வெளிநாட்டுக்கு தனது மகனை கூட்டிச்சென்றமை, மைத்திரிக்கு எதிராக கடும் குற்றச்சாட்டு
மஹிந்த ராஜபக்ச காலத்தில் நாமல் ராஜபக்சவின் அரசியல் தலையீடு போன்று மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் தஹம் சிறிசேனவின் தலையீடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது புதல்வர் நாமல் ராஜபக்சவை இராஜதந்திர விவகாரங்களில் உடன் அழைத்துச் சென்றது போன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரியும் தனது புதல்வர் தஹம் சிறிசேனவை மெதுமெதுவாக அரசியலுக்குள் இழுத்து வருகின்றார்.
ஜனாதிபதியின் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கான விஜயத்தின் போது தஹம் சிறிசேனவும் இணைந்து கொண்டிருந்ததுடன், இராஜதந்திர அந்தஸ்துடன் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்விலும் அவர் கலந்து கொண்டிருந்தார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானது முதல் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எந்தவிதமான இராஜதந்திர அந்தஸ்தும் இல்லாத தஹம் சிறிசேன எவ்வாறு ஐக்கிய நாடுகள் அமர்வில் கலந்துகொள்ள முடியும்? சொந்தப்பணத்தில் தான் அவர் அமெரிக்கா சென்றுள்ளாரா என்பன போன்ற கேள்விகளும் சமூக வலைத்தளங்களின் ஊடாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி மைத்திரி ஐக்கிய நாடுகள் சபைக்கு மகனையும் அழைத்துச்சென்றுள்ளார்!
இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகளின் 70ஆவது பொதுஅமர்வில் பங்கேற்றுள்ளார். இது அவரின் முதலாவது ஐக்கிய நாடுகள் பொதுஅமர்வாக கருதப்படுகிறது.
இந்தநிலையில் அவர், இந்த அமர்வுக்கு தமது மகன் தஹாம் சிறிசேனவையும் இணைத்துக்கொண்டமை விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் காட்டப்பட்ட குடும்ப அரசியல் பக்கசார்பு என்பவற்றை ஒழிக்கப்போவதாக தெரிவித்த மைத்திரிபால தமது மகனை நியூயோர்க் விஜயத்தில் இணைத்துக்கொண்டதுடன் பொது அமர்விலும் பங்கேற்க செய்துள்ளார்.
அத்துடன் நேற்று இரவு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதும் தஹாம் இலங்கையின் சார்பில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரியிறுப்பாளர்களின் பணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பம் வீணடித்ததாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது இது தற்போதைய ஜனாதிபதிக்கும் பொருந்தும் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்து முடிவான கருத்துகளைத் தெரிவிப்பது அவசர ரீதியானது. ஜனாதிபதியின் மனைவியை அழைத்துச் செல்வதும் கூட இராஜதந்திர ரீதியாக தேவையற்றதுதான். ஆயினும் சம்பிரதாய பூர்வமானது.
ReplyDeleteஇராஜதந்திர ரீதியான பயணத்தின் போது தனது மகனை அழைத்துச் சென்றதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே இப்பொழுதே முடிவான கருத்தை வெளியிடுவது விவேகமற்றது. இன்னும் சில காலம் பார்த்திருப்போம்.