அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், தேசியப் பட்டியல் - ஒரு பார்வை
-எஸ் ஹமீத்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி தனது தேசியப்பட்டியல் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்றைத் தன்னோடு இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்தது. தேர்தலுக்கு முன்னம் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனம் தருவதாகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் உடன்பாடு காணப்பட்டிருந்த போதிலும் ஒரு ஆசனம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.
வன்னி, திருகோணமலை,அனுராதபுரம்,மட்டக்களப்பு,அம்பாறை, குருணாகல்,புத்தளம் ஆகிய ஏழு மாவட்டங்களில் அம்பாறை தவிர்ந்த ஆறு மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் தனது ஆதரவாளர்களான வேட்பாளர்களைக் களமிறக்கிய அஇமகா அம்பாறையில் தனது கட்சியின் மயில் சின்னத்தில் களமிறங்கியது. இதில் வன்னி, அனுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் தலா ஒரு பாராளுமன்ற ஆசனத்தை வென்றெடுத்து, வன்னி உட்பட ஏனைய மூன்று மாவட்டங்களில் மிகச் சொற்ப அளவு வாக்கு வித்தியாசத்தில் ஒவ்வொரு ஆசனத்தை இழந்திருக்கிறது.
ஏழு மாவட்டங்களில் எட்டு ஆசனங்களையும் அதன் மூலம் இரண்டு தேசியப் பட்டியல்களையும் பெற்றுக் கொள்வது என்ற நம்பிக்கையுடனான இலக்கில் தேர்தலை எதிர் கொண்ட அஇமகா, துரதிருஷ்ட வசமாக ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் உட்பட மொத்தம் ஐந்து ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இரண்டை எதிர்பார்த்து ஒன்று மட்டுமே கிடைத்த இந்தத் தேசியப் பட்டியல் ஆசனத்தைத் தற்போது புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு ஏறத்தாழ 1100 வாக்குகளால் பிரதிநிதித்துவத்தை இழந்த நவவி ஹாஜியாருக்கு அஇமகா வழங்கியிருக்கிறது. இதனால் அஇமகா வின் பொதுச் செயலாளர் Y.L.S. ஹமீட் அதிருப்தியடைந்து, கட்சித் தலைவர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி போன்றவற்றைப் பகிரங்க தளத்தில் விமர்சிக்கத் தொடங்கினார். கட்சித் தலைவரான ரிசாத் பதியுதீனைக் கட்சியிலிருந்து நீக்கி விட்டதாகவும் இவரது பெயரில் சில இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகின.
தேர்தலின் முன்னர் தனக்குத் தேசியப் பட்டியல் ஆசனமொன்றைத் தருவதாக ரிசாத் வாக்களித்திருந்தார் என்றும், ஆனால் கட்சிக்காகப் பாடுபட்ட தனக்குத் தராமல் புத்தளம் நவவிக்குக் கொடுத்து விட்டாரென்றும், தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் Y.L.S. ஹமீட் தனது மனக் குமுறலைப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் அஇமகா சார்பில் போட்டியிட்ட கலீலுர் ரஹ்மானைத் தவிர ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் தலைவரின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நவவியின் நியமனத்தை அங்கீகரித்திருக்கின்றனர்.
இன்று (22.09.2015) காலை கொழும்பில் அஇமகா நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கட்சியின் தலைவரான ரிசாத் பதியுதீன் செயலாளரான Y.L.S. ஹமீட் அவர்களைத் தனது அதிகாரத்தைப் பாவித்து செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கி விட்டதாகவும் பிரதி செயலாளராக டாக்டர். ஷாஜஹான் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார். இம் மாநாட்டில் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டிருக்கும் இஷாக் ஹாஜியார் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உட்பட மற்றும் பலரோடு நவவியும் கலந்து கொண்டிருந்தார்.
கையில் ஒரேயொரு தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டு அதனை யாருக்குக் கொடுக்க வேண்டுமென்பதில் ஒரு கட்சிக்கும் அதன் தலைமைத்துவத்துக்கும் இருக்கும் அழுத்தம் எப்படியானதென்பதை விளங்கப்படுத்தத் தேவையில்லை.இதில் கட்சி நலனை மட்டுமல்லாது சமூக நலனையும் கருத்தில் கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. இந்த விடயத்தில் கட்சியின் முதுகெலும்பான செயலாளரின் விட்டுக் கொடுப்பும் புரிந்துணர்வும் மிக அவசியமானது.
