காதர் ஹாஜியாரின், அதிரடி வாக்குமூலம்..!
-நஜீப் பின் கபூர்-
நாம் இப்போது குறுக்கு விசாரணை என்ற பெயரில் அரசியல் வாதிகளின் வாக்கு மூலங்களைப் பெற்று வருகிறோம். இந்த வரிசையில் எல்லோராலும் அறியப்பட்ட கண்டி காதர் ஹாஜியாரின் வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 14.03.2014 ம் திகதி அவரை கம்பளை இல்லத்தில் சந்தித்தார் எமது செய்தியாளர். (நஜீப் பின் கபூர்) காதர் ஹாஜியார் அவர்களிடத்தில் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்தை இப்போது வாசகர்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றோம்.
கேள்வி:- எவ்வளவு காலம் அரசியல் செய்கின்றீர்கள்
பதில்:- 50 வருடங்களாக
கேள்வி:- உங்களை அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் என்று எவராவது இருக்கின்றார்களா?
பதில்:- அப்படிப் பெயர் குறிப்பிடக் கூடியதாக எவரும் இல்லாவிட்டாலும் முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் திசாநாயாக்க எனக்கு சில ஒத்துழைப்புக்களை வழங்கி இருக்கின்றார்.
கேள்வி:- அரசியலில் இதுவரை என்னனென்ன பதவிகள் வகித்திருக்கின்றீர்கள்.
பதில்:- மாகாண அமைச்சராக, பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சராக, அமைச்சராகவும் பல முறை பதவி வகித்திருக்கின்றேன்.
கேள்வி:- நீங்கள் அச்சுறுத்தல் காரணமான ராஜபக்ஷ அரசுக்கு போக வேண்டி வந்தது என்று நாங்கள் குறிப்பிட்டால் அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்:- அது தவறான கருத்து அப்படி எனக்கு எந்த அச்சுறுத்தல்களையும் எவரும் விடுக்கவில்லை
கேள்வி:- ராஜபக்ஷவிடம் உங்களது பைல்கன் ஏதும் சிக்கி இருந்ததா?
பதில்:- அப்படி எதுவுமே இல்லை.
கேள்வி:- அப்படியானால் ஆளும் தரப்புக்குத் தாவியது ஏன்? அதனால் நடந்தது என்ன?
பதில்:- ராஜபக்ஷ நெடுநாள் அரசியல் அதிகாரத்தில் இருப்பார். நான் எதிர்பார்த்த படி அவர் 10 வருடங்கள் வரை இருந்தார். இந்த நிலையில் நான் எதிர்க் கட்சியில் உட்கார்ந்திருப்பதால் நடக்கப்போவது என்ன? எனவே சமூக நலன் கருதியே நான் இந்த முடிவை மேற் கொண்டேன். அதனால் எனக்கு எந்த நஷ்டங்களும் ஏற்படவில்லை மாறாக பல நன்மைகளே இதனால் சமூகத்திற்குக் கிடைத்தது. எனக்குக் கிடைத்த நன்மைகளை நான் பொது மக்களுக்கு வழங்கி இருக்கின்றேன். இந்த இடத்தில் நான் ஒரு விடயத்தை கூறுகின்றேன். ராஜபக்ஷ எனக்குப் பெரும் தொகையான பணத்தை அள்ளித் தந்தார் 900 மில்லியனுக்கும் மேற்பட்ட பணத்தை அவர் எனக்கு அபிவிருத்திப் பணிகளுக்காக கொடுத்திருக்கின்றார். நான் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராக இருந்த காலத்தில் கூட இந்தளவு பணத்தை எவரும் எனக்குத் தரவில்லை. இந்தப் பணத்தைக் கொண்டு நான் கண்டி மாவட்டத்தில் பல இடங்களில் பாரிய அபிவிருத்திப் பணிகளைச் செய்திருக்கின்றேன். குறிப்பாக ஹாரிஸ்பத்துவ - அகுறணைப் பிரதேசங்களுக்கு.
கேள்வி:- சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தீர்கள். முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்க இருப்பதாக! அப்படி என்னதான் தீர்மானம் எடுக்கப் போகின்றீர்கள்.
பதில்:- முஸ்லிம் சமூகத்திற்கு நன்மையான தீர்மானம் ஒன்றை எடுக்க இருக்கின்றேன். எவர் முஸ்லிம்களை அனுசரித்துப் போகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவளிக்கலாம் என்றிருக்கின்றேன்.
