Header Ads



ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் 15 வருட நிறைவும், சிறுவர் நிகழ்ச்சியும்


சுவிற்ஸர்லாந்தில் இயங்கிவரும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையத்தின் 15 ஆவது வருட பூர்த்தி நிறைவும், சிறுவர் நிகழ்ச்சிகளும் நேற்று சனிக்கிழமை 7 ஆம் திகதி, சூரிச் - ஊர்டோர்ப் எம்ரி மண்டபத்தில் நடைபெற்றது.

ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் அல்ஹாஜ் எம்.இஸட். ஹனீப் மொஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவிஸில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களும், அவர்களுடைய பிள்ளைகளும் பங்கேற்றதுடன், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், துனிசீயா, மொரோக்கோ, அல்ஜீரியா நாடுகளைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகளும் பங்கேற்று தமது திறமையை வெளிப்படுத்தினர்.

நிகழ்வின் பிரதம அதீதியாக சேஹ் மஹ்மூத் (ஹாபிஸ் - எகிப்து அல் அஸ்ஹர் பல்கழைக்கழக முன்னாள் விரிவுரையாளர்) பங்கேற்றார். மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்காக ஓதிக்காண்பித்த புனித அல்குர்ஆன் சூறாக்களுக்கு அவரே  புள்ளிகளை வழங்கி மாணவர்களின் திறமைகளை தரப்படுத்தினார்.

அத்துடன் சூரிச் - சிலீரனில் இலங்கையர்களினால் நடாத்தப்படும் மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் வைத்து இயக்கப்படும் அல்குர்ஆன் பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளும் குறித்த நிகழ்வில் நடைபெற்றதுடன், ஜேர்மன், பிரான்ஞ் மற்றும் ஆங்கில மொழிகளில் மாணவர்களின் பேச்சுக்களும், நாடகமொன்றும் மாணவர்களினால் மேடையேற்றப்பட்டது. மத்ரஸத்துல் ரவ்ளாவின் பிரதம ஆசியை கௌவ்ஸர் குறித்த மாணவர்களை சிறந்தமுறையில் பயிற்றுவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமது திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

சிறுவர் நிகழ்ச்சிக்கான தொகுப்புகளை ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய செயலாளர் அல்ஹாஜ் எம்.எப்.எம். அமீரின் நெறிப்படுத்தலில் வளர்ந்துவரும் இளம் மாணவர்கள் தமது மொழியாற்றல் மூலமாக வெளிப்படுத்தியதுடன், அழகான மேடையமைப்பு. ஒலி வசதி, பின்னணி இசையுடன் கூடிய ஹசீதா ஆகியனவும் மனங்கவர்ந்தவையாக இருந்தன.

மேலும் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம் கடந்த 15 வருடங்களாக மேற்கொண்டுவரும் பணிகள் குறித்து அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டது.

நிகழ்வில் இறுதியாக ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய தலைவர் ஹனீப் மொஹமட் உணர்வுபூர்வமான முறையில் ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்றியுரை நிகழ்த்தினார். அதில் அவர்.

குறித்த நிகழ்வு வெற்றிபெறுவதற்கு உதவிய சகல பெற்றோர்களுக்கும், ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலைய இதர அங்கத்தவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்ததுடன், கடந்த 15 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமது நிலையம் தற்போது படிப்படியாக வளர்ந்திருப்பதாகவும், சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களிலிருந்து, சமூகத்திற்கும், இஸ்லாத்திற்கும் பங்காற்ற வேண்டியவர்களை உருவாக்க வேண்டுமெனவும் கூறினார்.

No comments

Powered by Blogger.