மகிந்தவின் இறுதி நம்பிக்கையும் தவிடுபொடி, இறுதியில் மைத்திரியிடம் சரணாகதி
-நஜீப் பின் கபூர்-
நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக உள் நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் நாட்டுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கின்றது. அவை அப்படி இருக்க இப்போது நாட்டில் தோன்றி இருக்கின்ற புதிய அரசியல் சூழ்நிலைகள் என்ன என்பதனை ஒரு முறை பார்ப்போம்.
மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி நாட்டு நலன் கருதி சகல கட்சிகளும் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுப்பது நாட்டுக்கு ஆரோக்கிய மாக இருக்கும் என்று முன்வைத்த கோரிக்கையை அந்தக் கட்சி ஏகமனதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றது என்று அந்தக் கட்சியின் அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தினாலும், அவர்கள் சொல்கின்ற படி அந்த விடயத்தை முன் னெடுப்பதில் நிறையவே முரண்;பாடுகள் தோன்றும் என்று தெரிகின்றது.
சுதந்திரக் கட்சியின் இந்த முடிவை வன்மையாக கண்டிக்கின்ற விமல் வீரவன்ச இது சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் அடகு வைக்கின்ற ஒரு திட்டம். நாம் இதனை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அடித்துக் கூறுவதுடன் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாம் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியாக இயங்குவோம் என்று எச்சரித்திருக்கின்றார். இதற்குப் பதில் கொடுக்கின்ற எஸ்.பி. திசாநாயக்க கட்சி எடுத்திருக்கின்ற இந்த முடிவை விமர்சிப்பவர்களையும் அதனை ஏற்றுக் கொள்ளாதவர்களையும் நாம் கட்சியில் இருந்து தூக்கி எறிந்து விடுவோம் என்று எச்சரித்திருக்கின்றார். இதனை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரணதுங்ஹவும் அங்கீகரித்திருக்கின்றார்.
எனவே தேசிய அரசு அமைக்கின்ற விவகாரத்தில் அந்தக் கட்சிக்குள் ஒரு தீர்க்கமான முடிவு இல்லை என்று தெரிகின்றது. மைத்திரி தலைமையில் சுதந்திரக் கட்சியில் தேசிய அரசு பற்றித் தீர்மானம் கொண்டுவரப்படுகின்ற நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டி போட்டு வெற்றி பெற்ற 60 பேர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி கொடுக்கப்பட வேண்டும் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
இந்தக் கையெழுத்து விவகாரம் தொடர்பில் ராஜபக்ஷவிடத்தில் கேள்வி எழுப்பினால் அது பற்றி எனக்குத் தெரியாது ஆளை விடுங்கள் நான் பின்வரிசை உறுப்பினராக பாராளு மன்றத்தில் அமர்ந்திருக்கின்றேன் என்பது அவர் தரப்புப் பதிலாக இருக்கின்றது. முன்னர் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி கொடுக்க வேண்டும் என்று கோஷம் போட்டவர்கள்தான் இன்று அவருக்கு பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சி தலைமைப் பதவி கொடுக்க வேண்டும் என்று ஒப்பாறி வைக்க துவங்கி இருக்கின்றார்கள்.
எதிர்க் கட்சித் தலைவர் பதவி எனக்கு வேண்டாம் ஆளை விடுங்கள் என்று ஏன் பதவிக்கு ஓடித்திரிந்த முன்னாள் பெரியவர் இப்போது கூறுகின்றார்.? அவர் இந்தத் தேர்தலில் நிற்பதற்கு முக்கிய காரணம் பிரதமராக வந்தால் தனக்கும் தனது மனைவி பிள்ளைகள் உடன் பிறப்புக்களுக்குள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை.
இன்று அந்த நம்பிக்கையும் தகர்ந்து போய் இருக்கின்ற நிலையில் இப்போது அவருக்குள்ள ஒரே வழி ஜனாதிபதி பிரதமர் போன்றவர்களிடத்தில் சரணாகதி அடைந்து எப்படியும் இந்த விடயத்தில் தனக்கு ஒரு சலுகை வேண்டும் என்ற நிலையில் காரியத்தைச் சாதிப்பதுதான். இந்த விவகாரம் தொடர்பாக அவர் பலமுறை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஜனாதிபதியைத் தொடர்பு கொண்டிருக்கிறார் என்று ஊடகங்களில் பேசப்படுகின்றது.
