Header Ads



யோசித ராஜபக்ஸவுக்கு, எதிரான குற்றச்சாட்டுக்கள் (முழு விபரம் இணைப்பு)

-டிட்டோகுகன்-

முன்னாள் முதல் குடும்பத்தின் உறுப்பினரொருவர் எவ்வாறு கடற்படையில் இணைந்தார் என்பது பற்றியும் வெளிநாடுகளிலுள்ள முன்னணி கடற்படை கல்லூரியில் கற்பதற்கு புலமைப் பரிசில்களை எவ்வாறு பெற்றுக் கொண்டார் என்பது குறித்தும் பூரணமான விசாரணையை ஆரம்பிக்குமாறு கடற்படை தளபதிக்கு பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யு.டி. பஸ்நாயக்க உத்தர விட்டுள்ளார்.

ஜே.வி.பி. இந்த விவகாரம் குறித்து பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு  சென்றிருந்த நிலையிலேயே இந்த உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஷ எவ்வாறு கடற்படையில் இணைந்து கொண்டார் என்பது பற்றியும், பிரிட்டனிலுள்ள பிரித்தானியா றோயல் கடற்படை கல்லூரியில் கற்பதற்கு எவ்வாறு புலமைப்பரிசிலை பெற்றுக் கொண்டார் என்பது குறித்தும் நேற்று ஜே.வி. பி. கேள்வியெழுப்பியிருந்தது.

தமது முறைப்பாட்டை பாதுகாப்புச் செயலாளர் ஏற்றுக்கொண்டார் எனவும்  துரிதமான விசாரணையை நடத்த உறுதியளித்தார் என்றும் மேல் மாகாண சபையின் ஜே.வி.பி. உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். ஒரு வாரத்துக்குள் நல்ல பெறுபேறு கிடைக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த விடயத்தை விசாரணை செய்வதற்கு கடற்படைத் தளபதிக்கு பாதுகாப்புச் செயலாளர் அறிவித்திருக்கிறார் எனவும் டாக்டர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

யோசித ராஜபக்ஷ 2006 இல் கடற்படை அதிகாரியாக கடற்படையில் இணைந்திருந்தார். தனது அடிப்படைப் பயிற்சியை கடற்படை அக்கடமியில் பெற்றிருந்தார். அங்கு அவர் இடைத்தர கடற்படை அதிகாரியாகத் தரமுயர்த்தப்பட்டதுடன் தனது  தந்தையான ஜனாதிபதியின் உதவியாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ இராணுவ கட்டளைச்சட்டம், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவை உள்ளிட்ட பல்வேறு கட்டளைச் சட்டங்களை மீறி செயல்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் வலியுறுத்தி ஜே.வி.பி.யின் மேல் மாகாண சபை உறுப்பினரான டாக்டர். நலிந்த ஜயதிஸ்ஸ பாதுகாப்பு செயலாளரிடம் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடொன்றை சமர்பித்துள்ளார்.

யோசித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள டாக்டர். ஜயதிஸ்ஸவின் இந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; "இலங்கை கடற்படையின் நிறைவேற்று பிரிவுக்கு இணைத்துக் கொள்வது என்றால் க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் சித்தி பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறையை மீறி க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் பயின்ற யோசித ராஜபக்ஷ அந்த பிரிவிற்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.திருகோணமலை கடற்படை முகாமில் ஆரம்பக்கட்ட கெடெற் பயிற்சியை பெற்ற காலப்பகுதியில் ஏனைய கடற்படை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்திராத சிறப்பு சலுகைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

கடற்படையில் 3 மாத கால பயிற்சியைப் பெற்றிருந்த போது போலியான முன்னேற்ற அறிக்கையை தயாரித்து பிரிட்டனிலுள்ள கடற்படை பயிற்சி நிறுவனத்திற்கு புலமைப்பரிசில் மூலம் அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அந்த பயிற்சி நெறிக்கு சம்பந்தப்பட்ட அணியின் திறமையான கெடெற் அதிகாரியே அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்பதே இதுவரை பின்பற்றப்பட்டு வந்த சம்பிரதாயமாக இருந்து வந்த நிலையில், யோசித ராஜபக்ஷ அந்த அணியின் திறமையானவர் ஆனது எப்படி என்பது சிக்கலுக்குரிய விடயமாகும். 

