Header Ads



ஆசிரியர் முஸ்னத்தின் வேதனை, தவம் குறுக்கீடு, அடக்கினார் ஹக்கீம் - மாவட்ட கூட்டத்தில் காரசாரம்..!

ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பிறகு, அக்கரைப்பற்றில் மு.காங்கிரசைச் சேர்ந்த சிலர், மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், மாற்றுக் கட்சிக்காரர்களின் வீடுகளை இலக்கு வைத்து - அவர்கள் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழு உறுப்பினரும், ஆசிரியருமான முஸ்னத் சரீப்தீன் தெரிவித்தார். 

மு.காங்கிரசின் தலைவர் மற்றும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் முன்னிலையில் வைத்தே ஆசிரியர் முஸ்னத் இதனைக் கூறினார். 

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அக்கரைப்பற்றிலுள்ள முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஆதரவாளர்களுடைய வீடுகள் உடைக்கப்பட்டதாகவும், மணிக் கூட்டுக் கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அதாஉல்லாவின் கட்டவுட்களை கழற்றி விட்டு, அந்த இடத்தில், மு.காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களின் படங்களைக் கொண்ட கட்டவுட்கள் வைக்கப்பட்டதாகவும் ஆசிரியர் முஸ்னத் இதன்போது சுட்டிக் காட்டினார். 

முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற் குழுக் கூட்டம், அண்மையில் மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மத்திய குழு உறுப்பினரும், ஆசிரியருமான முஸ்னத் மேற்கண்ட விடயங்களை வெளிப்படுத்தினார். 

இதன்போது, கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம், குறுக்கிட்டு, முஸ்னத் அவர்களை நோக்கி ஆத்திரத்துடன் மிகவும் சத்தமாக பேசத் தொடங்கினார். 

இதனை அவதானித்த, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் அவர்கள், தவத்தை நோக்கி குடுக்கீடு செய்ய வேண்டாம் என உத்தரவிட்டதோடு, ஆசிரியர் முஸ்னத்தை தொடர்ந்து பேசுமாறு கூறினார்.

இதனையடுத்து, ஆசிரியர் முஸ்னத் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

'கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுபற்றி நாம் அறிவோம். சர்வதிகாரம், அராஜகம், அட்டூழியம், பொய், பித்தலாட்டம் ஆகிவைதான் அந்தத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டன. அதனால்தான், மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.

ஜனநாயகம் இருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் இருக்க வேண்டும். அதற்காகத்தான் நாம் மு.காங்கிசுக்காக குரல் கொடுத்தோமே தவிர, யாரையும் பாராளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்கோ, அமைச்சர்களாக்குவதற்கோ, முதலமைச்சர்களாக்குவதற்கோ நாங்கள் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து செயற்படவில்லை. 

முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்பதுதான் முஸ்லிம் காங்கிரசின் கடமையாகும். அதை விடுத்து, முஸ்லிம் காங்கிரசை மட்டும் பாதுகாத்துக் கொண்டிருப்பது முஸ்லிம் சமூகத்தின் கடமையாக மாறி விடக் கூடாது. 

எனவே, இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை. தவறாக இருப்பவர்கள் தங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். உங்களில் எவரையும் ஓரங்கட்ட வேண்டும் என்று நாம் கேட்கவில்லை. 

அக்கரைப்பற்றிலிருக்கின்ற முக்கியமான பிரச்சினை நுரைச்சோலை வீட்டுத் திட்டமாகும். இதை உருவாக்கியவர் முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப். இந்த வீட்டுத் திட்டத்தை முஸ்லிம் சமூகத்துக்காக அவர் கொண்டு வந்தார். ஆனால், இந்த வீட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்து மக்களிடம் கொடுத்தால், மக்களிடம் பேரியல் அஷ்ரப் அதிகளவு வாக்குகளைப் பெற்று விடுவார் என்று சில அரசியல்வாதிகள் பயந்தனர். ஆதனால், நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தை தடுத்து நிறுத்தும் முயற்சிகள் நடைபெற்றன. இதனால், தற்போது 500 வீடுகளைக் கொண்ட நுரைச்சோலை வீட்டுத் திட்டமானது பாம்பும், கீரிகளும் வசிக்கின்ற புற்றுக்களாக மாறிப்போயுள்ளன. 