இந்த விடயத்தை பேசுவதற்கு இப்போது காலம் கடந்து விட்டது இப்போது தன்னால் எதுவும் பண்ண முடியாது. இந்த விடயத்தை பேச வேண்டி இருந்த நேரம் பொதுத் தேர்தலுக்கு முந்திய காலகட்டம் அன்று உங்களுக்கு சில ஆலோசனைகளைச் சொன்னேன் நீங்கள் அதனை நிராகரித்து விட்டீர்கள் இப்போது எதுவும் பண்ண முடியாது வேறு ஏதாவது விவகாரங்களைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் மட்டும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் சட்டம் நீதி சுதந்திரமாக இயங்குவதைத் தான் நான் ஜனாதிபதி என்றவகையில் எதிர்பார்க்கின்றேன் என்று மனிதன் மஹிந்த பேசவருகின்ற விடயங்களுக்கு ஆப்பு வைத்திருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் தோல்வி அடைந்தவர்களுக்கு தேசியப் பட்டியல் வழங்குவதில்லை என்று ரணில் சட்டம் போட்டு அதனை நடைமுறைப்படுத்தியும் இருக்கின்றார் என்று ஊடகங்களில் பேசப்பட்டாலும் அதில் நூறுவீதம் உண்மையில்லை என்பது எமது வாதம். புத்தளத்தில் போட்டியிட்டுத் தோற்றுப்போன நபவி என்பவர் அப்படியானால் எப்படித் தேசிய பட்டியலில் பாரளுமன்ற பிரவேசம் பெற்றிருக்கின்றார் என்று கேட்கத் தோன்றுகின்றது. இதற்கு அவர்கள் ஒரு பதில் சொல்லக் கூடும். இது கூட்டணிக் கட்சியின் கோரிக்கை அதனால்தான் அப்படி நடந்திருக்கின்றது என்பதாக இருக்கும். எனவேதான் நூறு வீதம் உண்மையில்லாத ஒரு விடயமாக நாம் இதனைக் குறிப்பிடுகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சி தேசியப் பட்டியல் விவகாரம் அப்படி இருக்க மக்கள் ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் முற்றிலும் மைத்திரியின் விருப்பத்திற்கு எற்றவிதமாக தேர்தல் ஆணையாளருக்குப் போய்ச் சேர்ந்த கடிதத்தில் தெரிகின்றது. அந்தக் கட்சியின் கூட்டணிகளுக்கு ஒரு ஆசனம் கூட வழங்கப்படவில்லை. ஒரு கட்டத்தில் மைத்திரி தரப்புக்கு ஆறு மஹிந்த தரப்புக்கு ஆறு என்று பேரம் பேச மஹிந்த தரப்பினர் தூது அனுப்பிய போது அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று நிலமை இருந்தது.
மக்கள் ஐக்கிய முன்னணி தேசியப் பட்டியல் சமர்ப்பிக்கப் பட்டதில் விநோதம் என்னவென்றால் இந்தப் பட்டியலைச் சமர்ப்பிப்பதற்குத் தடை உத்தரவு கொடுக்கப்பட்ட சுசில் பிரேம்ஜயந் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு முற்றிலும் இசைவாக இந்த பட்டியலை தயாரித்து தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி இருக்கின்றார். இந்த விடயத்தில் மஹிந்த தரப்பினர் பெரும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கும் ஆளாகி இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
தனது தேவைக்கு ஏற்றவிதமாக சுதந்திரக் கட்சியின் தேர்தல் இயந்திரத்தை முன்னெடுத்துச் சென்ற விமல் வீரவன்ச மஹிந்தவின் அழிவில் அந்த அணி வாழ்வு பெற்றிருக்கின்றது. அந்த அணி நிறுத்திய ஐந்து பேர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களில் சுசில் பிரேம்ஜயந்தை தவிர ஏனைய அனைவரும் மாற்றுக் கட்சிக்காரர்கள் அல்லது கட்சி தாவிகள் என்பது எமது பார்வையில் தெரிய வந்திருக்கின்றது. விமல், கம்மன்பில, தினேஷ், பந்துல, மேஹன் லால், லொகுகே, எனவே கொழும்பில் முற்று முழுதாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுதந்திரக் கட்சி மண் கவ்வி இருக்கின்றது. எதிர் வரும் நாட்களில் இது பற்றி அந்தக் கட்சியில் விமர்சனங்கள் எழுப்பப்படக்கூடும்.
தங்களுக்கு 117க்கு குறையாத ஆசனங்கள் கிடக்கும். எமது வெற்றியை எவரும் தடுக்க முடியாது. அத்துடன் தான் தோற்றுப்போனதும் உடனடியாக மெதமூலனைக்குச் சென்றது போல் எனக்குப் பிரதமர் பதவி மக்கள் விருப்பப்படி வந்து சேரும் போது அதனை தடுக்கின்ற முயற்சியில் ஜனாதிபதி இறங்கினால் கடும் விளைவுகள் வரும் என்று முன்னாள் பெரியவரும் அவர் கையாட்களும் ஜனாதிபதி மைத்திரியை எச்சரிக்கை செய்திருந்தனர்.
