தமிழ், முஸ்லிம் தரப்பு ஆட்சி அதிகாரத்தினை பகிர்ந்துகொள்ள முன்வந்தமை முக்கிய முன்செல்கையாகும்!
-எம்.பௌசர்-
கிழக்கு மாகாண சபையில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே அரசியல் அதிகாரத்தினை பகிர்ந்து கொள்ள எட்டப்பட்டுள்ள முடிவு அரசியல் , சமூக நோக்கில் முக்கியத்துவமான ஒரு முன்னேற்றமாகும். இதனை ஒரு அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு முன்னோக்கி செல்லும் பொறுப்பு அரசியல் தலைமைகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகங்களின் கைகளில் தங்கியுள்ளது. அமைச்சரவை பங்கீடு, மற்றும் ஏனைய ஒதுக்கீடுகளில் முரண்பாடுகள் ஏற்படா வண்ணம் இரு தரப்பும் நடந்து கொள்வதற்கான பக்குவமே இந்த முடிவின் வெற்றியை கட்டிக் காக்கும். வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல, அதனை நம்பிக்கையளிக்கத் தக்க வகையில் செயற்பாட்டுத் தளத்தில் நிரூபணம் செய்வதும் மிக அவசியமானது.
கிழக்கு மாகாண சபையில் ஒரு முன்மாதிரியான ஐக்கிய மாகாண ஆட்சிக்கு உடன்பாடு கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகளை பாராட்டுவதுடன், பல்வேறு முரண்பாடுகளையும் விமர்சனங்களையும் நம்பிக்கையீனத்தினையும் கடந்து ஒரு காலகட்டத்தின் அரசியல் தேவையை விளங்கிக் கொண்டமைக்கும் இரு தரப்புக்கும் நன்றி சொல்வது நமது கடமையாகும். இரு கட்சிகளையும் இணக்கம் காண பல தளங்களில் வேலை செய்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இலங்கையில் தமிழ் முஸ்லிம் தரப்புகளிடையே அரசியல் உரையாடலுக்கான வாய்ப்புகள் பெருமளவில் அடைபட்டே கிடக்கிறது.இரு துருவ நிலைப்பாடும்,தன்னினம் சார்ந்த மிகையான இனவாதமும் மேலோங்கி கிடக்கிறது.முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்கி பொதுப்புள்ளிகளை சிதைக்கும் பணியையே பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். நேர்மறையான பார்வைகளை விட எதிர்மறையான பார்வைகளே நமது சிந்தனையையும் செயற்பாடுகளையும் வழி நடாத்துகிறது. இந்தப் போக்கு வடக்கு கிழக்கு தமிழர் முஸ்லிம் தாயகத்தில் இணைந்தும், தமது இன, கலாசார அடையாளங்களை பேணியும் வாழ வேண்டிய தமிழ் , முஸ்லிம் மக்களை கூறுபோடுகிறது.அரசியல் ,சமூகத் தளங்களில் ஐக்கியப்பட்டு வேலை செய்வதனை சிதைக்கிறது. அரசியல், பண்பாட்டு உரையாடலுக்கான பொது வெளியை இல்லாமல் ஆக்குகிறது.
சமூக ,மனித வாழ்வின் திசைவழி முரண்பாடுகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டதல்ல, உடன்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டதே .பல அரசியல் முரண்பாடுகள் இரு சமூகங்களையும் விலகி நிற்க வைக்கின்ற அதே நேரம் சில அரசியல் ஒற்றுமைகளும் சமூக யதார்த்தங்களும் இரு சமூகங்களையும் ஒன்றிணைக்கின்றன. முரண்பாடுகளுக்கான புள்ளிகள் எவை, உடன்பாடுகளுக்கான புள்ளிகள் எவை என்பன குறித்த புரிதல் இரு தரப்புக்கும் இன்றியமையமையாத கணக்கெடுப்புகளாகும்.இதன் அடிப்படைத் தெளிவு அரசியல் தலைமைகளுக்கு மட்டுமல்ல, சிவில் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்துப் பிரிவினருக்கும் அவசியமாகும்.
