கண்டி மாவட்ட முஸ்லிம்கள், ரவூப் ஹக்கீமை பாராளுமன்றம் அனுப்பி, கண்டது என்ன..?
-முஹம்மத் ரியாஸ் – அக்குரணை-
“அக்குறணையில் பெயர்போன முஸ்லிம் அரசியல்வாதிகளைக் களையெடுக்க” என்ற தலைப்பில் நஸ்லான் என்ற சகோதருடைய ஆக்கம் ஒன்றை வாசிக்கக் கிடைத்தது. ஒழுங்கான விஷயமற்ற, தெளிவற்ற, தூர நோக்கமற்ற ஒரு ஆக்கமாகவே அதனைப் பார்க்கின்றேன். குறித்த ஆக்கத்தின் இறுதியில் “மக்களிடமே தீர்ப்பை விட்டுவிடுவோம்” எந்த முயற்சிகளும் தேவையில்லை என்று நிறைவு செய்ப்பட்டிருந்தது அப்படியென்றால், எல்லாப் பிரச்சினைகளையும் மக்களிடம் விட்டுவிடலாமல்லவா? எதற்கு அரசியல்வாதிகள்?
மக்கள் பிரதிநிதி என்ற வகையில், தான் பாராளுமன்றம் செல்வதற்காக வாக்களித்த மக்களுக்கு நல்லது செய்வது கடமை. வாக்களித்த அந்த அப்பாவி மக்களை மறந்து வேறு பகுதியில் சென்று சேவை செய்தால், அங்கேயே சென்று தேர்தலில் நிற்கலாமே. தேர்தல் காலத்தில் மாத்திரம் ஏன் இங்கு வரவேண்டும்? முதலில், எதற்காக நாங்கள் வாக்களிக்கின்றோம் என்ற தெளிவு இருக்க வேண்டும். மக்களது பிரச்சினைகளைப் கண்டுகொள்ளாதவர்களுக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும். சும்மா வீட்டில் இருந்துவிட வேண்டியதுதானே.
நாட்டில் எல்லோரும் இணைந்து மாற்றம் ஏற்படுத்தினோம். நாடு நன்றாக வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதுபோன்று, சமூகமும் நன்றாக வரவேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இல்லையா? அவ்வாறானால், அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாதா? அதுவும் குறிப்பிட்ட ஆக்கமானது ஒரு சகோதரரின் முகநூலில் சொல்லப்பட்ட கருத்துக்களே.
முஸ்லிம் சமூகம் கடந்த பல தசாப்தங்களாக அரசியல் வியாபாரிகளால் ஏமாற்றப்பட்டு வருகின்றது. இது நீண்டநாள் பிரச்சினை. குறிப்பாகக் கண்டி மாவட்ட மக்கள் கிராமம் கிரமமாகப் பிரிந்து, தொடர்பற்று இருப்பதை மூலதனமாகக் கொண்டு, சீசன் காலத்துக்கு வந்து அரசியல் செயது சென்றனர் எங்களது முஸ்லிம் அரசியல் தலைமைகள். நாம் ஏன் ஒன்றிணையக்கூடாது?
இன்று ஊடகங்களில் செல்வாக்கு அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, உலகில் புரட்சிகளையெல்லாம் செய்கின்றார்கள். வெளிப்படையாக சமூகத்திற்குப் பயனில்லாது இருக்கின்ற அரசியல்வாதிகளையாவது கலையெடுக்க நாங்கள் முயற்சிக்கக் கூடாதா?
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு ஆரவாக செயல்பட்டுவிட்டு இம்முறை, அவரோடு ஒட்டியிருந்து மக்கள் தூக்கியெறிந்து விடுவார்கள் என்ற பயத்தினால் ஓடிவந்து இந்த அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட ஒருவருக்காக எழுதுகின்றீர்கள். இது நியாயமா?
சிலர் சில காரணங்களுக்காக மௌனமாக இருக்கின்றனர். இன்றும் சிலர் தேவையற்ற ஒருவிடயமாக அரசியலைப் பார்க்கின்றனர். இவ்வாறு இருக்கின்ற போது, தைரியத்துடன் குரல்கொடுக்கின்ற சகோதரர்களைத் தட்டிக் கொடுத்து, ஏமாற்றுக் காரர்களிடமிருந்து சமூகத்தை காப்பாற்றுவதற்கு ஒத்துழைக்க முயற்சியுங்கள். முடியாது என்றால் காலை இழுத்துவிடுகின்ற வேலையையாவது செய்யாதிருங்கள்.
