சூழ்ச்சி வலையில் மைத்திரிபால, மஹிந்த மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் - தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் சூழ்ச்சி வலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிக்கி விட்டார். சம்பந்தனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே தேசிய அரசாங்கத்தின் பிரதான கதாபாத்திரங்கள் என தெரிவிக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கட்சியை மீட்டெடுக்க அரசியலுக்கு வர வேண்டும் எனவும் குறிப்பிட்டது.
தேசிய அரசாங்கத்தின் நகர்வுகள் தொடர்பிலும் சர்வதேசத்தினை கையாளும் புதிய திட்டங்களின் நிலைமைகள் சாதகமானதா என வினவிய போதே அவ் அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேசிய அரசாங்கத்தின் புதிய ஆட்சி ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் சாதகமானதானதொன்று அல்ல. இவ் ஆட்சி முற்றிலும் பிரிவினைவாதிகளின் திட்டப்படி அமைக்கப்பட்ட பிரிவினைவாத ஆட்சியே.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரே பிரதான கதாபாத்திரத்தினை வகிக்கின்றனர். தேசிய அரசாங்கம் உருவாகியவுடன் வடக்கில் இராணுவம் முடக்கப்பட்டு விட்டது.
ஆளுனர் மாற்றப்பட்டு இன்று வட மாகாணம் முற்று முழுதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் பிரிவினைவாதிகளின் கைகளிலும் சென்று விட்டது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் சூழ்ச்சி வலையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிக்கி விட்டார்.
இதனால் பௌத்த சிங்கள மக்களே முழுமையாக பாதிக்கப்படப்போகின்றனர்.
மேலும் விடுதலைப் புலிகளிடம் இருந்து வென்றெடுத்த நாட்டினை இன்று பிரிவினைவாதிகளின் கைகளில் ஒப்படைத்துள்ளோம்.
சர்வதேசத்தின் எதிர்பார்ப்பினையும் புலம்பெயர் புலி அமைப்புக்களின் தேவையினை நிறைவேற்றவுமே புதிய தேசிய அரசு உருவாகியுள்ளது. எனவே இழந்த நாட்டை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிங்கள பௌத்த மற்றும் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரையும் மீண்டும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளிலும் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சியினை கண்டது. அது இன்று மீண்டும் முடக்கப்பட்டு விட்டது.
எனவே நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உதயமாக வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Not yet passed away still living
ReplyDelete