Header Ads



மஹிந்த, மைத்திரி இரகசிய மர்மம் தொடருகிறது..!!

மகிந்தவினதும் சீனாவினதும் நிலைப்பாடு ஒத்திசைவாகவே காணப்படும் நிலையில், மகிந்த ராஜகபக்சவிற்கு மைத்திரிபால சிறிசேன ஏன் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்தார் என்பது இரகசியமாகவே உள்ளது.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பின்போது இவர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து மோடியிடமிருந்து தான் மீண்டும் அரசியலுக்குள் நுழைவதற்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாக மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தச் செய்தி இந்திய மத்திய அரசாங்கத்தைச் சென்றடைந்தது. மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவைச் சென்றடைந்ததும், மகிந்தவுக்கு இவர் உண்மையில் எதனைத் தெரிவித்தார் என்பது வெளியிடப்பட்டது.

இரண்டு தடவைகள் சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தது போதும் எனவும் தற்போது அரசியலிலிருந்து விலகிக்கொண்டமை நல்லது எனவும் மகிந்தவிடம் மோடி தெரிவித்திருந்தார்.

தான் மீண்டும் சிறிலங்காவின் ஆட்சி பீடத்தில் அமர விரும்புவதாகவும் இதற்கு இந்தியாவின் ஆசிர்வாதத்தை எதிர்பார்ப்பதாகவும் மகிந்த மோடியிடம் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் போதே அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுக்குமாறு மோடி, ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தார். மோடி, ராஜபக்சவிற்கு ஆலோசனை மட்டுமே வழங்கியிருந்தார். ஆனால் இதனை வெளியில் கூறினால் தான் மீண்டும் அரசியலிற்குள் நுழைந்துவிட முடியாது என ராஜபக்ச கருதினார்.

இதனாலேயே இவர் இந்தியாவின் ஒத்திசைவு தனக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

சிறிலங்காவின் அரசியல் உயர்பீடத்தில் மீண்டும் அமர்ந்து கொள்வதற்கு இந்தியா தனக்கு ஆதரவளித்துள்ளதாக மகிந்த பிரகடனம் செய்தார். இது தொடர்பில் இவர் பிரபல இந்திய ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார்.

தன்மூலம் தனது இரண்டாவது அரசியற் பிரவேசத்திற்கு இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளை ராஜபக்ச மேற்கொண்டார். இந்த நேர்காணலின் போது, சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனாவின் திட்டங்கள் இந்தியாவிற்கு எந்தவகையிலும் அச்சுறுத்தலாக அமையாது என ராஜபக்ச சுட்டிக்காட்டியிருந்தார்.

1962ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவால் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகள் இந்தியா மற்றும் சீனாவை ஒன்றிணைப்பதற்கான ஒரு பாலமாக அமைய வேண்டும் எனவும் தான் விரும்புவதாக மகிந்த தெரிவித்தார். ஆகஸ்ட்டில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை மகிந்த ராஜபக்ச தெரிவிப்பதற்கு முன்னர் இதையொத்த கருத்தொன்றை சீனக் கடற்படைத் தளபதி சாவோ சீன ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்திய மாக்கடலானது இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதாவது இங்கு வேற்று நாட்டவர்கள் பயணிக்க முடியாது என இந்தியா கூறுவதாக சீன பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மையில் சிறிலங்கா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்குச் செல்வதற்காக சீனக் கடற்படையானது இந்திய மாக்கடலில் பயணம் செய்தது. இது இந்தியாவைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட பயணமல்ல. வர்த்தக மற்றும் பாதுகாப்பு சார் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான நோக்கத்தை மட்டுமே கொண்டதாகும் என சீனக் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தை நிலைப்படுத்துவதற்கான சிறப்புப் பங்களிப்புக்களை இந்தியா மேற்கொள்ள முடியுமே அன்றி இது தனக்கு மட்டுமே சொந்தமானது என இந்தியா கருதமுடியாது என சீனக் கடற்படைத் தளபதி சாவோ ஜி, அண்மையில் பீஜிங்கிற்குச் சென்றிருந்த இந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

பூகோள ரீதியாக நோக்கில் இந்தியாவானது இந்திய மாக்கடலின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சிறப்புப் பங்களிப்பை மேற்கொள்ள முடியும். இதேபோன்று இந்திய மாக்கடல் பிராந்தியம் மற்றும் தென்னாசியப் பிராந்தியத்திலும் இந்தியா அதிக கவனத்தைச் செலுத்த முடியும்.

ஆனால் அனைத்துலகக் கடற்பரப்பான இந்திய மாக்கடல் தனக்கு மட்டுமே சொந்தம் என இந்தியா கூறுவது பொருத்தமற்றதாகும். ரஸ்யா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளின் கடற்படையினர் இந்திய மாக்கடலில் சுதந்திரமாகப் பயணிப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளனர்.

இந்திய மாக்கடலில் ஏற்படுவதற்குச் சாத்தியமான ‘மோதல்கள்’ தொடர்பாக அமெரிக்க வல்லுனர் ஒருவர் எச்சரித்திருந்தார். ஆனாலும் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என சாவோ தெரிவித்துள்ளார்.