தேசியப் பட்டியல் எம்.பி.பதவியை எதிர்பார்த்துத்தான் கட்சியொன்றின் செயலாளர் செயற்பட்டிருப்பாராயின், கட்சியின் மீதும் அதன் கொள்கையின் மீதுமான அவரது பிடிப்பும், அவரது உணர்வும் கேள்விக்குள்ளாகிவிடும். தனக்குத் தேசியப் பட்டியல் கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகக் கட்சியையும் தலைமைத்துவத்தையும் மனம் போன போக்கில் யார் விமர்சனம் செய்தாலும் அது அவர்களது கொள்கையின் மீது அவரே காறி உமிழ்வதைப் போன்றதற்குச் சமனாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். பதவி கிடைக்கவில்லை என்பதற்காகத் தானே செயலாளராக இருந்த ஒரு கட்சியைக் காட்டிக் கொடுத்தல் என்பது, தான் தனக்காக மட்டும் வாழும் சுயநலவாதியே தவிர, கட்சியின் மூலமோ, கொள்கைகளின் மூலமோ சமூகத்துக்குச் சேவை செய்ய எண்ணும் பொதுநலவாதி அல்ல என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுவதாக அமைந்து விடும்.
சகோ. ஹமீட் அவர்களின் செயற்பாடுகள் மிகுந்த வருத்தத்தையே தருகின்றன. பல சவால்களுக்கு மத்தியில் கட்சியை வளர்ப்பதற்கும் அதனைக் கட்டிக் காப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட அவர், ஒரு தேசியப் பட்டியல் விடயத்தில் முரண்படுவதும், முரண்டு பிடிப்பதும் அழகல்ல.
ஒப்பீட்டளவில் நோக்குமிடத்து, அஇமகா போட்டியிட்ட அனைத்து மாவட்டங்களிலும், புத்தளம் மாவட்டத்திற்கு இந்தத் தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டிருப்பதே பொருத்தமானது. ஏனெனில், பல வருடங்களாக ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஏங்கும் பிரதேசம் அது. வட மாகாணத்திலிருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பல்லாயிரம் முஸ்லிம் மக்களை இன்றுவரை அரவணைத்துத் தாங்கிக் கொண்டிருக்கும் மாவட்டம் அது. தமது அனைத்து வளங்களையும் முஸ்லிம் அகதிகளுடன் பகிர்ந்து கொண்டு, இன்னல்களுடன் போராடும் மாவட்டம் அது. அங்கு கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவைகளை விட, சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையே மேலோங்கியிருக்கிறது. எனவே, புத்தளத்திற்குத் தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டதை சமூகப் பற்றுக் கொண்ட ஒரு முஸ்லிம் என்ற அடிப்படையில் நாம் ஆதரிக்க வேண்டுமேயொழிய, சுயநலமாகச் சிந்தித்துக் குழப்பங்களை உருவாக்கக் கூடாது.
எனவே, தூரநோக்குடனும் பொறுமையுடனும் இந்த விடயத்தை அணுகி, சமூக ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் நாம் உறுதி செய்து கொள்வோமாக!

நவவி அவர்களின் நியமனம் என்ற விடயத்தை தாண்டி, புத்தளம் மக்களின் ஒற்றுமையில் பிளவையும் ஏற்படுத்தி பல வருடங்கள் எம்பி பதவி கிடைக்காமல் போனதுக்கான முழு பொறுப்பும் ரிசாத் அவர்களின் சுயநல அரசியலே காரணம். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வது என்பது ரிசாத் அவர்களின் அரசியல் பயணம் சான்று பகரும். மொத்தத்தில் ரிசாத் அவர்களின் தனிப்பட்ட அரசியல் முன்னெடுப்புக்கு ஒரு கட்சியை முன்னெடுத்து செல்கிறார் என்பதுதான் உண்மை. இதற்கு தலைவர் அஸ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்த ஹமீத் அவர்கள் ரிசாதுக்கு கூஜா தூக்கும் அரசியலை செய்வதற்கு அவருக்கு மிகவும் கஷ்டமாகத் தான் இருக்கும்.
ReplyDeleteஇலங்கை முஸ்லிம்களின் அரசியல் பயணம் என்பது ஒரு கட்சியும் ஒரு தலைமைத்துவம் தான் இருக்கு வேண்டும். அது எது என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த மக்களை புத்தி ஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் வழி காட்ட முன்வர வேண்டும் என்பதே எங்களது தாழ்மையான எதிர்பார்ப்பு ஆகும்.