Header Ads



சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி சபை - ஜும்ஆ பள்ளிவாசல் நடவடிக்கையை மேற்கொள்ளுமா..?

-நவாஸ் சௌபி-

இலங்கையின் முஸ்லிம் பிரதேசங்களில் 100 வீதமாக முஸ்லிம்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரே ஒரு பிரதேச செயலகம் சாய்ந்தமருது பிரசேத செயலகமாகும். 8.2 சதூர மீற்றர் நிலப்பரப்பினை கொண்ட இப்பிரதேசத்தில் 17 கிராம சேவகர் பிரிவுகளும் 7900 குடும்பங்களும் இருப்பதோடு 27253 மக்கள் தொகையும் 18391 வாக்காளர் தொகையும் காணப்படுகிறது. 

ஒரு தனியான அதிகார சபையை உருவாக்குவதற்கான எல்லாத் தகைமைகளையும் கொண்ட சாய்ந்தமருது மக்களின் பிரதேச சபை கோரிக்கையானது சுமார் 30 வருடங்களாக முன்வைக்கப்பட்டுவருகின்ற ஒரு வரலாற்றுத் தேவையாக அடையாளம் பெற்றிருக்கின்றது. 

இலங்கையின் கடந்தகால நிர்வாகக் கட்டமைப்பில் இப்பிரதேசம் தனித்துவமான ஆள்புல மற்றும் நில அதிகாரங்களைப் பெற்றிருந்தமையும் சாய்ந்தமருதுக்கென்று ஒரு பிரதேச சபையைப் பெறுவதில் ஒரு முக்கிய சான்றாக இருக்கிறது. 

கரவாகுப்பற்றுக்கு ஆங்கிலயேர் காலத்தில் கிராமசேவகர் பிரிவுகளுக்கு இலக்கமிடப்பட்ட போது சாய்ந்தமருதுக்கு கேஃபீ 47 தொடக்கம் கேஃபீ 53 வரையான ஏழு குறிச்சிகளையும் 1928 இல் கரைவாகு தெற்கு கிராமசபை உருவாக்கப்பட்டு பத்து வட்டாரங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தன.(நன்றி : நல்லுறவு – எம்.எம்.எம்.நூறுல்ஹக்)

இவ்வாறு நீண்டகாலமாக சாய்ந்தமருதுக்கென்று கரைவாகு தெற்கு கிராமாட்சி மன்றம் தனியாக இயங்கி வந்த வேளையில் 1987 இல் கொண்டுவரப்பட்ட பிரதேச சபைகள் சட்டத்தின் பின்பே சாய்ந்தமருது, கல்முனை பிரதேச சபையின் எல்லைக்குள்ளானது. இதன்படி 1987 இல் இப்பிரதேச சபைகள் தனியாகப் பிரிகின்றபோது சாய்ந்தமருதுக்கான ஒரு தனியான பிரதேச சபையை கல்முனையுடன் இணையாதவாறு ஏற்படுத்தி இருக்கும் நியாயங்கள் அப்போதிருந்தும் அது கல்முனையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. 

இதனை உரிய தருணமான அத்தருணத்தில் செய்யாதுவிட்டதனால் அது இன்று வேறுவிதமான பிரச்சாரங்களுக்கு வழிவிட்டிருக்கிறது. அதாவது காலாதிகாலமாக சாய்ந்தமருது கல்முனையுடன் சேர்ந்து இருந்ததாகவும் அது இப்போது கல்முனையில் இருந்து பிரிய நினைப்பது ஒரு புதிய விடயமாகவும் வரலாற்றுக்கு ஒரு தோற்றப்பாட்டை கொடுத்துவிட்டது. இதனால் சாய்ந்தமருது பிரதேச சபை கோரிக்கை விரும்பியோ விரும்பாமலோ ஒரு பிரதேச வாதமான பிரச்சினையாக உருமாறிவிட்டது.

எனவே முதலில் சாய்ந்தமருதுவுக்கு ஒரு தனியான அதிகார சபையை கொடுப்பதற்கு எதிராகச் சிந்திக்கின்றவர்கள் சாய்ந்தமருது 1987க்கு முன் எந்த அதிகாரத்தைப் பெற்று அதன் ஆள்புல நில எல்;லைக்குள் இருந்தது என்பதனையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொள்வதனால் சாய்ந்தமருது அதிகாரசபை கோரிக்கையின் பின்னால் உள்ள பிரதேசவாதம் தொடர்பான வாதங்களையும் முற்றாகத் தவிர்ந்துகொள்ளலாம்.