நான் குறித்த தைரியமிக்க சகோதரர்களைப் பாராட்டுகின்றேன். இதுபோன்று இன்னும் சிலர் இருந்தால், சமூகத்திற்கு நல்லது நடக்கும் என்று நம்புகின்றேன். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த ஆக்கத்தையும் எழுதுகின்றேன்.
குறிப்பாக, கண்டி மாவட்ட மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை பலமுறை பாராளுமன்ற அனுப்பியிருக்கின்றனர். பெரிதாகக் கண்டது எதுவுமில்லை. குறைந்த பட்சம் அவர் இல்லாத போது, கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் படுத்துவதற்கு ஏற்ற ஒருவரையாவது அடையாளப்படுத்தியிருக்கின்றாரா? சிந்தியுங்கள் சகோதரரே.
அக்குறணை பிரதேச சபைத் தலைவர் சகோதரர் சிம்சான், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நீண்டகாலமாக பிரதேச சபையில் இருந்தார். மாகாண சபைக்கு சந்தர்ப்பமளிக்காமல், அவரை ஓரம்கட்டியே வந்தார்கள். 2014 மாகாண சபைத் தேர்தலில் பொறுத்தமில்லாதவர்களை அபேட்சகராகக் களமிறக்கியதால், தோல்வியைத் தழுவினார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் இருகின்ற அக்குறணையில் தகுதியான ஒருவர் இல்லையா? தகுதியானவர்கள் வந்து, ஊருக்கு நல்லது நடந்துவிடக் கூடாது என்பதில் குறியோடு இருக்கின்றார்கள் என்பதுதான் காரணம்.
கடந்த முறை அக்குறணைக்கு வந்து, பள்ளியில் வைத்து ஒரு குழுவிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு, ஏமாற்றியுள்ளதாக காரசாரமான சில பதிவுகளை சமூக ஊடகங்களில் பார்க்கக் கிடைத்தது. இது குறித்து கடந்த வருடம் பத்திரிகைகளில் சில ஆக்கங்களை வாசிக்கக் கிடைத்தது.
அந்த ஒப்பந்தத்தை மக்களுக்கு விநியோகித்ததால் நானும் பார்த்திருக்கின்றேன். 2011 பிரதேச சபைத் தேர்தலில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தையும் பார்த்திருக்கின்றேன். அவற்றில் உள்ளவற்றை ஓரளவுக்காவது செய்திருந்தால், மிக நன்றாக இருந்திருக்கும். அமைச்சர் ஹக்கீமுடைய வாக்கு வங்கி கூட வெகுவாக அதிகரித்திருக்கும்.
குறித்த ஒப்பந்தத்தில், அந்த சகோதரர்களுக்கு வீடு கட்டிக் கேட்டிருக்கவில்லை. அவர்களது கட்சிக்காரர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு தொழில் கேட்டிருக்கவில்லை. மாறாக, பல தேவைகள் உள்ள அக்குரணையின் அபிவிருத்திக்கென ஒரு குழுவை நியமித்து, அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இருந்தது. அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று, சுமார் 80 கோடி ரூபாவுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதாக எழுதி, முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் கையொப்பமிட்டிருந்தார்.
மேற்குறித்த ஒப்பந்தம், பள்ளியில் வைத்து உலமாக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் முன்னால் வைத்து கலந்துரையாடப்பட்டு கைச்சாத்திடப்பட்டதாகவும் அறியக் கிடைக்கின்றது. ஒவ்வொரு கட்டத்திலும் சூசகமான நடந்துகொண்டு அரசியல் செய்யும் அமைச்சர் ஹக்கீம் அக்குறணையிலுள்ள இவர்களிடத்தில் மாட்டிக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். எழுதிக் கொடுத்து, எதுவும் செய்யாது போனதால்தான், இப்பிரச்சினை குறித்து இதுவரையில் எவ்விதக் கருத்தக்களையும் வெளியிட அவரால் முடியவில்லை என்பதுதான் உண்மை.
இறுதியாக ஒன்றைச் சொல்லியாக வேண்டும், நீங்களாக இருந்தாலும் சரி, அமைச்சர் ஹக்கீமாக இருந்தாலும் அப்பாவி மக்களை ஏமாற்றி காரியமாற்றமால் மனசாட்சியோடு தீர்மானம் எடுத்துக் செயற்பட்டால் நல்லது.

Post a Comment