ஆப்பிள் போனுக்காக டாக்டரை கொலைசெய்த எஞ்சினியரிங் மாணவன்
-சென்னை-
பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சேசு (35). இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சத்யா (32) பெண் டாக்டர். ஜெயங்கொண்டான் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சத்யா, மருத்துவ பட்ட மேற்படிப்பில் மகப்பேறு படிக்க விரும்பினார். இதனை தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எம்எஸ் படிப்பில் சேர்ந்தார். கீழ்ப்பாக்கம் டெயிலர்ஸ் ரோடு அருகில் உள்ள கும்மாளம்மன் ரோட்டில் உள்ள வீட்டில் 2வது மாடியில் அறையெடுத்து தங்கியிருந்து படித்து வந்தார். அவருடன் அதே கல்லூரியில் எம்டி 2ம் ஆண்டு படிக்கும் மாணவியான சங்கீதாவும் தங்கியிருந்தார். கடந்த 19ம் தேதியன்று சத்யா இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அவரது அறையில் தங்கியிருக்கு சங்கீதா அடுத்த நாள் 20ம் தேதி பகல் பணிக்கு சென்றுவிட்டார்.
மாலை 3.30 மணியளவில் சங்கீதா சாப்பிடுவதற்காக அறைக்கு வந்தார். அப்போது சத்யா படுக்கையறையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து சங்கீதா கீழ்ப்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடம் வந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது ஈகா தியேட்டர் வரை ஓடி சென்று நின்றுவிட்டது. தடய அறிவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விரல் ரேகைகளை பதிவு செய்யப்பட்டது. கொலையாளியை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.
பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. சத்யா தங்கியிருந்த விட்டின் முதல் மாடியில் தங்கியிருந்த திரிபுரா மாநிலம் அகர்தாலாவை சேர்ந்த டாக்டர் ஒருவரிடமும், அவரது சகோதரர் மதுரவாயலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர் அரிந்தம் (22) ஆகியோரிடமும் விசாரணை நடைபெற்றது. சத்யாவின் அறையில் தங்கியிருந்த சங்கீதா, வீட்டு உரிமையாளரின் மகன்கள், எதிர்வீட்டு வாலிபர், கட்டிட தொழிலாளர்களிடம் விசாரணை நடைபெற்றது. அவர்களது கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அந்த ரேகைகளுடன் வீட்டில் பதிவாகியுள்ள ரேகைகள் சேர்த்து பார்க்கப்பட்டது. இதில் இன்ஜினியரிங் மாணவர் அரிந்தத்தின் கைரேகை ஒத்து போனதை போலீசார் கண்டு பிடித்தனர்.
அதை தொடர்ந்து தலைமறைவாக இருந்த அரிந்தமை போலீசார் தேடினர். இந்நிலையில், இன்று அதிகாலை சென்னையில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் தங்கியிருந்த போது போலீசார் அவனை பிடித்து விசாரணை நடத்தினார். இதில், கொலை குறித்து திடுக்கிடும் ரகசியங்களை அவர் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது:
நான் தங்கியிருந்த வீட்டில் இரண்டாவது மாடியில் தங்கியிருந்த சத்யாவிடம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் போன் இருந்தது. அந்த போனை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பல தடவை அவரது போனை திருட முயன்றேன் ஆனால் முடியவில்லை. எனவே, அதற்கான தருணத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன். இந்நிலையில், கடந்த 20ம் தேதியன்று சத்யா இரவு பணி முடித்துவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது, அவரது அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து செல்போனை திருடினேன். அந்த நேரம் பார்த்து சத்யா விழித்துக்கொண்டார்.
என்னிடம் இருந்த செல்பேனை பிடுங்க முயன்றார். நான் அவரை பிடித்து தள்ளினேன். அதன்பிறகு போனை எடுத்து கொண்டு புறப்பட தயாரானேன். ஆனால், போலீசிடம் சொல்லிவிடுவாரோ என்று பயந்து அவரை தீர்த்துக்கட்ட முயற்சித்தேன். உடனே அங்கு கிடந்த காப்பர் ஒயரை எடுத்து சத்யாவின் கழுத்தை இறுக்கினேன். அவர் தப்பிவிட கூடாது என்பதற்காக சமையல் அறையில் கிடந்த காய்கறி நறுக்க பயன்படுத்தும் கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தி கொலை செய்தேன். அவரின் கதை முடிந்ததை உறுதி செய்து விட்டு அங்கிருந்த கழிவறை சென்று என்மீது இருந்த ரத்த கரையை கழுவினேன். பின்னர் தரை தளம் வந்து அங்கிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டேன். இந்நிலையில், போலீசார் என்னை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர் கூறினார். செல்போனுக்காக நடைபெற்ற கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment