Header Ads



மகிந்தவுக்கு கிடைத்த சிங்கள மக்களின் பெரும்பாலான வாக்குகளையும், நமது அரசாங்கத்தை நோக்கி நகர்த்தவேண்டியுள்ளது'

ஜனாதிபதி மைத்திரிபாலவின் வெற்றிக்கு இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மிகப்பெரும் உந்து சக்தியாக அமைந்தன. நமது வாக்குகள் சிங்கள மக்களின் வாக்குகளுடன் இணைந்ததன் மூலம் வெற்றி எங்கள் வசம் ஆகியுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தல் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நமது வாக்குப் பலத்தையிட்டு நாம் பெருமை கொள்ளும் அதேவேளையில், இந்த நாட்டில் எந்த ஒரு தேசிய மாற்றத்துக்கும் நாம் சிங்கள மக்களுடன் கைகோர்க்க வேண்டிய தேவையுள்ளதையும் நாம் கவனத்தில் கொள்வோம்.

எனவே, இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை உள்ளடக்கிய இந்த அரசாங்கத்தை நாமும் சேர்ந்து உருவாக்கியுள்ளோம் என்பதை நினைவில் நிறுத்தி, நமது இந்த பங்களிப்பை புதிய அரசுக்கு உள்ளே நாம் உறுதிபடுத்த தயாராவோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தனது பதவியேற்பு நிகழ்வில் ஆற்றிய ஏற்புரையின் போது நமது பெயர்களை குறிப்பிட மறந்தமையையிட்டு நாடு முழுக்கவும், புலம் பெயர்ந்தும் வாழும் நமது மக்கள் மத்தியில் ஒரு மனக்கிளர்ச்சி ஏற்பட்டுள்ளமையை நான் அறிவேன்.

பொது எதிரணியில் ஆரம்பம் முதலே அங்கம் வகித்த நமது கட்சியையும், அதேபோல் மலையக கட்சிகளான மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றையும் பெயர் குறிப்பிட ஜனாதிபதி மறந்தது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு இருப்பது நியாயமானது ஆகும்.

உண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வியூகம் அமைத்து  சிங்கள மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளை ஒன்று திரட்டிய வண. சோபித தேரரின் பெயரையும் கூட ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட மறந்து விட்டார்.

இது பற்றி நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் ஜனாதிபதி அவர்கள் என்னிடம் உரையாடியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடனும் உரையாடியுள்ளேன்.

ஜனாதிபதி அவர்கள் 10ம் திகதியே பதவியேற்பதாக இருந்தது. பின்னர் அது அவசர அவசரமாக மாற்றப்பட்டது. ஜனாதிபதியின் உரையும் முன்கூட்டியே தயாரிக்கப்படவில்லை.

எனவே இது தற்செயலாக நிகழ்ந்த நிகழ்வு. நாங்கள் மிகுந்த அரசியல் முதிர்ச்சியுடனும், பெருந்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டிய வேளை இது என்பதால், இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என நான் தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

எனினும் இந்த அரசை அமைக்க நமது மக்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்கள் என்பதை நாம் இந்த அரசுக்கு உள்ளே உறுதிப்படுத்துவோம்.

ஏனென்றால் இந்த அரசுக்கு உள்ளே நாம் நமது மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றோம். வடக்கு கிழக்கிலும், தென்னிலங்கையிலும் தமிழ் மக்கள் ஏறக்குறைய சரிசமமான அளவில் வாழ்கிறார்கள்.

இந்நிலையில் வடக்கு கிழக்கின் ஐந்து மாவட்டங்களில் சுமார் ஏழு இலட்சம் தமிழ் வாக்குகள் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் தென்னிலங்கையின் மத்திய, மேல், ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இருந்தும் இதே எண்ணிக்கை வாக்குகள் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நுவரேலியா- மஸ்கெலியா தொகுதியில் மாத்திரம் 113,860 பெரும்பான்மை வாக்குகளை மைத்திரிபால பெற்றுள்ளார்.

இதுவே அவர் ஒரு தொகுதியில் பெற்றுள்ள அதிகூடிய வாக்கு தொகையாகும். அதேபோல் கொழும்பு மாவட்டத்தின் மாநகர தொகுதிகள் அனைத்திலும் ஐதேக வாக்குகளுடன் நமது வாக்குகளும் இணைந்ததன் மூலம் நாம் பெருவெற்றி பெற முடிந்துள்ளது.

இதே அடிப்படையிலேயே கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் பொது எதிரணிக்கு நமது மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார்கள்.

இதையே தோல்வியுற்ற முன்னாள் ஜனாதிபதி  மகிந்த தனக்கு “வடக்கு, கிழக்கு, நுவரேலியா, கண்டி, கொழும்பு ஆகிய பகுதிகளில் வாக்கு கிடைக்கவில்லை” என்று தனது மெதமுலன கிராமத்தில் நடத்திய மக்கள் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

எனவே சிங்கள மக்களின் பெரும்பாலான வாக்குகள் மகிந்தவுக்கு கிடைத்துள்ளன. அந்த வாக்குகளையும் நமது அரசாங்கத்தை நோக்கி நகர்த்தும் நகர்வுகளை நாம் இனி செய்ய வேண்டியுள்ளது.

இது நடைபெறாவிட்டால், அடுத்து வரும் பொது தேர்தலில் நாம் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிவரும்.

இதை மனதில் கொண்டு நாம் நமது அரசை பாதுகாப்போம். இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் கிடைத்துள்ள ஜனநாயக இடைவேளையை  பயன்படுத்தி நமது மக்களின் எதிர்பார்ப்புகளை ஈடேற்ற முயல்வோம் என்றார்.

No comments

Powered by Blogger.