சபாநாயகர் சட்டவிரோதமான தீர்மானத்தை மேற்கொண்டாரா..?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபட்டபெந்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கு சபாநாயகர் மேற்கொண்ட தீர்மானம் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்த்திப்பின் போது வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜத் பீ பெரேரா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமை தொடர்பில் எதிர்கட்சியின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாகவே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் ஜெகத் பாலபட்டபெந்தி விளக்கம் கோருவதற்காக அண்மையில் நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதியினும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போது நாடாளுமன்ற உறுப்புரிமையை கொண்டில்லாத காரணத்தால் சபாநாயகரின் தீர்மானம் சட்டவிரோதமானது என அஜித் பீ பெரேரா குறிப்பிட்டார்.
பிரதியமைச்சரின் இந்த கருத்து தொடர்பில் எதிர்கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் செனவிரட்ன கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பதிலளித்தார்.
சகோதர தன்மையை கருத்தில் கொண்டு சபாநாயகர் செயற்பட்டதாக அண்மையில் அஜித் பி. பெரேரா கூறியிருந்தார். சகோதர்களை அதிகாரங்களுக்கு நியமிக்கும் பட்சத்தில் இவ்வாறான நிலை தோன்றும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை என ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டகள் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு புறம்பானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, h fm செய்திச் சேவை மேலதிக விளக்கம் பெறுவதற்காக முன்னாள் சபாநாயகரான அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரோவை தொடர்பு கொண்டு வினவியது.
இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை புலன்விசாரணை செய்யும் ஆணைக்குழு சுயாதீனமான அமைப்பு என்ற ரீதியில் அதன் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு யாரும் அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
இதுதவிர, சட்டவல்லுனரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், சபாநாயகர் எடுத்த தீர்மானம் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய சரியானது என குறிப்பிட்டார்.
Post a Comment