மஹிந்த பதுங்குவது, பாய்வதற்கா...?
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னரும், நானே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தலைமை தாங்குவேன் என்று அதிகாரத் தொனியுடன் கூறி வந்த மஹிந்த ராஜபக்ச இப்போது, அதிலும் தோல்வி காணத் தொடங்கியுள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பதற்கு மஹிந்த ராஜபக்ச முடிவு செய்திருப்பது அதனையே வெளிப்படுத்தியிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் மைத்திரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, பிரித்தெடுத்துக் கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்தப் போவதாக அறிவித்த கொழும்பு நகர மண்டப செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஒரு விடயத்தைக் கூறியிருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் அமர்த்தும் வரை தான் ஓயமாட்டேன் என்று அவர் அப்போது அறிவித்திருந்தார். இப்போது அவர், மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்குவது, சுதந்திரக் கட்சியின் தலைமையைக் கைப்பற்றுவது ஆகிய இரண்டு சபதங்களிலுமே வெற்றி பெற்று விட்டார் என்று தான் கூற வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக சந்திரிகா கொண்டு வருவதில் முன்னின்றதற்கு, எதிரணியில் உள்ள கட்சிகளை அதிகாரத்துக்கு கொண்டு வருவதே காரணம் என்று கருதினால் அது தவறான கருத்து. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மஹிந்த ராஜபக்சவின் கையிலிருந்து மீட்பதே அவரது முக்கிய இலக்கு.
அதற்காக, அவர் பொதுநலனுடன், செயற்படவில்லை என்று மறுத்துரைக்க முடியாது. அவரது முன்னுரிமைக்குரிய விடயம், சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை ராஜபக்ச குடும்பத்தின் கையில் இருந்து கைப்பற்றுவது தான். அதை இப்போது கிட்டத்தட்ட அவர் செய்து விட்டார் என்றே கூறலாம்.
மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வி கண்ட பின்னரும், சுதந்திரக் கட்சியில் அவருக்கு கணிசமான செல்வாக்கு இருக்கவே செய்தது. ஜனாதிபதித் தேர்தலில், சந்திரிகாவின் சொந்த தொகுதியான அத்தனகலவில் கூட, மஹிந்த ராஜபக்ச தான் வெற்றி பெற்றிருந்தார்.
பண்டாரநாயக்க குடும்பத்தின் மூன்று பிரதமர்கள், ஒரு ஜனாதிபதியை பிரதிநிதித்துவம் செய்த அத்தனகல தொகுதியில் கூட மஹிந்த ராஜபக்சவே செல்வாக்குச் செலுத்தினார். அதைவிட, மைத்திரிபால சிறிசேன நடத்திய கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், கலந்து கொண்டவர்களை விடவும் அதிகமானோர் மஹிந்த ராஜபக்ச நடத்திய கூட்டத்தில் தான் பங்கேற்றிருந்தனர்.
எனவே, மஹிந்த ராஜபக்சவின் செல்வாக்கு சுதந்திரக் கட்சிக்குள் முற்றாகவே ஒழிந்து போயிருக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க விரும்பியவர்கள் கூட, எப்படியும் இன்னும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கப் போகிறது என்பதால் சற்று யோசிக்கவே செய்தனர்.
ஐ.தே.க. தலைமையிலான கூட்டணி தமக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம்கொடுக்க மறுத்தால் என்ன செய்வது என்ற குழப்பம் அவர்களுக்கு இருந்தது. எனவே மதில் மேல் பூனையாக இருக்க முடிவு செய்தனர். இருந்தும் பலர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகத் திரும்பி விட்டனர் என்பதை மறுக்க முடியாது.
ஒரு கட்டத்தில், மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்திருந்தது. எனினும், துல்லியமான கணக்கு எத்தனை என்று தெரியாமலேயே இருந்தது. பலர் மறைமுகமாக மைத்திரிபாலவை ஆதரித்தனர்.
இதனால் மஹிந்த ராஜபக்சவுக்கே தனது பக்கத்தில் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது. அதைவிட இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை விரும்பவில்லை.
ஏப்ரல் வரை நாடாளுமன்றம் செயற்பட்டால் போதும் தமக்கு ஓய்வூதியம் கிடைத்து விடும் என்ற எதிர்பார்ப்பில், முதல் முறையாகத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், அவர்களும் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தைக் காப்பாற்றத் தயாராக இருந்தனர்.
