Header Ads



மஹிந்தவினதும் பங்காளிகளினதும் கடைசிநேர பரபரப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் அரசியல்வாதிகளுக்கான வேட்புமனு வழங்கல் விடயத்தில், கடந்த ஞாயிறு இரவு பாரிய முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் வீட்டில் வைத்தே இந்த முறுகல் ஏற்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவின் தரப்புக்கு அதிக வேட்புமனுக்கள் வழங்கப்பட்ட அதேநேரம் பலரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்தநிலையில் இது குறித்து ஆராய முன்னாள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேராவின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே உட்பட்ட பலர் பங்கேற்றனர்

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பீலிக்ஸ் பெரேராவின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனையடுத்து தனியாக கலந்துரையாடல் ஒன்றை நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கேட்டுக்கொண்டமைக்கு அமைய, பீலிக்ஸ் பெரேராவின் வீட்டில் உள்ள முதலாம் மாடியில் மூடிய நிலையில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தேர்தல் வேட்புமனு குழு மாத்திரம் மஹிந்த ராஜபக்சவுடன் பங்கேற்றது.

இதன்போது சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே உட்பட்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சரின் வீட்டில் உள்ள கீழ் மாடியில் காத்திருந்தனர்.

இதேவேளை மூடிய அறைக்குள் இடம்பெற்ற கூட்டத்தின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வேட்புமனு வழங்கப்பட வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தினார்.

அதேநேரம் நிராகரிக்கப்பட்ட சரண குணவர்த்தனவின் வேட்புமனு குறித்தும் அங்கும் ஆராயப்பட்டது. எனினும் அவரின் மனைவி அவருக்காக கம்பஹா பட்டியலில் உள்ளடக்கப்பட்டார்.

கலந்துரையாடலின் போது பீலிக்ஸ் பெரேராவுக்கும் சுசில் பிரேமஜயந்தவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டத்தை அடுத்து கலந்துரையாடல் அறையில் இருந்து வெளியேறிய ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த மயக்க நிலையை உணர்வதாக குறிப்பிட்டார்.

இதன்பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறி நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்தவின் நிலைமையையும் வேட்புமனு பத்திரங்களின் நிலையையும் பார்வையிட்டுள்ளார்.

எனினும் நேற்று காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய சுசில் பிரேமஜயந்த, வேட்புமனு பத்திர கையளிப்பு நிகழ்வில் பங்கேற்றார்.

No comments

Powered by Blogger.