மைத்திரிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த 62 இலட்சம் வாக்குகளும் இந்தத் தேர்தலில் வேறு வேறு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்ட பணம் போல் பாதுகாப்பாக இருக்கின்றது. இது ஐ.தே.க., ஜேவிபி, கூட்டமைப்பு என்ற வரவில் இருக்கின்றது. ஆனால் ராஜபக்ஷக்களில் 58 இலட்சம் வாக்குகளுக்கு என்ன நடந்தது என்று நாம் கேட்கத் தோன்றுகின்றது. அது ஏறக்குறைய 10 இலட்சத்தால் குறைந்து 4732669 என்று வந்து நிற்கின்றது.
இப்போது ராஜபக்ஷக்களின் முழுக் கவனமும் தம்மையும் தமது குடும்பத்தினருக்கும் எதிராக இருக்கின்ற மோசடி, பணக் கொள்ளை, படுகொலை போன்ற விடயங்களில் இருந்து எப்படித் தப்பிப் பிழைப்பது என்பதில்தான் இருக்கின்றது. எனவே தான் அதிகாரத்தில் இருந்த நேரத்தில் வம்பர்களாக வேலை பார்த்தவர்கள் இப்போது அடங்கிப்போய் இருக்கின்றார்கள்.
சந்தர்ப்பவாத அரசியல் செய்தவர்கள் எதுவும் கைகூடாத நிலையில் இன்று பதவிகள் கிடைக்காதவர்களையும் சுதந்திரக் கட்சியில் ஓரம் கட்டப்பட்டவர்களையும் சேர்த்து பாராளு மன்றத்தில் எதிரணிக்குத் தலைமைத்துவம் கொடுக்கலாம் என்று திட்டங்களை வடிவமைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. அவர்களின் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் பெரும்பாலும் தினேஷ் குனவர்தனவே அந்தத் தரப்புக்குத் தலைமைத்துவம் கொடுப்பார் என்பது எமது கணிப்பு.
இப்போது தேர்தல் காலங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் இரு கோஷ்டிகள் இருப்பதாக பகிரங்கமாகப் பேசியும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் குழப்பிக் கொண்டிருந்ததாலேயே கட்சிக்கு இந்தத் தோல்வி வந்தது என்று இப்போது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதுடன் இந்தத் தோல்விக்கு விமல் வீரவன்ச, பிரசன்ன ரனதுங்ஹ, உதய கம்மன்பில, தினேஷ், வாசுதேவ நாணயக்கார பொறுப்பு ஏற்கவேண்டும் என்று குற்றம் சாட்டப்படுகின்றது.
அமைச்சரவையை நியமிக்கின்ற போது நிச்சயம் ஒரு சலசலப்பு வரும் அதனை வைத்து ஒரு குழப்பத்தை பண்ணலாம் என்று யோசிப்பார்கள். இவ்வாறான நெருக்கடிகளை ஜனாதிபதியும் பிரதமரும் சமாளிக்கின்ற அணுகுமுறையில்தான் தேசிய அரசின் ஆயுள் தங்கி இருக்கின்றது.

இந்த தேசிய அரசாங்கத்தில் ரணில் மைத்திரி கூட்டு எந்த வித தடங்கலும் இல்லாமல் நல்லபடியாகவே நடக்கும். ஆனால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முபடும் போதுதான் கச்சேரி குழம்ப சந்தர்பம் உள்ளது. இதை ரணிலும் மைத்திரியும் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் எதிர்கால அரசியல் தங்கி உள்ளது. எது எப்படியோ ரணில் மைத்திரி கூட்டு, நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜனநாயகம், தொகுதி வாரி தேர்தல், ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் மட்டுபடுத்தபட்டு பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டு, பொருளாதாரம் போன்ற விடயங்கள் உறுதிப்படுத்த பிற்பாடுதான் இந்த கூட்டு தனிக்கட்சி அரசியலை பற்றி சிந்திக்கும். அதேநேரம் ரணிலும் மைத்திரியும் அரசியலில் இருந்து ஓய்வும் எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஇந்த தேசிய அரசாங்கத்தில் ரணில் மைத்திரி கூட்டு எந்த வித தடங்கலும் இல்லாமல் நல்லபடியாகவே நடக்கும். ஆனால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முபடும் போதுதான் கச்சேரி குழம்ப சந்தர்பம் உள்ளது. இதை ரணிலும் மைத்திரியும் எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்துத்தான் எதிர்கால அரசியல் தங்கி உள்ளது. எது எப்படியோ ரணில் மைத்திரி கூட்டு, நாட்டில் சட்டம் ஒழுங்கு ஜனநாயகம், தொகுதி வாரி தேர்தல், ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரம் மட்டுபடுத்தபட்டு பாராளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டு, பொருளாதாரம் போன்ற விடயங்கள் உறுதிப்படுத்த பிற்பாடுதான் இந்த கூட்டு தனிக்கட்சி அரசியலை பற்றி சிந்திக்கும். அதேநேரம் ரணிலும் மைத்திரியும் அரசியலில் இருந்து ஓய்வும் எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ReplyDelete