''மீள்குடியேற்றம் என்ற போர்வையில்''
-மர்லின் மரிக்கார்-
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வட மாகாணத்தைச் சாராத எவரும் இம்மாகாணத்தில் குடியேற நாம் இடமளிக்க மாட்டோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார்.
புதிய மீள் குடியேற்ற அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் நாமும் ஒன்றிணைந்து வட மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஒழுங்கு முறையாகவும், திட்டமிட்ட அடிப்படையிலும் மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அ. இ. ம. கா. தலைவரான அமைச்சர் ரிஸாட் பதியுத்தீன் மேலும் கூறியதாவது, வட மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்கு முறையாக மேற்கொள்ளுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதன் நிமித்தம் புதிய மீள்குடியேற்ற அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் நாம் இணைந்து செயற்படவிருக்கின்றோம்.
இதன்படிவட மாகாணத்தில் ஏற்கனவே வாழ்ந்தவர்கள் யார்? மீளக்குடியேறியவர்கள் யார் என்பன குறித்து நாம் முதலில் கவனம் செலுத்துவோம். கடந்த காலத்தில் சில சதி நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினர் இங்கு அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக நாம் புதிய மீள்குடியேற்ற அமைச்சர் வடக்கு முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாடி முடிவுகளை எடுப்போம்.
மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வட மாகாணத்தைச் சாராத சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ இம்மாகாணத்தில் குடியேற நாம் இடமளிக்க மாட்டோம். கொள்கை ரீதியில் நான் இதற்கு எதிரானவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
.jpg)
Post a Comment