Header Ads



ரஷியா ஏவுகணைகள் வழங்கினாலும், எங்களால் ஈரானைத் தாக்க முடியும் - அமெரிக்கா

ஈரான் நாட்டுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷியா வழங்கினாலும், தங்களால் ஈரான் மீது தாக்குதல் நடத்த முடியும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவத் தலைமைத் தளபதி மார்ட்டின் டெம்ப்ஸி வியாழக்கிழமை கூறியதாவது:

ஈரானுக்கு அதி நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷியா விற்பனை செய்யக்கூடும் என்பது எங்களுக்கு பல ஆண்டுகளாகவே தெரியும்.

இருந்தாலும், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்து நிறுத்துவதற்கான ராஜீய முயற்சிகள் தோல்வியடைந்தால், ராணுவத் தாக்குதல் நிகழ்த்துவதற்கு எப்போதும் தயாராகவே உள்ளோம். ரஷிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஈரானுக்கு வழங்கப்படுவது, அந்த நாட்டில் தாக்குதல் நிகழ்த்தும் எங்கள் திறனைக் குறைக்காது என்றார் டெம்ஸி.

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவின் அதி நவீன "எஸ்-300' ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகள் தங்களுக்கு வந்து சேரலாம் என ஈரான் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் தலைவர் அலி ஷாம்கனி தெரிவித்துள்ளார். தங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தும் ஏவுகணைகள், தாழ்வான உயரத்தில் பறக்கும் போர் விமானங்களை எதிர்கொள்ள ஈரானுக்கு இதுவரை வான்பாதுகாப்புத் திறன் இல்லாமல் இருந்து வந்தது.

தற்போது ரஷியா அளிக்கும் "எஸ்-300' ஏவுகணைகள் மூலம் எதிரிகளின் ஏவுகணைகளையும், போர் விமானங்களையும் தாக்கி அழிக்கும் திறன் ஈரானுக்குக் கிடைக்கும்.

எனினும், ரேடார் சாதனங்களால் கண்டுபிடிக்க முடியாத அமெரிக்காவின் "எஃப்-22' போர் விமானங்களையும், பிற குண்டு வீச்சு விமானங்களையும் இந்த பாதுகாப்பு ஏவுகணைகளால் எதிர்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.