Header Ads



'அவரைப்பற்றிய விவரம், யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்'

பிரிட்டனை சேர்ந்த சமந்தா வெல்ச் (23) எனும் இளம் அம்மா, தனது மூன்று வயது மகன் ரெய்லானுடன் பிர்மிங்காம் நகரில் இருந்து பிளைமூத் நகருக்கு ரயிலில் சென்றிருக்கிறார். ரயில் பயணங்களில் சுட்டி பையன்களை சமாளிப்பது சவாலான காரியம். ஆனால் சமந்தா மிகவும் அன்பாகவும், பொறுமையாகவும் தன் மகனுக்கு கதை சொல்லியபடி, பாடிக்கொண்டும் அவனோடு விளையாடிக்கொண்டும் வந்திருக்கிறார். சிறுவன் ரெய்லானும் உற்சாகமாக அம்மாவுடன் விளையாடியபடி மெல்ல உறங்கியும் விட்டான். ரயிலில் அப்போது கூட்டம் அதிகமாகி பலரும் நின்று கொண்டிருந்ததால், சமந்தா தனது மடியில் தலை சாய்ந்து தூங்கி கொண்டிருந்த மகனை தூக்கி தன் மீது அமர வைத்துக்கொண்டு, இன்னொருவர் உட்கார இடம் கொடுத்திருக்கிறார்.

இந்த சம்பவங்களை பார்த்து கொண்டிருந்த பெரியவர் ஒருவர், சமந்தாவின் தோளை தட்டி அழைத்து, 'உங்கள் பையில் இருந்து கீழே விழுந்துவிட்டது' என்று கூறியபடி ஒரு சீட்டை கையில் கொடுத்துவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார். அந்த சீட்டை பிரித்து பார்த்த போது 'நீ இந்த தலைமுறைக்கே எடுத்துக்காட்டு. அன்பாக, அமைதியாக பிள்ளைக்கு நல்லப்பழக்கத்தை கற்று கொடுத்தாய்' என்று பாராட்டி எழுதப்பட்டிருந்ததுடன், என் சார்பாக ஒரு காபி அருந்தி மகிழுங்கள் எனும் குறிப்புடன் 5 பவுண்ட் நோட்டும் இணைக்கப்பட்டிருந்தது. உன் வயதில் எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள், அவளும் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

அதை படித்ததும் சமந்தா, முகம் தெரியாத மனிதரிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டா? என  நெகிழ்ந்து போய்விட்டார். இருபது முறையாவது மீண்டும் படித்திருப்பேன்.  இப்படி அவரை எழுத வைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். 23 வயதான சமந்தா, கணவர் இல்லாமல் தனியே மகனை வளர்த்து வருபவர். எனவே இந்த பாராட்டை தான் பிள்ளை வளர்க்கும் விதத்திற்கு கிடைத்த சான்றிதழாகவும் நினைத்து உருகினார். பின் அந்த பெரியவரை எப்படியாவது நேரில் பார்த்து நன்றி சொல்லிவிட வேண்டும் என்பதற்காக அவரை தேடும் முயற்சியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த சம்பவத்தை விவரித்து, 'அவரைப்பற்றிய விவரம் யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!' என கேட்டிருக்கிறார்.

No comments

Powered by Blogger.