இதனை நன்கு புரிந்து கொண்ட ஒருவராக 21.04.1999 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற பிரதேச சபைகள் திருத்த சட்ட மூல உரையில் கலந்துகொண்டு உரையாற்றிய பெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் : 'சாய்ந்தமருதுவுக்கு தனியான பிரதேச சபையை ஏற்படுத்தி தரவேண்டும்' என்று பாராளுமன்றத்திலேயே குரல் பதித்திருக்கிறார். அதேதினம் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும் : 'ஆணைக்குழுவின் முன்பு கல்முனை பிரதேசத்திலே சாய்ந்தமருதுக்கொன்று பிரத்தியேக செயலகமும் பிரதேச சபையும் அமைய வேண்டும் என்று இருபதுக்கும் மேற்பட்ட மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன' என்ற விபரத்தையும் நினைவுபடுத்தி பெரும் தலைவர் அஷ்ரபின் கருத்தை அவர் மேலும் வலுப்படுத்தியும் இருந்தார். (நன்றி : நல்லுறவு – எம்.எம்.எம். நூறுல்ஹக்)

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் இருதலைவர்களும் சாய்ந்தமருது தனியான பிரதேச சபைக் கோரிக்கையை அவர்களே உணர்ந்து குரல் பதித்த போதிலும் இதற்கான ஒரு முடிவினையோ அல்லது விடிவினையோ இன்றுவரை முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்படுத்திக் கொடுக்க முடியாமலே இருந்துவருவதும் மறுபுறம் அவதானிக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றது.

இப்படி சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகாரச சபைக் கோரிக்கையானது அதன் அவசியத்தை மிகப் பலமாகக் கொண்டிருந்த போதிலும் அது ஏன் இன்றுவரை நிறைவேறாமல் காலத்தைக் கடத்திக்கொண்டு வருகிறது. என்பதனை சிந்திப்பதில் அதற்கு தடையாகவுள்ள விடயங்களையும் சவாலக எழுகின்ற பிரச்சினைகளையும் முதலில் ஒழுங்குபடுத்த வேண்டிய ஒரு பொதுவான அமைப்பு இதுவிடயத்தில் செயற்படத் தொடங்க வேண்டும்.

சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகாரச சபைக் கோரிக்கை இதுவரை முற்றுப் பெறாமல் இருந்தமைக்கும் ஒரு காரணம் அது எடுப்பார் கைப்பிள்ளைபோல் காலத்திற்கு காலம் உருவாகின்ற அரசியல் பிரமுகர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு கோஷமாக இருந்துவந்தமையும் ஆகும். அரசியல் கட்சிகள் இதனை முன்னெடுக்கின்ற போது அது ஒரு கட்சி சார்ந்த மக்களை மாத்திரம் பின்னால் வைத்திருப்பதாகவே தெரிந்தது மாறாக இக்கோரிக்கையின் பின்னால் ஊர் மக்கள் முழுமையாக நிற்பதாகபத் தெரியவில்லை.

எனவே ஊர் மக்கள் சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகாரச சபைக் கோரிக்கையின் பின்னால் நிற்பதற்கான ஒரு பொதுஅமைப்பு அரசியலுக்கு அப்பால் இப்பிரச்சினையை பொறுப்பேற்று நடத்த முன்வர வேண்டும். அதற்கு பொருத்தமாக சாய்ந்தமருது பெரிய ஜும்ஆ பள்ளிவாசலைத் தவிர வேறு எந்த பொது அமைப்பும் முன்நின்று ஒரு தீர்வை பெற முடியாது. 

எனவே தற்போது நிலவுகின்ற தேசிய அரசியலில் காணப்படுகின்ற சாதகமான நிலைமைகளை எமக்குச் சாதகமாக்கிக்கொண்டு சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகாரச சபைக் கோரிக்கையை வென்றெடுக்க ஒரு செயற்பாட்டு வடிவத்தை ஒழுங்குபடுத்தும் பணியை இதன்பிறகாவது சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் செய்ய முன்வர வேண்டும். 

இதனை சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுக்கின்ற போது சாய்ந்தமருது பொதுமக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பள்ளியின் முடிவுக்கும் வழிநடத்தலுக்கும் கட்டுப்பட்டு தங்களது பலத்தையும் ஆதரவையும் வழங்க முன்வர முடியும். அப்போது உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிப்பான ஒரு நிலவரத்தை உருவாக்கமால் ஊர் மக்களை நிதானப்படுத்தி மிகவும் அமைதியான முறையில் சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகாரச சபைக் கோரிக்கையை சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கிடையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதற்கு இன்று சாதகமாக இருக்கின்ற அரசியல் வழிமுறை எது என்று அதனை தெரிவு செய்து அதன் அரசியல் பிரதிநிதிகளை ஊர் மட்டத்திலிருந்து தேசிய மட்டம்வரை பயன்படுத்தும் வகையில் பல கலந்துரையாடல்ளை செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகாரச சபையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகம் தேடிக்கொள்வது ஆகச் சிறந்த ஒரு நிலையாகலாம்.

சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு அளிக்கும் வாக்குகளுக்கு கல்முனை மாநகர சபையில் ஒரு மேயரைப்பெறுவது  ஊரின் அபிலாசைகளுக்கு முழுமையானதும் நிரந்தமானதுமான ஒரு தீர்வாக அமையாது. முதலில் சாய்ந்தமருதுக்கான ஒரு தனியான அதிகார சபையைப் பெற வேண்டும். அதற்கு எமது வாக்குளை ஒட்டுமொத்தமாக நாங்கள் பயன்டுபடுத்த எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். 

யாரால் எங்களுடைய சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகாரச சபைக் கோரிக்கையை தேர்தலுக்கு முன்பாக நிறைவேற்றித் தர முடியுமோ  அவர்களுக்கு எங்கள் வாக்குகளை அளிக்கும் ஒரு முடிவினை சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளியுடன் சேர்ந்து சாய்ந்தமருது மக்கள் எடுக்க வேண்டும். அவ்வாறில்லாத நிலையில் நாம் எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும். இதனை உணர்ச்சிவசப்படாத நிலையில் நாம் மிக அமைதியாக வெளிப்படுத்த வேண்டும்.

சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகார சபைக் கோரிக்கையை நாம் பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்களை ஸ்னேக பூர்வமாக தீர்க்க வேண்டும். இதுவிடயத்தில் எல்லாம் தெரிந்திருக்கின்ற இந்தப் பரம்பரைகள் வாழுகின்ற இந்தக் காலத்திலேயே இப்பிரதேச மக்கள் இதற்கான ஒரு நிலைப்பாட்டை கலந்துரையாடி ஒரு தீர்;வுக்கு வரவேண்டும். மாறாக எதிர்காலத்தில் இதிலுள்ள புரியாமைகள் இன்னும் அதிகரிக்க இப்போதுள்ள தலைமுறை இடமளிக்க கூடாது. 

கல்முனைத் தொகுதியினதும் கல்முனை மண்ணினதும் அரசியல்வாதியாக ஹரீஸ் அவர்கள் இருப்பதனால் அவரை முன்னிறுத்தி சாய்ந்தமருது பிரதேச சபை விடயத்தில் கல்முனை மக்களின் கருத்துக்கள் அபிலாசைகள் தொடர்பாக சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலினால் கலந்துரையடப்படல் வேண்டும். கடந்த ஜனாதிதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்க மேடையில் சாய்ந்தமருது பிரதேச சபையை உருவாக்குவதற்கு நான் ஒரு போதும் தடையானவன் இல்லை என்ற வாக்குறுதியினையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அளித்திருப்பதும் இதற்கு மேலும் சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சாய்ந்தமருது சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சிக் கோரிக்கையை அடைவதில் இன்னும் குறைந்தபட்சம் ஒரு பிரகடனத்தையாவது சாய்ந்தமருது மக்கள் செய்ய முற்படாத நிலையில் இதற்கான ஒரு முன்னெடுப்பை ஜும்ஆ பள்ளிவாசலுடனும் பொதுமக்களுடனும் இணைந்து பொது அமைப்புக்கள், விiளாயட்டுக் கழகங்கள், வர்த்தக அமைப்புக்கள், கல்வி சார் அமைப்புக்கள், சமூக நலன்புரி அமைப்புக்கள், பல கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட முன்வரவேண்டும். இவ்வாறு செய்தால் மாத்திரமே சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சிக் கோரிக்கை நிறைவேறும் வாயப்புகள் கிட்டும். இல்லை என்றால் அது தொடர்ந்தும் தோல்வியான முடிவுகளையே எட்டும்.

இப்படி முப்பது வருடத் தொடர்ச்சியைக் கொண்ட சாய்ந்தமருது தனியான உள்ளூராட்சி அதிகாரச சபைக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கு எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்தும்வகையில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமா? அதன் ஆரம்பமாக சாய்ந்தமருது பிரகடனத்தை அது செய்ய முற்படுமா?

1 comment:

  1. saithamaruthu jummah pallivasal nirvaham palathadavaikal muyatchi seythathodu maddumallamal thatpothu ithakkana nadavadikkaikalai munneduththu varuhinramai kurippidaththakkathu

    ReplyDelete

Powered by Blogger.