சகல உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலத்தை 1 வருடத்தினால் நீடியுங்கள்
சகல உள்ளூராட்சி சபைகளி னதும் பதவிக் காலத்தை ஒரு வருடத்தினால் நீடிக்குமாறு அரசாங்கத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரியுள்ளது.
அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இதனை முன்னெடுக்குமாறும் மோசடிகளுடன் தொடர்புடைய உள்ளூராட்சி சபைகளுக்கு எதிராக விசாரணை நடத்துவதை தமது கட்சி எதிர்க்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி தேசிய அமைப்பாளரும் ஐ. ம. சு. மு. செயலாளருமான சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவி யலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய அரசாங்கம் தொடர்பில் எதுவித இணக்கப்பாட்டிற்கும் வரவில்லை என்று தெரிவித்த அவர் கட்சியிலுள்ள சகலரையும் ஒன்றிணைத்து
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெற நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையின் அவற்றின் காலத்தை ஒரு வருடத்தை நீடிக்குமாறு கோருகிறோம்.
ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் கட்சியிலுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்க இருக்கிறோம். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கென விஞ்ஞாபனமொன்றையும் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம்.
160 தேர்தல் தொகுதிகளிலுமுள்ள அமைப்பாளர்கள், அதனுடன் இணைந்த அமைப்புகளை பலப்படுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தை பெறவும் கூட்டமைப்பு ஆட்சியொன்றை மீண்டும் உருவாக்கவும் நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் அரசியலமைப்பை திருத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான நகல் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்களின் கருத்துக்களும் பெறப்பட வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த மே தின நிகழ்வை சிறப்பாக அனுஷ்டிக்க உத்தேசித்திருக்கிறோம். தாமரைத் தடாகத்திற்கு அருகில் இருந்து கெம்பல் மைதானம் வரை ஊர்வலம் நடத்தப்படும் என்றார்.
நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் அடங்கலாக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பலர் தொழில் இழந்துள்ளனர். இந்த திட்டங்களில் குறையிருந்தால் அவற்றை திருத்திக் கொள்ளவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். என்றும் சுசில் பிரேம் ஜெயந்த் குறிப்பிட்டார்.
வடமாகாண சபை தீர்மானத்தை கண்டிப்பதாக குறிப்பிட்ட அவர் நாட்டில் இனப்படுகொலை எதுவும் இடம்பெறவில்லை என்றும் கூறினார். நல்லிணக்கத்திற்கு உரிய அவகாசம் மலர்ந்துள்ளது. இங்கு இனப்படுகொலை நடந்திருந்தால் 11 ஆயிரம் முன்னாள் புலிகள் எவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டிருப்பர் எனவும் கேள்வி எழுப்பினார்.
.jpg)
Post a Comment