ஆனால் சில நாடுகள் இந்திய மாக்கடலானது தமக்கு மட்டுமே சொந்தம் எனக் கூறினால் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது’ என சாவோ சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவுக்கு கடந்த ஆண்டின் இறுதியில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் பயணித்தமை மற்றும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொண்டமை போன்றன தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

ஆனாலும் இந்திய மூலோபாய வட்டங்களின் மத்தியில் சீனாவின் இத்தகைய நடவடிக்கை ஆராயப்பட்டது. எனினும் இந்த விடயத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டதாக சீன வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்விரு கடற்பயணங்களும் வழமையானது என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகளவிலான நீர்மூழ்கிக்கப்பல்கள் பயணிக்கும் போது நாங்கள் எமது அயல்நாடுகளிடம் இது தொடர்பில் கவலை கொள்ள வேண்டாம் எனவும் இருதரப்பு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்துவதாக சீனக் கடற்படைக் கல்லூரியின் ஆய்வாளர் சியாங் வெய் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மாக்கடலில் சீனாவின் கவனம் குவிவதற்கு அதன் வர்த்தக நோக்கம் மட்டுமே காரணமாகும் எனவும் இதன் ஊடாக முக்கிய சக்தி வளங்களை இறக்குமதி செய்ய முடியும் எனவும் சீனா கருதுவதாகவும் சாங்க் தெரிவித்துள்ளார்.

‘இந்திய மாக்கடலில் சீனக் கடற்படையின் பிரசன்னம் அதிகரித்துள்ளமையானது கடற்பாதுகாப்பு மற்றும் தொடர்பாடலுக்கான கடல்வழிகளைப் பேணுவதற்காக மட்டுமே ஆகும். நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.

இந்திய மாக்கடலில் சீனக் கப்பல்கள் பயணிப்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது எனில் நாங்கள் இருதரப்பு புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் இன்னமும் கட்டியெழுப்பவில்லை எனக் கருத வேண்டும்’ என சாங்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் இந்த அறிக்கையானது மகிந்தவை மீண்டும் சிறிலங்காவின் ஆட்சிப்பீடத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றது.

அத்துடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனத் திட்டங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதையும் இதனால் இதற்கு இந்தியாவின் ஆசீர்வாதமும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

மகிந்தவினதும் சீனாவினதும் நிலைப்பாடு ஒத்திசைவாகவே காணப்படும் அதேவேளையில், மகிந்தவிற்கு மைத்திரி ஏன் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதியை வழங்கினார் என்பது இரகசியமாகவே உள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டால் ஐ.தே.க மூன்றில் இரண்டு பெரும்பான்மைகளுடன் அரசாங்கத்தை அமைப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அண்மையில் முன்னாள் அதிபர் சந்திரிகாவைச் சந்தித்த போது மைத்திரி தெரிவித்திருந்தார்.

மகிந்தவுக்கு தேர்தல் நியமனத்தை வழங்க வேண்டும் என்பது தொடர்பில் மைத்திரியின் தீர்மானமானது புலனாய்வு சார் அறிக்கைகளை மையப்படுத்தியதாகும். இதனை மைத்திரி மக்கள் மத்தியிலும் தெரிவித்துள்ளார்.

எனினும் பயங்கரவாதப் போரை வெற்றி கொண்ட மகிந்த 2010ல் பொதுத் தேர்தலில் போட்டியிடும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவேன் என்பதில் உறுதியாயிருந்தார். ஆனால் மகிந்தவால் இதனைப் பெறமுடியவில்லை.

போர் வெற்றி கொள்ளப்பட்ட நிலையில் மகிந்த ஒரு பிரபலமானவராக மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்ட ஒரு தலைவராக இருந்த அக்காலப்பகுதியில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் கூட மகிந்தவால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியவில்லை.

இந்நிலையில் ஐ.தே.க நடைபெறவுள்ள தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என்கின்ற அச்சத்தை மைத்திரிக்கு ஏற்படுத்தியது யார் என்பதே தற்போதைய வினாவாகும். புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் இவ்வாறானதொரு நகர்வை மைத்திரி முன்னெடுத்திருப்பின், எவ்வாறான ஒரு சூழலில் புலனாய்வாளர்களால் இந்த அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன என்பதை ஆராய வேண்டும்.

ஐ.தே.க விலிருந்து விலகி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி என்கின்ற கட்சியை உருவாக்கிய காமினி திசாநாயக்க சிறிலங்காவின் அதிபராக டி.பி.விஜயதுங்க பதவி வகித்த போது மீண்டும் ஐ.தே.கவில் இணைய முன்வந்த போது அதனை ரணில், சிறிசேன குறே போன்றவர்கள் எதிர்த்து நின்றனர். எனினும், விஜயதுங்க, காமினியைத் தேசியப் பட்டியலில் இணைத்துக் கொண்டதுடன் அவருக்கு அமைச்சுப் பதவியையும் வழங்கினார்.

காமினியை மீண்டும் ஐ.தே.கவில் இணைத்துக் கொள்வதற்கு கறுப்புப் பணம், அச்சுறுத்தல் மற்றும் Black Rist புலனாய்வுப் பிரிவு ஆகிய மூன்றுமே காரணமாகும். அதாவது Black Money, Blackmail, Black Ristஆகிய 3B க்களும் காரணம் எனக் கூறப்படுகிறது.

காமினி மீண்டும் ஐ.தே.கவில் இணைத்துக் கொள்ளப்பட்டால் இது தேர்தலில் வெற்றி கொள்ளும் என Black Rist புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது. இதுவரையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த அறிக்கைகளுக்கு முரணாக ரணில்-குறே அணி செயற்பட்டது.

இதேபோன்று மகிந்தவின் தேர்தல் நியமனம் தொடர்பிலும் பல்வேறு வதந்திகள் நிலவுகின்றன. இந்த வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லையாயினும், அரசியல் என்கின்ற விளையாட்டுப் போட்டியில் மகிந்தவும் சீனாவும் தற்காலிக வெற்றி ஒன்றைத் தக்கவைத்துள்ளன என்பதையே தற்போதைய சூழல் உறுதிப்படுத்துகின்றது.

மொழியாக்கம்- நித்தியபாரதி.

No comments

Powered by Blogger.