Header Ads



பாராளுமன்ற தேர்தல் குறித்து, ஜம்இய்யத்துல் உலமா

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை வாழ் சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது. 

01. அல்லாஹுதஆலாவின் நாட்டப்படியே அனைத்து விடயங்களும் நடைபெறுகின்றன என்று உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ள நாம் இத்தேர்தலின் முடிவும் அல்லாஹுதஆலாவின் நாட்டப்டியே அமையும் என்பதை உறுதிகொள்ளவேண்டும்.

02. இம்மை, மறுமை வாழ்வின் வெற்றி றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றி வாழ்வதிலேயே தங்கியிருக்கின்றது என்பதை உறுதிகொண்டுள்ள நாம் தேர்தல்; சந்தர்ப்பத்திலும் நபிவழி நின்றே செயற்படவேண்டும். முஸ்லிம்களாகிய எங்களது மிகப்பெரும் ஆயுதம் துஆவாகும். எனவே நாட்டினதும் முஸ்லிம்களினதும் நிம்மதியான சந்தோஷமான எதிர்காலத்துக்காக இத்தருணத்தில் அதிகமதிகம் துஆச் செய்ய வேண்டும். மேலும் அல்லாஹுதஆலாவின் உதவியை ஈட்டித் தரும்; நல்லமல்களில் நாம் அதிகமதிகம் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளல் வேண்டும். 

03. ஜனநாயக நாடொன்றில் பலதரப்பட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிடலாம். எவரும் தான் விரும்பும் வேட்பாளரை ஆதரிப்பது அவரது உரிமையாகும். நம்நாட்டு முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை பயனுள்ள முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதேநேரம் நாம் வாக்களிப்பதில் அசிரத்தையாக நடந்து கொள்ளக் கூடாது.

04. முஸ்லிம்கள் நாவால், உடல் உறுப்புக்களால் வெளியாகும் எந்தக் குற்றச் செயல்களிலும் சம்பந்தப்பட்டுவிடக்கூடாது. வீணான தர்க்கம், சண்டை சச்சரவுகள், வன்செயல்கள், வதந்திகளைப் பரப்புதல் என்பன முஃமினின் ஈமானையே பாதித்துவிடும்;. மேலும் தன் சகோதர முஸ்லிமின் உயிர், பொருள், மானம், மரியாதை என்பவற்றிற்கு உத்தரவாதமளிக்கும் வகையிலும் பிறமத சகோதரர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் அரசியல்வாதிகள் உட்பட சகல தரப்பினரும் நடந்து கொள்வது அவசியமாகும்.

05. 90 வருடங்களை கடந்து இயங்கிவரும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு அரசியல் சாயத்தையும் பூசிக்கொள்ளாத நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். எனவே  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு கட்சிக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ செயல்பட மாட்டாது. எனவே எவரும் ஜம்இய்யாவின் பெயரைப் பயன்படுத்தி பிரச்சாரங்கள் செய்ய வேண்டாம் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது. 

06. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்நாட்டில் முஸ்லிம்களது உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒற்றுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துவோர் தக்வா, அமானிதம் பேணுதல், தூரநோக்கு  போன்ற உயர்ந்த பண்பாடுகளைக் கொண்ட முன்மாதிரியானவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக பல தீய சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில், சுயலாபங்களை மறந்து, தமக்குள் திட்டிக் கொள்வதை நிறுத்தி, கட்சி பேதங்களை ஓரங்கட்டி, பொது இலக்குகளை நோக்கியும் பொதுப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும் செயற்பட வேண்டும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வினயமாக வேண்டிக் கொள்கின்றது. 

07. உலமாக்கள் குத்பாப் பிரசங்கத்தில் அரசியல் சார்ந்த விடயங்களைப் பேசுவதை முற்று முழுதாக தவிர்ந்துகொள்வதுடன் மேற்சொன்ன விடயங்களை அமுல் செய்ய பொதுமக்களுக்கு வழிகாட்ட வேண்டும். மேலும் பள்ளிவாசல்களை தேர்தல் பிரச்சாரங்களுக்கோ அது சம்பந்தப்பட்ட விடயங்களுக்கோ பயன்படுத்துவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

08. தேர்தல் முடிந்த பின்னர் நிதானமாக நடந்து கொள்வது கடமையாகும். முஸ்லிம் சமூகம் எப்போதும் ஒற்றுமையையும் சகவாழ்வையும் பேணும் வகையில் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

உலமாக்கள், மஸ்ஜித் நிர்வாகிகள், புத்திஜீவியகள் பொதுவாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாவட்ட மற்றும் பிரதேச கிளைகள் குறிப்பாகவும் மேற்கூறப்பட்ட அறிவுறுத்தல்களைக் கவனத்திற்கொண்டு பொதுமக்களை வழிநடாத்த வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது. 
வஸ்ஸலாம்.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்     
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

5 comments:

  1. Masha allah.may allah give thawfeeq to follow tge thungs in our whole life

    ReplyDelete
  2. எம்மை விட்டுப் பிரிந்த தலைவர் அஷ்ரப் போனற சமூகப்பற்றுளள உரிமைக் குரலாக ஓங்கி ஒலிக்கக் கூடிய தலைவர்களை முஸ்லிம்கள் செறிவாக உள்ள பகுதிகளில் இணம்கண்டு அவர்களுக்காகவே வாக்களிக்குமாறு பொதுமக்களை தூண்டுவதை ஜம்இய்யதுல் உலமாவின் அனுசரனையுடன் சகல பிரதேசங்களிலும் செய்தால் நல்லது
    ஏனென்றால் அரசியல் என்பது ஒரு சமூகக் கடமை
    அதைத் தட்டிக் கழிப்பதனால் சாக்கடையாக மாறிக்கொண்டிருக்கிறது

    ReplyDelete
  3. கடந்த ஆட்சிக்கு ஆதரவு வழங்கியது மரைக்க வேன்டாம் நிரைய ஆதரமுள்ளது

    ReplyDelete
  4. நல்ல விடயம் இதை தேர்தல் ஆரம்பத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை.சகல பள்ளிவாசல்களிலும் குத்பா பிரசங்கத்திலும் கடுமையாக கடைப்பிடிக்க ஆவன செய்ய வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.