பிரிட்டனிலுள்ள கடற்படை பயிற்சி நிறுவனத்தின் அந்த கற்கைநெறியை ஒரு வருடத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்ற போதிலும், அதிலுள்ள பாடங்களில் தொடர்ச்சியாக சித்தியடையாமையினால் அவர் இரண்டு வருடங்களுக்கு அதிகமான காலமாக அங்கு தங்கியிருந்ததாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வாறு சித்தியடையத் தவறிய ஒருவர் மீண்டும் இலங்கைக்கு வந்ததன் பின்னர் அந்த அணியின் சிறப்பு தேர்ச்சி பெற்றவராக கௌரவிக்கப்பட்டது எப்படி என்பது பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. 

அவ்வாறு சித்தியடையாமல் இருந்த போதிலும் மீண்டும் இலங்கை அரசின் செலவில் உப லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ இன்னுமொரு தொழில்நுட்ப கற்கைநெறிக்காக பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். திருமணமாகாத கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் தங்குவதில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவற்றையும் மீறிச் செயற்பட்டுள்ளார். 

அரச உத்தியோகத்தராக இருக்கும் அதேநேரம், கால்ட்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் சபையில் அங்கத்தவராக பணியாற்றியுள்ளார். கடற்படையில் பதவியொன்றை வகித்துக் கொண்டு தமது சகோதரர் நாமல் ராஜபக்ஷ எம்.பி.யின் "நீலப் படையணி'எனும் அரசியல் அமைப்பின் நடவடிக்கைகளில் நேரடியாக தொடர்பு பட்டுள்ளார்.

அரச உத்தியோகத்தராக இருந்து கொண்டு எந்த முன்னறிவித்தலோ அல்லது முன் அனுமதியோ இன்றி வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் கலந்து கொண்டுள்ளார். 

எந்தவொரு அரச படையிலும் சம்பிரதாயமாக ஏற்றுக் கொள்ளப்படாத வகையில் அவரை விட பதவி நிலையில் உயர் ஸ்தானத்திலுள்ள லெப்டினன்ட் கமாண்டர் வன்னியாராச்சியை லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷவின் உதவியாளராக நியமித்திருந்தமையும் கடற்படையினுள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. 

அதேபோல், அவர் ஜனவரி மாதம் 9 ஆம் திகதியின் பின்னர் இன்னும் கடற்படையில் பணியில் இருக்கிறாரா அல்லது சேவையில் இருந்து விலகி விட்டாரா, அவ்வாறெனில் அது எந்த தினத்தில் இருந்து என்பதை விசாரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கடற்படையில் 8 வருட சேவையில் ஈடுபடாமல் அவ்வாறு பதவி விலக அனுமதிக்கக்கூடிய மருத்துவ காரணங்களை அவர் சமர்ப்பித்துள்ளாரா? அவ்வாறு சமர்ப்பிக்கவில்லை எனில், படையில் சேரும் போது கையொப்பமிட்ட ஒப்பந்தங்களுக்கு அமைய, விலகும் போது உரிய தொகையை அரசுக்கு செலுத்தியுள்ளாரா?

சட்ட ரீதியான பதவி விலகலின்றி அவர் தற்போது இரு வார காலமாக பணிக்கு சமூகமளிக்காமையால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? 

அதேபோல், லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ சார்பாக இராணுவ மற்றும் பொது சட்டங்கள் மீறிச் செயற்பட்டுள்ளமையினால் அவருக்கு சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட்ட கடற்படை உத்தியோகத்தர்கள் பலரினதும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. 

லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ இராணுவ கட்டளைச் சட்டம், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவை உள்ளிட்ட பல்வேறு கட்டளைச் சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளார் என்ற வகையில், முறையான விசாரணையொன்றை நடத்தி அவர் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். கடற்படைக்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியில் இருந்தும் அதன்மூலம் மீட்சி பெற முடியும்.   

No comments

Powered by Blogger.