சரணடைந்த முஸ்லிம், சிங்கள பொலிஸ்காரர்களை சுட்டுக் கொன்றார்கள். இது சகல யுத்த விதிகளுக்கும் அப்பாற்பட்டது. இன்று கோரப்படுகின்ற விசாரணையில் ஒரு பிரதான அம்சம் யுத்தத்தில் சரணடைந்த புலிகளைக் கொன்றது என்பதாகும். ஆனால் சரணடைந்த பொலிஸ்காரர்களை புலிகள் கொன்றார்கள் என்ற மறுபக்கத்தைத்தான் இங்கு நாம் குறிப்பிடுகின்றோம். அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் காலத்தில் உருவாக்கப்பட்ட சீ.வி.எப். என்கின்ற பிரஜைகள் தொண்டர் படையில் சட்டபூர்வமாக சேர்க்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எப். போன்ற இயக்கங்களால் கொல்லப்பட்டார்கள். இவைகள் விசாரிக்கப்படக் கூடாதா ? இவைகள் மனிதப்படுகொலைகள் இல்லையா ? இவைகள் தொடர்பாக ஜெனீவா ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றது.  அதேபோன்று ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அது குற்றமில்லையா ?

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு சாராருக்கு எதிரான குற்றங்கள் மட்டும் விசாரிக்கப்பட்டு அதற்குரிய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பிரேரிக்கப்படுவது ஓரபட்சமானது. அடுத்த சாராருக்கு எதிரான குற்றங்களும் விசாரிக்கப்பட்டு அதன் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். இன்று தமிழ் பிரதிநிதிகள் ஜெனீவாவில் தங்கியிருந்து  தங்களுக்கு நியாயம் கோருகின்றார்கள். ஒவ்வொரு ஜெனீவா கூட்டத் தொடருக்கும் அவ்வாறு செல்லுகின்றார்கள். அதனால் அவர்கள் பக்கத் தரப்பு சர்வதேச கவனத்தை ஈர்க்கின்றது. ஆனால் மறுபுறத்தில் முஸ்லிம்கள் பக்கத் தரப்பைச் சொல்லுவதற்கு ஜெனீவாவில் யாருமில்லை. ஜெனீவாவைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம்கள் கேட்பார், பார்ப்பார் அற்ற அநாதைகள். ஆனால் தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்கு நிறையவே வீரப்புரிசர்கள் இருப்பார்கள்.

இன்று முஸ்லிம்களுக்கு 21 பாராளுமன்ற பிரதிநிதிகள் இருந்தும் முஸ்லிம்கள் ஜெனீவாவில் அநாதைகளாக இருக்கின்றோம். எனவே இன்றும் காலம் தாழ்ந்துவிடவில்லை. முஸ்லிம் தலைமைகள் அவசரமாக காரியத்தில் இறங்க வேண்டும். பிரேரிக்கப்படுகின்ற விசாரணைப் பொறிமுறை முஸ்லிம்களுக்கான பாதிப்பையும் உள்வாங்கத்தக்கதாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. அடைந்த காலங்களில் நடந்த உத்த மீரல்கள பற்றிய விசாரணைகள் முடிவடைந்து அதற்க்கான அறிக்கைகளும் தீர்மானங்களும் இப்போது வெளியிடப்படுகிறது.நாம் இப்போது போய் நமது தரப்பு வாதத்தை வைப்பதில் என்ன நடக்க போகின்றது.ஜெனிவா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தால் பல நாடுகளில் கடந்த காலங்களில் விசாரணை நடத்தப்பட்டது அப்போது நம் தரப்பில் யாரும் வாய் திறக்கவில்லை.அப்போது இருந்த அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்க வேண்டி மட்டும் ACJU போனிக்கே தவிர முஸ்லிம்களின் பிரச்சினை பற்றி பேசுவதற்கு மண்டையில் சரக்கு இல்லாமல் போய் விட்டது. இவ்வலவு காலமும் தேர்தல் வேலைகள் யார் யார் எந்த கட்சியில் சேர்வது என்ற ஓட்டப்போட்டியில் இருந்து களைப்பாறி விட்டு இப்பதான் சமுதாயம் என்ற பற்று ஏற்பட்டுள்ளது.ஒன்றை யோசிக்க வேண்டும் கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் நாம் ஜெனிவாவில் முறைப்பாடு செய்திருந்தால் இருந்த சூட்டோடு போய் இருக்கும்.இப்போது இருக்கும் அரசாங்கம் நல்லாச்சி என்ற பெயரை போட்டுக்கொண்டு சகல கட்சிகளையும் ஒன்றினத்துக்கொண்டு ஒரு சமாதான வழியில் சென்று கொண்டு இருக்கிறது.இந்த நேரத்தில் நம்முடைய காலம் தாழ்த்திய விடயங்களை முன்வைக்கும்போது சில பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.
    1.சிருபான்மைக்குரிய விடயங்களை கையாள்வதற்கு தமிழர்களுக்கு முஸ்லிம்களும் ,முஸ்லிம்களுக்கு தமிழர்களும் முட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
    2.இந்த விடயங்களை தற்போது ஜெனிவா கொண்டு செல்ல நம்முடைய முஸ்லிம் கட்சிகள் ஓன்று படுமா? அதிலும் ஓன்று தண்ணிக்கும் மற்றொன்று கரைக்கும் இழுக்கும்.
    3.இப்போதைய நாட்டின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப்போருத்த வரையில் முஸ்லிம்கள் ஜெனிவா போவதை முற்றாக விரும்பாது.
    இதில் உண்மையாக நாம் சந்தர்ப்பத்தை தவர விட்டு விட்டோம் என்பது மட்டும் உண்மை.

    ReplyDelete
  2. ஜெனீவாவில் முஸ்லீங்களது பிரச்சினையை ஆறுதலாக பிறகு விவாதிக்கலாம்.முதல் உங்களுக்கு தலைவர் செய்த துரோகத்தை ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் அவசரமாக விவாதத்து எடுத்து உங்கள் உரிமையை வென்றெடுக்க வேண்டும் சார்

    ReplyDelete

Powered by Blogger.