இந்தநிலையில், மஹிந்த ராஜபக்சவுக்கும் சரி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் சரி, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் எற்பட்டது. இதனால், தாம் எதனைக் கனவு என்று தேர்தல் பிரசாரத்தின் போது எள்ளி நகையாடினரோ, மைத்திரிபால சிறிசேனவின் அதே 100 நாள் செயற்றிட்டத்துக்கு முழுமையான ஆதரவை அளிப்பதாக, அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து. யார் ஆளும்கட்சி, யார் எதிர்க்கட்சி என்று தெரியாத குழப்பம் உருவாயிற்று. இத்தகைய நிலையில் கட்சியின் தலைமையைத் தன்னிடம் வைத்துக் கொள்வதால், எதுவும் நடக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்து தான் மஹிந்த ராஜபக்ச அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க முன்வந்தாரா?
அல்லது மிகப்பெரிய சக்தியாக தான் மீண்டும் உருவெடுக்க வேண்டும் என்ற திட்டத்துடன் கட்சித் தலைமையை மைத்திரிபாலவிடம் வழங்க முன்வந்தாரா என்ற கேள்விகள் உள்ளன.
45 வருட அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ச அண்மையில் கூறத் தொடங்கியிருக்கிறார். அந்த அனுபவம் அவருக்கு, முன்கூட்டியே தேர்தலுக்கான அழைப்பை விடும் போது கைகொடுத்திருக்கவில்லைத் தான். என்றாலும், இப்போது மஹிந்த ராஜபக்ச சற்று ஒதுங்கி- அடங்கிப் போக முயற்சிப்பது, சந்தேகங்களையே எழுப்புகிறது. அரசியல் உள்நோக்கத்துடன் அவர் பதுங்கிக் கொள்ள முனைகிறாரா என்பதே அது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை உடையாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மட்டும் அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்த்தனம்.
அவ்வாறு கருதியிருப்பாரேயானால், அலரி மாளிகையை விட்டு வெளியேற முடிவெடுத்த போதே கட்சித் தலைமையையும் விட்டுக் கொடுக்க முடிவு செய்திருப்பார். மெல்ல மெல்ல தனது அதிகாரம் கட்சிக்குள் வலுவிழந்து வரத் தொடங்கிய பின்னர் தான், அவர் இந்த முடிவை எடுத்திருப்பதால், கட்சியின் நலனை அவர் கருத்தில் கொண்டிருப்பார் என்று ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது.
மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரையில், தனது அரசியல் வாழ்வு இத்துடன் முடிந்து போய் விட்டதாக கருதுவதாகத் தெரியவில்லை. மீண்டும் அரசியலில் தலையெடுக்கும் ஆர்வமும், அவாவும் அவருக்கு இருக்கிறது. அவ்வாறு தலையெடுத்தால் தான், தமது குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரை அரசியலில் நிலை நிறுத்தலாம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
அதைவிட, அவர் நாட்டை விட்டுத் தப்பியோடவும் தயாராக இல்லை. அது தனது ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று கலங்குகிறார். அதைவிட அவ்வாறானதொரு தெரிவை அவர் மேற்கொண்டால் கூட, அவர் எதிர்காலத்தில் பல்வேறு சட்டரீதியான சிக்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலையும் ஏற்படலாம். எனவே, அவர் தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கவே விரும்புகிறார். எவ்வாறாயினும், இப்போதைக்கு அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் கருதுவதாகத் தெரிகிறது.
புதிய அரசாங்கத்துடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க முனைந்தால், அவர்களின் எதிர் நடவடிக்கைகள் இன்னும் இன்னும் தீவிரமாகும். அது தனதும் தனது குடும்ப உறுப்பினர்களினதும் நலனுக்கு பாதகமாக அமையும் என்று மஹிந்த ராஜபக் ஷ கணக்குப் போடுவதாகத் தெரிகிறது.
சுதந்திரக் கட்சியின் தலைமையை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க அவர் இணங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். அதைவிட, இப்போதைய நிலையில், சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நேரத்தை செலவிடுவதை விட, அதனை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதே புத்திசாலித்தனமானது.