கேள்வி:-ஐக்கிய தேசியக் கட்சியில் உங்களுக்கு வேட்பு மனுக்கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்களா? அது பற்றி ரணிலுடன் பேசி இருக்கின்றீகளா?
பதில்:- நான் இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியில்தான் இருக்கின்றேன் என்னை வெளியேற்றியது செல்லுபடியாகாது என்று நீதி மன்றத்தில் ஒரு வழக்கு இருக்கின்றது. எனவே நான் இன்னும் ஐ.தே.கட்சிக்காரன்தான்.
கேள்வி:- ஐ.தே.க. உங்களுக்கு சீட்டுத் தரவில்லை என்ற நிலை வந்தால் என்ன செய்வீர்கள்.
பதில்;- அதற்கும் திட்டம் வைத்திருக்கின்றேன் காதர் ஹாஜியார் மீது மக்களுக்கு இன்னும் நல்லபிப்பிராயமும் நம்பிக்கையும் இருக்கின்றது. தனித்தாவது ஒரு குழுவுடன் இறங்கி நான் வெற்றி பெறுவேன். அல்லது ஏதாவது ஒருவகையில் பாராளுமன்றத்திற்கு வருவேன்.
கேள்வி:- நீங்கள் ஸ்ரீ.ல.சு.கட்சி அமைப்பாளர்தானே? சுதந்திரக் கட்சியில் போட்டியிட நோக்கமில்லையா?
பதில்:- நான் இன்னும் ஐ.தே.கட்சிக்காரன். இதற்காக வழக்காடி வருகின்றேன்.
கேள்வி:- முஸ்லிம்களுக்கு ராஜபக்ஷ காலத்தில் கொடுக்கப்பட்ட நெருக்கடி நிலமைகளின் போது நீங்கள் ராஜபக்ஷவைப் பாதுகாக்கும் வகையில் காரியம் பார்த்தீர்கள், பேசினீர்கள் இதனால் முஸ்லிம் மக்களிடத்தில் உங்கள் மீது நல்லெண்ணம் கெட்டுப் போயிருக்கின்றது. இதுபற்றி என்ன சொல்கின்றீர்கள்?
பதில்:- நீங்கள் சொல்கின்ற விடயத்தில் ஓரளவு உண்மை இருக்கின்றது. சற்று யோசித்துப் பாருங்கள் எல்லா முஸ்லிம் தலைவர்களும் அனுபவித்து விட்டு கடைசி நேரத்தில் அவருக்கு எதிராக நின்றார்கள். இது பற்றியெல்லாம் நான் பலமுறை யோசித்துத்தான் அப்படி நடந்து கொண்டேன். இது எனக்குத் தனிப்பட்ட ரீதியில் பாதிப்பாக இருந்தாலும் நாங்கள் அன்று அப்படிச் செயல்படாதிருந்தால் விளைவு இன்னும் மோசமாக இருந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தது. இந்த நிலமைகளை முஸ்லிம்களுக்கு விளக்கினால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள் அவர்களது கோபம் தனியும் என்று நம்புகின்றேன்.
கேள்வி:- நீங்கள் நோய்வாய்பட்டிருந்த போது எவரும் வந்து பார்க்கவில்லை என்று குறைப்பட்டிருந்தீர்கள். அப்படியான குறிப்புகளும் ஊடகங்களில் இருந்தது. சின்னச் சின்ன குற்றங்களுக்காகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றவர்களையெல்லாம் பார்க்க தினம் தோரும் ராஜபக்ஷ போய் வருகின்றாரே ஏன் உங்களைப் பார்க்க அவராவது வரவில்லையா?
பதில்:- ஒரு முறை வந்து பார்த்தார் அத்துடன் நான் வைத்தியத்திற்காக இந்தியா போய் விட்டேன.; என்றாலும் 10க்கும் மேற்பட்ட தடவைகள் அவர் எனக்கு தொலைபேசியில் பேசி சுகம் விசாரித்திருக்கின்றார்.
கேள்வி:- என்ன ஹஜ் விவகாரத்தில் உங்களுக்கும், பௌசிக்கும் லடாய்?