மகிந்த ராஜபக்ச அரசின் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை, பொதுபலசேனவின் எழுச்சி என்பன சிறுபான்மை இனங்களின் மீதான அரசின் அடக்குமுறை எப்படி இருக்கும் என்பதை இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு நாலு வருடங்களுக்குள் புரிய வைத்தது. மகிந்த ராஜபக்ச அரசின் சொற்பகால அடக்குமுறையை எதிர் கொள்ள வழியின்றி முஸ்லிம் சமூகம் திகைத்து நின்றதுதான் உண்மை. அந்த நேரங்களில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மகிந்த ஒடுக்குமுறை அரசுடன்தான் ஒட்டிக் கிடந்தது மட்டுமல்லாது ஒடுக்குமுறை அரசை காப்பாற்றியும் வந்தது. அந்த நேரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ், சிங்கள முற்போக்கு சக்திகள் முஸ்லிம்களுக்காக பேசின, முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகெதிராக வெகுஜன போராட்டங்களை நடத்தின. அந்த காலகட்டத்தில் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான ஒற்றுமை பற்றிய தேவையும் வேண்டுதலும் , வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களிடையேயும் தென்னிலங்கை முஸ்லிம்களாலும் வேண்டப்பட்டது.
மகிந்த அரசு தோற்கடிக்கப்பட்டு , மைத்திரி வென்றதன் பின் ஒடுக்கப்படுகின்ற சிறுபான்மையினரிடையேயான ஒற்றுமைக்கு ஒரு தேவையில்லை, மைய சிங்கள அரசின் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறை இனித் தீர்ந்து விட்டது என முஸ்லிம் தரப்பு பூரணமாக நம்பினால், அதனைவிட ஒரு தப்புக்கணக்கு இல்லை என துணிந்து சொல்ல முடியும். சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் அரசியலையும் அதன் போக்கையும் அரசியல் தன்மையில் விளங்கிக் கொண்டோருக்கு இதில் எந்த மயக்கமும் இல்லை. ஒரு தேர்தலின் மூலமும், ஒரு ஆட்சி மாற்றத்தின் மூலமும் எல்லாம் முடிந்து போவதுமில்லை.
புதிய அரசாங்கம் பதவி ஏற்றதன் பின் ,கிழக்கு மாகாண சபையில் , எந்த இனத்தினை சேர்ந்தவர் முதலமைச்சராக வர வேண்டுமென்ற அரசியல் விவாதமொன்று எழுந்த போது அந்த விவாதத்தின் உட்சாரமாக இருந்த விடயம் தமிழ், முஸ்லிம் சமூகங்களை அரசியல் ரீதியாக மோத வைக்கின்ற , எதிரெதிர் நிலைக்கு தள்ளுகின்ற போக்கையே கொண்டிருந்தது நாமறிந்ததே. பெருமளவிலான ஊடகங்கள் தொடக்கம் பொதுவெளிகள் வரை இந்த நிலைக்கு தீனி வார்ப்பதில் காட்டிய அக்கறையை மிக வெளிப்படையாகவே காணக் கூடியதாக இருந்தது. மகிந்த பதவியில் இருந்த போது உணரப்பட்ட வரலாற்றுத் தேவை உடன் மறக்கப்பட்டது.
இப்படியானதொரு எதிரெதிர் நிலை ஏற்பட்டு விடக் கூடாது, இந்த நிலைமையை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்புகள், அரசியல் ஏதுக்கள் உள்ளதா என்பதை கண்டடைய, அதற்கு முயற்சிக்காத , அக்கறை காட்ட முயலாத போக்கு இரு தரப்பினரிடமும் இருந்தமை மிகத் துரதிருஸ்டவசமான நிலை என்பதுடன், இரு சமூக அக மன நிலையையும் துல்லியமாக நமக்கு எடுத்துக் காட்டியது.
பெருமளவில் வாதவிவாதங்களும் கற்பிதங்களும் நம்பிக்கையீனங்களும் இரு தரப்பிலும் நிலவிய சூழலில் , நமக்குள் குடி கொண்டிருந்த முரண்பட்ட போக்குகளை கடந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தினை கூட்டாக பகிர்ந்து கொள்ள முன் வந்தமை தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான இன்றைய அரசியல், சமூக அர்த்தத்தில் முக்கியமான முன் செல்கையாகும். இது முதல் தடவையாக தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகளிடையே அதிகாரத்தினை பகிர்ந்து கொண்டு, ஒரே மேசையில் இருந்து அரசியல் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான வாசலை திறந்துள்ளது.இந்த வாய்ப்பு வரலாற்றில் இதற்கு முன் ஒரு போதும் நிகழ்ந்ததில்லை.அந்த வகையில் இதன் அரசியல் தன்மை ஒரு புதிய பண்பு மாற்றத்தினை உருவாக்கி உள்ளது.தமிழர், முஸ்லிம் தரப்பினரிடையே பேசித் தீர்க்க வேண்டிய பல அரசியல் விடயங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட ஒரு முதல் படியாக இந்த அரங்கு உருவாகியுள்ளது.