ஏனென்றால், சுதந்திரக் கட்சியின் தலைமை மைத்திரிபால சிறிசேனவின் வசம் வந்து விட்டால், மஹிந்த ராஜபக்ச அரசில் மோசடிகள், முறைகேடுகளை செய்த முன்னாள் அமைச்சர்களான, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவரே தலைவராக மாறிவிடுவார். அது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும்,
அவரை பதவிக்கு கொண்டு வந்த ஐ.தே.க. தலைமையிலான கூட்டணிக்கும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தும். அதேவேளை, 100 நாள் செயற்றிட்டத்தின் முடிவில் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தும் போது, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐ.தே.கவும் அதன் கூட்டணியில் உள்ள கட்சிகளும் எவ்வாறு செயற்படப் போகின்றன?
ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்று கூறப்படுவதுண்டு. ஐ.தே.கவும், சுதந்திரக் கட்சியும் இரண்டு கத்திகள். அவை இரண்டும் எப்படி ஒரே உறையில் ஒரே கூட்டணியில் இடம்பெற முடியும்? இதனால், நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக பிரிந்து மோதும் நிலை உருவாகலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், மைத்திரிபால சிறிசேனவையும், ரணில் தலைமையிலான கூட்டணியையும் பிரித்து விட்டதாக மஹிந்த ராஜபக்சவினால், உரிமை கோர முடியும்.
மேலும், ஊழல் மோசடி செய்தவர்கள் மீது தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். தனது வசம் உள்ள கட்சியின் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயங்க வேண்டி வரலாம். இவையெல்லாம் மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமான விடயங்கள். வடமேல் மாகாணசபை ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மைத்திரிபால சிறிசேனவிடம் சரணடைந்த போது, ஐ.தே.க. திகைத்துப் போய் விட்டது.
ஏனென்றால், அங்கு ஆட்சியைப் பிடிக்க ஐ.தே.க. முயன்றது, ஆனால், நடந்தது எதிர்மறையான விடயம். மத்திய மாகாணசபையிலும், ஆட்சியைப் பிடிக்க முனைய, திடீரென அதன் முதலமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டிருக்கிறார். இதுபோன்று ஏனைய மாகாணசபைகளிலும் நடந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் மாகாண சபைகளில் நிலைத்திருக்கும். இதுபோன்ற நிலை தொடருமேயானால், ஐ.தே.கவுக்குள் குழப்பம் உருவாகும்.
அது பிரதமர் ரணிலுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் விரிசலையும் ஏற்படுத்தும். மஹிந்த ராஜபக்ச சுதந்திரக் கட்சிக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருந்தால் இதெல்லாம் சாத்தியமாகாது. மைத்திரிபால சிறிசேனவிடம் சுதந்திரக் கட்சியின் தலைமையையும் ஒப்படைத்து விட்டால் அவர் கட்சியையும் கவனிக்க முடியாமல் நாட்டையும் நிர்வகிக்க முடியாமல் திணறுவார். அது அவரை திறனற்ற, நேர்மையற்ற தலைவராக சித்திரிப்பதற்கு வசதியாகி விடும்.
எனவே சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி என்பது சுலபமாகவே மைத்திரிபால சிறிசேனவிடம் கிடைத்து விட்டாலும், அது அவருக்குப் பெரும் பாரத்தையும் தலைவலியையும் தான் ஏற்படுத்தும். அது மஹிந்த ராஜபக்சவுக்கு சாதகமான சூழலை உடனடியாக ஏற்படுத்தாவிடினும், என்றோ ஒருநாள் உருவாக்கலாம். அந்தக் கனவுடன் தான் அவர் காத்திருக்க முடிவு செய்துள்ளார் போலும்.
சத்ரியன்

Your opinion is ok.mahinda did master mind.in the future my3 slfp leadership going to convert chandrika kmadam.if mahinda jump8feet chandrija will jump16 feet.wait and see
ReplyDeleteஉங்கள் பல அனுமானங்கள் சரியாக இருக்கலாம் என்றேதோன்றுகின்றது. ஆனால் மகிந்தரின் கணிப்புகள் இருபுறமும் கூர்மையான கத்தி போன்றது. காலக்கிரமத்தில் சாதகமாகவும் அமையலாம் அல்லது ஒரேயடியான மூழ்கலும் நடக்கலாம்.
ReplyDeleteஅது ஒருபுறமிருக்க, கடா ஆட்டின் ஆவேசம் பார்த்து வெருண்டோடிப்போன சிங்கத்தை தேற்றி தன் வாலில் கட்டி அழைத்து வந்த குள்ளநரி போல கடைசியில் வீரவன்ஸ கல்லிலும் முள்ளிலும் இழுபட்டதுதான் வேடிக்கை.