சிங்கள பெரும்பான்மை அரசுகள் - முஸ்லிம் சமூகத்துக்கு எதைத் தருகிறது என்பதற்கு அப்பால், அரசுகள் தருவதைத் தடுத்து நிறுத்தும் நிலையில் நமது உள்கட்சி நிலைவரம் உள்ளது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் சகோதரர் தவம் அவர்கள் வந்து இணையலாம். ஆனால், தவம் அவர்களுடன் மு.காங்கிரஸ் இணைய வேண்டும் என எதிர்பார்ப்பது தர்மமல்ல. 

அக்கரைப்பற்றிலே ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பிறகு, மு.காங்கிரசைச் சேர்ந்த சிலர் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது. முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஆதரவாளர்களுடைய வீடுகள் உடைக்கப்பட்டன. மணிக் கூட்டுக் கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அதாஉல்லாவின் கட்டவுட்களை கழற்றி விட்டு, நமது கட்சிப் பிரமுகர்களின் படங்களைக் கொண்ட கட்டவுட்களை வைத்தார்கள். இவையெல்லாம், எந்தவிதமான நல்லாட்சியின் கீழ் வருமென எமக்குத் தெரியவில்லை. 

இவ்வாறான அரசியல் கலாசாரங்கள் மாற வேண்டும். அப்படி நாம் மாறினால்தான் மக்கள் எங்களுடன் இருப்பார்கள்.  

மு.காங்கிரசிடம் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளார்கள். எனவே, எமது கட்சியை அவ்வளவு இலகுவில் வீழ்த்தி விட முடியாது என்று நாம் நினைக்க முடியாது. ஏனென்றால், மிகப் பாரிய அரசியல் அதிகாரங்களைக் கையில் வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். 

இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி பற்றி இப்போது பேசப்படுகிறது. முஸ்லிம் காங்கிரசுக்கு முதலைமைச்சர் பதவி கிடைக்குமா இல்லையா என்கிற விடயம் இழுபறியில் போகலாம். ஆனால், முஸ்லிம் காங்கிரசுக்குத்தான் முதலமைச்சர் பதவி என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அதை யாருக்குக் கொடுப்பது  என்பதில் இழுபறி இருப்பதென்பது சரியல்ல. அப்படி இழுபறி இருப்பதானது, நமது கட்சியின் கட்டமைப்பு ஆரோக்கியமாக இல்லை என்று அர்த்தமாகி விடும்.

முஸ்லிம் காங்கிரசின் பயணத்தை, ஒரு சத்தியப் போராட்டமாக முன்கொண்டு செல்வதென்றால் முன்கொண்டு செல்லுங்கள். இல்லையென்றால், மாபெரும் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் சொன்னது போல, இந்தக் கட்சி அழிந்து விடட்டும். 

எனவே, இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, கட்சியினுடைய ஒவ்வொரு பிரதேசத்து மத்திய குழுக்களையும் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்க வேண்டும். கட்சியின் பிரதேச மத்திய குழுக்களை அதிலுள்ள சில உறுப்பினர்கள் தங்களின் அரசியல் லாபங்களுக்காக, தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர நினைக்கின்றார்கள். 

பாராளுமன்ற உறுப்பினர்களோ, மாகாணசபை உறுப்பினர்களோ கட்சியின் பிரதேச மத்திய குழுக்களைக் கைப்பற்றும் முயற்சியினை அனுமதிக்க முடியாது. மாறாக, கட்சியின் பிரதேச மத்திய குழுக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கட்டுப்பட்டு இயங்க வேண்டும். கட்சியின் தலைமையும், உயர்பீடமும் இதனை உறுதி செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்' என்றார்.

1 comment:

  1. சகோதரர் தவம் அவர்கள் இளம் கன்று பயம் அறியாது டைப். ஆனால் ஒன்று அது என்னவென்றால் மத்திய ஆட்சிய பார்த்தா அது ரொம்ப சுமுகமாகா பல விட்டுகொடுப்புடனும், நல்லாட்சியுடனும் பயணிக்கிறது. ஆனால் தவம் செய்யும் இப்படியான பழிவாங்கும் செயல்கள் மிகவும் கேவலமானாதும், வருந்தததக்கத்தும். கொஞ்சம் தலைவர் இவரை கண்டிக்கவேண்டியது காலத்தின் தேவை ஆக உள்ளது ப்லீஸ்

    ReplyDelete

Powered by Blogger.