குறைவாக நித்திரைகொண்டு, அதிகமாக மக்களுக்கு சேவையாற்ற தயார் - சஜித் பிரேமதாச
நல்லாட்சி அரசாங்கத்தின் வருகையால் தாம் வழங்கும் தீர்ப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அலரி மாளிகைக்கு செல்வதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் நீதிமன்ற தீர்ப்புக்கள் சவால்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை. தற்போதைய அரசாங்கம் நீதிபதிகளுக்கு கல் எறிவதோ, சேறு பூசுவதோ கிடையாது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் 19வது திருத்த சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழு மனதோடு ஏற்று கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் திவிநெகும சட்ட மூலத்திற்கு பல நிபந்தனைகளை விதித்ததாக கூறி, முன்னாள் நீதியரசரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, அவரை வீட்டுக்கு அனுப்ப நாடாளுமன்றத்தை கங்காரு நீதிமன்றமாக மாற்றினர்.
தற்போது எந்தவொரு வழக்கு தொடர்பிலும் நீதிபதிகளுக்கு நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து சுயாதீனமான முடிவொன்றை எடுக்க முடியும் எனவும், அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் மகிந்த அரசாங்கத்தை போல நீதிமன்றத்திற்கு தற்போதைய அரசாங்கம் ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
திவிநெகும திட்டத்தில் உள்ள நிதியானது பெரிய வர்த்தகர்களுக்கோ, கம்பனிகாரர்களுக்கோ வழங்குவதற்காக அல்ல. சாதாரண வறிய மக்களுக்கு வழங்கவே அந்த நிதி உள்ளது.
இதனால், வறிய மக்களுக்கு நாங்கள் உதவுவோம். திவிநெகும நிதியின் 250 லட்சம் ரூபாவை பயன்படுத்தி அச்சிடப்பட்ட நாட்காட்டிகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது விநியோகிக்கப்பட்டன.
அப்படியான ஊழல், மோசடிகளுக்கு எதிராக எவரும் அம்பாந்தோட்டையில் அன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை. எனினும் எனக்கு எதிராக யாராவது ஆர்ப்பாட்டங்களை நடத்தினால் குறைவாக நித்திரைகொண்டு அதிகமாக மக்களுக்கு சேவையாற்றுவேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி என்கின்ற கனவில் மிதக்கின்றார், கனவு காண எல்லோருக்கும் உரிமை உள்ளது, ஆனால் கனவை நனவாகக் தகுதியும் வேண்டாமோ?
ReplyDelete