மஹிந்த செய்த அதே தவறினை, இந்த அரசாங்கமும் செய்வது முட்டாள்தனமானது - சம்பிக்க
தேவையற்ற வகையில் சர்வதேச தரப்பிடம் வாக்குறுதிகளை கொடுத்து மஹிந்த செய்த அதே தவறினை இந்த அரசாங்கமும் செய்கின்றது. அமெரிக்காவின் இந்த தீர்மான வரைவை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக கூறியிருப்பது சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொண்டமைக்கு சமமானதாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சர்வதேச மட்டத்தில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை தெரிவித்தும் முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மான வரைவுக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாக தெரிவித்துள்ள நிலையில் அது இலங்கையின் உள்ளக செயற்பாடுகளை பாதிக்காதா என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணை ஒன்று அவசியம். இலங்கையின் இராணுவத்தை நியாயப்படுத்தவும் நாட்டின் மீதான அவப்பெயரை நீக்கவும் இந்த விசாரணையை நடத்தவேண்டும். ஆனால் இந்த விசாரணைகள் உள்ளக பொறிமுறையாக அமைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதை வலியுறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பதை தொடர்ச்சியாக நாம் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளினால் கொண்டுவரப்பட்டுள்ள வரைவுத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளமை முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது.
அவர்களது கோரிக்கைகளும் பரிந்துரைகளும் சர்வதேச தலையீட்டை முழுமையாக ஏற்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளது. அதனால் இலங்கை அரசாங்கத்தினால் சுயாதீனமாக செயற்பட முடியாது. இலங்கையில் உள்ளக பொறிமுறைகளை பலப்படுத்தும் வகையில் இலங்கையின் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருந்தோம். சர்வதேச விவகாரங்களை கையாளும் விடயம் பிரதமருக்கு நன்றாகவே தெரிந்தும் கடந்த கால தவறுகளை இப்போதும் செய்வதானது சிக்கல்களையே ஏற்படுத்தும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதே தவறுகளை செய்தே நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தினார். இலங்கை விவகாரங்களில் தேவையற்ற வாக்குறுதிகளை சர்வதேச தரப்பிடம் வழங்கியமையே இன்றுவரை நாம் அழுத்தங்களை எதிர்கொள்ள காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறான நிலையில் இந்த அரசாங்கமும் தேவையற்ற வாக்குறுதிகளை சர்வதேசத்திடம் வழங்கி மீண்டும் அழுத்தங்களை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பது முட்டாள்தனமான செயற்பாடாகும். ஆகவே இப்போது நாம் அமெரிக்காவின் தீர்மான வரைவுக்கு இலங்கை இணை அனுசரணை வழங்குவதென்று தீர்மானித்திருப்பது இலங்கையை சிக்கலில் உட்படுத்தும் செயற்பாடாகும் என்றார்.

Post a Comment