பதில்:- எனது மோதல்களும் போராட்டங்களும் நியாயமானது என்று நீதி மன்றமே தீர்ப்புச் சொல்லி இருக்கின்றது. என்றாலும் புனித ஹஜ்ஜில் வியாபாரம் செய்கின்றவர்கள் நீதி மன்றத்தின் தீர்ப்பைக்கூட மதிக்காமல் காரியம் பார்த்து விட்டனர். காலமும் இது விடயத்தில் குறுக்காக இருந்தது. 150 இலவசக் கோட்டாவை இவர்கள் துஸ்பிரயோகம் செய்கின்றார்கள். அதில் ஹஜ்ஜூக்குப் போனவர்களும் அவர்களுடைய கையாட்களும் அவர்களுக்குத் தேவையான விதத்தில் இதனை பாவித்து வருகின்றார்கள். இது இறைவனிடத்தில் பாரிய தண்டனைக்குரிய குற்றம்.
ஹஜ் விடயத்தில் எனது நிலைப்பாடு ஒருவன் தனது சொந்தப் பணத்தில் மட்டுமே இந்தக் கடமையை நிறைவு செய்ய வேண்டும் அடுத்தவன் பணத்திலோ அன்பளிப்பிலோ இதனைப் பண்ண இஸ்லாத்தில் எந்தளவு இடமிருக்கின்றது என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஹஜ் விடயத்தில் தாராளமாக மோசடிகள் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றது. இறைவனுக்குப் பயப்படாமல் அவர்கள் இதனைச் செய்து வந்திருக்கின்றார்கள்!
கேள்வி:- கம்பளை சாஹிரா கல்லூரி, கண்டி பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரிகளில் ஒரு காலத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் பதியுத்தீனுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது நீங்கள் அவற்றைத் தடுத்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு இருக்கின்றது. அது பற்றி என்ன சொல்கின்றீர்கள்.
பதில்:- அது பழைய கதை அதில் உண்மையில்லை.
கேள்வி:- தற்போது எதிர்க் கட்சி தலைவர் விடயத்தில் நடக்கின்ற குழப்பத்தில் உங்கள நிலைப்பாடு என்ன?
பதில்:- எதிர்க் கட்சித் தலைவர் விவகாரம் எனது ஆதரவு தினேஷூக்கு! அவர் நல்ல மனிதர்.
கேள்வி:- உங்கள் 50 வருடகால அரசியலில் நீங்கள் பல தலைவர்களைப் பார்த்திருக்கின்றீர்கள் அவர்களில் உங்களுக்குப் பிடித்தவர்?
பதில்:- ராஜபக்ஷதான் அதில் எந்த சந்தேகங்களுமில்லை அவர் நல்லவர்!
கேள்வி:- தேர்தலுக்குப் பின்னர் மைத்திரியுடன் பேசி இருக்கின்றீர்ளா
பதில்:- ஆம்.
கேள்வி:- ஸ்ரீ.ல.சு கட்சி ஊடாக தேர்தலில் நிற்கின்ற நோக்கம் இருக்கின்றதா?
பதில்:- இது விவகாரத்தில் எனது பதிலை முன்னர் கூறி இருக்கின்றேன்தானே!
கேள்வி:- அஸ்வர் ஹாஜியார் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.
பதில்:- அவர் நல்ல மனிதர் முஸ்லிம் தலைவர்கள் செய்த துரோகம்தான் அவருக்கு பாராளுமன்ற ஆசனம் பறிபோனமைக்கு முக்கிய காரணம். அதனைத் தட்டிப் பறித்தவரும் பின்னர் ராஜபக்ஷவை எட்டி உதைத்து விட்டார்.

அஸ்வருடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக தங்களின் இருப்பிடத்துக்காக மகிந்தாவுடன் ஒட்டியிருந்துவிட்டு இப்படிக் கதை அளக்குகின்றாரே. 900 மில்லியன் கிடைத்ததாகச் சொல்லும் நீங்கள் அத்தனை ரூபாக்களையும் மக்கள் சேவைக்குத் தான் பயன்படுத்தினீர்களா? இவரும் அஸ்வரும் அரசியலை விட்டும் ஒதுங்குவதே முஸ்லிம்களுக்கு இவர்கள் செய்யும் பாரிய சேவையாகும்.
ReplyDeleteசரியான பதில்.கோடாரிக்காம்புகள் திருந்த மாட்டாது.
ReplyDelete