முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் பகுதி - 2
தலைவர்களைத் தள்ளிவைத்து குடிகள் தலைவர்களான கதை
-ஜஹங்கீர்-
இலங்கை அரசியல் வரலாற்றில் பல புதிய பதிவுகளை ஏற்படுத்திய தேர்தலாக 2015 ஜனாதிபதித் தேர்தல் அமைந்திருந்ததை நாம் அவதானிக்க முடிந்தது. சிறுபான்மை உறுப்பினர்கள் ஆளும் தரப்பிலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் எதிரணியிலும் அமர்ந்திருப்பது நாம் அறிந்தவகையில் எமக்குப் புது அனுபவம். உலக வரலாற்றில் கூட இப்படியான சம்பவம் எங்காவது நடந்திருக்கின்றதா என்று தேடிப்பார்த்தால் அப்படி ஒரு பதிவு எமது கண்களில் இதுவரை படவில்லை.
இடையன் மந்தைகளை மேய்ப்பது பற்றித்தான் நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் மந்தைகள் இடையனை மேய்த்த சம்பவம் கடந்த பொதுத் தேர்தலில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நடந்திருக்கின்றது. இதிலிருந்து முஸ்லிம் இடையர்களின் நிலை எப்படிப்போய் இருக்கின்றது என்பதனை எவருக்கும் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டிலுள்ள ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தனக்கு கடந்த அரசாங்கத்தால் செய்யப்பட்ட தொந்தரவுகள் நோவினைகள் காரணமாக அந்த நிகழ்வுகளுக்கு உரியவிதத்தில் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தமது வேதனையின் வெளிப்பாடாக அன்று எதிரணி வேட்பாளராக அறிமுகமான மைத்திரியை ஆதரிப்பது என்று ஓரணியில் திறண்ட நிலையில், இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக கட்சி வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் கடைசி நிமிடம் வரை மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள் - உறுதி மொழியும் கொடுத்தார்கள்.
வன்னித் தேர்தல் களத்தில் ஹூசைன் பாரூக் துணிவுடன் மைத்திரியை ஆதரிப்பது என்று எடுத்த முடிவு அங்கு அரசியல் ஜம்பவானாக பார்க்கப்பட்ட ரிஷாடுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மக்கள் ஹூசைன் பின்னால் அணிசேரும் வேகம் தனது அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தில் மனிதன் அடித்தார் பல்டி. ஹூசைன் பாரூக் அந்த ஆரோக்கியமான முடிவை எடுத்திருக்கவிட்டால் ரிஷாட் ஆட்கள் தேர்தலில் ராஜபக்ஷ அணியில்தான் என்பது நடு நிலையாளர்கள் கருத்து.
முஸ்லிம்களுக்கு உரிமை என்று அஷ்ரஃப் ஆரம்பித் கட்சியை இன்று வழி நடாத்துகின்றவர்கள் ராஜபக்ஷவுக்கு தேர்தலில் ஆதரவு தருவதாகக் கொடுத்தார்கள். வாக்குறுதியை மீறாது அவருடன் இருக்க எந்தெந்த நகர்வுகளை மேற் கொண்டர்கள் என்பதும், ராஜபக்ஷவுக்கு எதிராக இருந்தவர்களையும் ஒரு கட்டத்தில் பொருளாதரா ஆசைகாட்டி அவர் பக்கம் வலைத்துப் போட்டார்கள். கடைசி நேரத்தில் மைத்திரி அலை முஸ்லிம் சமூகத்தில் கரைபுரண்டு ஓடுவது கண்டு பல்டியடித்தார்கள் இவர்களும்.
தனது கட்டுப்பாட்டில் மக்கள் பிரதிநிகளை வைத்திருக்க முடியாத தலைமை வழக்கம் போல் இஸ்லாத்தைக் கொச்சசைப்படுத்தும் வகையில் பையத் என்றபேரில் தீர்மானம் என்று எடுத்து அவர்களைக் கட்டிப்போட முனைந்தார்கள். ஆனால் இந்த பையத் செய்தவர்களிலும் சிலர் இஸ்லாத்தின் பேரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தூக்கி எறிந்து தனிவழி போய் மஹிந்த மேடையில் நின்றார்கள்.
இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் கடைசி வாரத்தில் கூட கொடுக்கல் வாங்கள் தொடர்பாக பேரம்பேசி பல்டிக்குத் தயராக இருந்தார். அவர் கேட்ட தொகை 30 மில்லியன் வரை சென்றது. எனவே மு.கா.வும் அதன் தலைமையும் பல சந்தர்ப்பங்களில் பையத் என்ற புனித உடன்பாட்டைக் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருந்தார்கள். எதிர் காலத்திலும் தங்கள் இயலாமையை மூடிமறைக்க இவர்கள் இஸ்லாத்தை கொச்சைப் படுத்துவர்கள் என்பதனை இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உலமாக்கள் கூடி நின்று பையத்! பையத்தை மீறியவர்களுக்கு பையத் செய்து வைத்த உலமாக்கள் இன்றும் வாய்திறக்காமல் இருப்பதும் ஒருவகை அரசியல்தான்.
எனவேதான் கடந்த தேர்தலில் தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு முஸ்லிம் சமூகம் தீர்மானம் எடுத்த பின்னர், மு.கா. வந்து ஒட்டிக் கொண்டது. இன்று சமூக நலன்களுக்குதான் நாம் அமைச்சுப் பதவிகளை ஏற்றிருக்கின்றோம் என்று வேறு கதைக்கின்றார்கள்.
கடந்த ராஜபக்ஷ அரசில் முஸ்லிம் உறுப்பினர்கள் எல்லோரும் அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இருந்தார்கள். ஆனால் வரலாற்றில் மிகப் பெரிய பாதிப்புக்களும் அச்சுறுத்தல்களும் இந்தக் காலத்தில்தான் முஸ்லிம்களுக்கு வந்தது. எனவே சமூக நலத்துக்கு அமைச்சு வாங்கி இருக்கின்றோம் என்பது வேடிக்கையான கதை என்பதனை இந்த அரசியல் வியாபாரிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே எப்படியோ சமூகத்தின் பேரால் அமைச்சுப் பதவிகளையும் வாங்கிக் கொண்டார்கள் அவர்கள்;. இப்போது எப்படி தேர்தலில் கரைசேர்வது என்பதுதான் அவர்கள் கவலை. அனேகமாக யானையின் முதுகில் ஏறி அவர்கள் இந்தப் பயணத்தையும் போகக் கூடும். ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வழக்கம் போல் பல இடங்களில் இந்த முறையும் இலவு காத்த கிளியின் கதைதான்.
எனவே முஸ்லிம் பிரதிநித்துவம் முஸ்லிம் அமைச்சர்கள் என்பது எல்லாம் சமூகத்தற்கு ஒரு பாதுகாப்பான சிந்தனை அல்ல என்பதனை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் தலைவர்களை சமூகம் எப்படி தலைகுனிய வைத்ததோ அதே போன்று நமக்குத் துரோகம் பண்ணுகின்ற தலைவர்களை இந்த நாட்டு முஸ்லிம்கள் தமது இமாம்களாக ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.
தலைவர்கள் தான் சமூகத்தை வழிநடத்துவது வழக்கம். இப்போது முஸ்லிம் சமூகம் தலைவர்களை வழிநடாத்தத் துவங்கி இருக்கின்றது. இது எவ்வளவு தூரம் ஆரோக்கியமானது என்பது கேள்விக்குறி. இதிலிருந்து நமது அரசியல் தலைமைகளை சமூகம் இனியும் நம்பத் தயாரில்லை என்ற செய்தியைத் தெளிவாக சொல்லி இருக்கின்றது.
இந்த நாட்டிலுள்ள புத்திஜீவிகளும் ஊடகவியலாளர்களும் இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தை நெறிப்படுத்தகின்ற பணிகளை முன்னெடுக்க வேண்டி ஒரு தேவை நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
.jpg)
Post a Comment