இந்த கட்டுரையாளரைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் ஆட்சி அதிகாரத்தினை கிழக்கு மாகாண சபையில் பகிர்ந்து கொள்ள முன் வந்து விட்டதால், இதுவரை தமிழ், முஸ்லிம் மக்களிடையே நிலவிய முரண்பாடுகள் ஒரு அரசியல் தீர்மானத்தினால் தீர்க்கப்பட்டு விட்டது என்பதல்ல சொல்ல வருகின்ற விடயம். அடைபட்டிருந்த ஒரு வாசல் இதன் வழியாக திறந்திருக்கிறது. இன்னும் பல வாசல்கள் திறக்கப்படல் வேண்டும். இரு தரப்பிலும் இதற்கு அரசியல் முதிர்ச்சியும் நல்லெண்ண முயற்சிகளும் பரஸ்பர விட்டுக் கொடுப்புகளும் எல்லாவற்றிற்கும் மேலாக தன்னினம் சார்ந்த சுயவிமர்சனமும் தேவைப்படுகிறது.
தென்னிலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் முரண்பாடுகளை மேலும் பெருக்கும் வகையில் எப்படி வாழ முடியாதோ, அதே போல்தான் வடக்கு கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் முரண்பாடுகளை மேலும் பெருக்கும் வகையில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது. வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் தமிழர் முஸ்லிம் விவகாரம் என்பது, இரு தரப்பு கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளுடன் மட்டும் தொடர்புபட்ட விடயமல்ல. அதே போல் மத்திய ஆட்சியில் தமது அமைச்சு அதிகாரத்தினை தக்க வைப்பதற்கான முஸ்லிம் காங்கிரஸின் விடயமுமல்ல. அதேபோல்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிலரின் முஸ்லிம் இன அடையாளத்தினை, முஸ்லிம் மக்களின் தனித்துவத்தினை , அவர்களுக்கான அரசியல் தீர்வை மறுக்கும் நிலைப்பாட்டுடன் மட்டும் தொடர்புபட்டதுமல்ல. இது அனைத்து மக்களுடனும், வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து ஜனநாயக நிறுவனங்களுடனும் நீதிக்கும் அரசியல் உரிமைக்கும், சமத்துவ வாழ்விற்குமான கொள்கையுடன் தொடர்புபட்ட பரந்த விடயம்.
இக்கட்டுரையாளர் தமிழ், முஸ்லிம் சமூக சக்திகளிடன் தொடர்புபட்டவர் என்கிற வகையில் கண்ட ஒரு பலவீனமான அம்சத்தினை சொல்வது முக்கியம் எனக் கருதுகிறேன். கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய மாகாண ஆட்சிக்கு உடன்பாடு கண்ட தனை இக்கட்சிகளை விமர்சிப்பவர்கள் கண்டு கொள்ளாததுடன் , இன்னும் ஒரு சிலர் நம்பிக்கையீனத்தினை விதைக்க முற்படுகின்றனர். அக அரசியலில் தமக்கு இருக்கும் முரண்பாடுகளை ஒரு பொதுவான விடயத்தில் கொண்டு வந்து பொருத்தி தமது அரசியல் எதிர்ப்பினை காட்ட வெளிக்கிடுகிறார்களே தவிர, வாய்ப்புகளை பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான ஐக்கியத்திற்கான ஒரு செயன்முறையை முன்தள்ள பலர் தாயாரகயில்லை என்பது இங்கு கவனிக்கத் தக்கது. ஆகையால் அரசியல் கட்சிகளின் அடையாளங்கள் கடந்து ,தொழிலாளர்கள், கல்வி கற்ற பிரிவினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பெண்கள் , சமூக சக்திகள் இனி அடுத்த கட்டத்தினை கையெடுக்க வேண்டும். விமர்சனம் மட்டும்தான் என்பதை தாண்டி, மக்கள் நலனுக்கான செயற்பாடும் அழுத்தங்களும் உள்ளதை அவர்கள் முன் வந்து மெய்ப்படுத்துதல் வேண்டும்.
.jpg)
Post a Comment