சீனி வருத்தம், வருமுன் காப்போம்..! வந்தபின்னும் ஒழுங்குமுறைகளை கடைபிடிப்போம்..!!
(தில்ஷான் நிஷாம் -மருத்துவ மாணவன்
கிழக்குப் பல்கலைக்கழகம்)
சர்க்கரை வியாதி (சீனி வருத்தம்) என எல்லோராலும் பொதுவாக அழைக்கப்படும் "நீரிழிவு நோய்" எம் மத்தியில் பரவலாகக் காணப்படும் ஒரு தொற்றாத நோயாகும். இலங்கை உள்ளிட்ட அநேக நாடுகளில் இந் நோய் அதிக பரம்பலுடன் காணப்படுகிறது. உலகம் முழுவதும் 347 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன (2011 இல்). அத்தோடு 2004 ஆம் ஆண்டில் மாத்திரம் ஏறத்தாள 3.4 மில்லியன் மக்கள் குருதியில் (இரத்தத்தில்) வெல்ல (சர்க்கரை/சீனி) மட்டம் அதிகரித்ததன் காரணமாக தோன்றிய விளைவுகளால் இறந்ததாகவும், 2030 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் ஏற்படும் இறப்புகளுக்கான 7 ஆவது பிரதான காரணியாக நீரிழிவு நோய் இருக்கப் போகிறது எனவும் அதகவல்கள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோய் காரணமாக ஏற்படும் இறப்புகளில் 80% இற்கும் அதிகமானவை, குறைந்த மற்றும் நடுத்தர வருமானமுடைய நாடுகளிலேயே நிகழ்கின்றன எனவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக் காட்டுகிறது.
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், ஆரோக்கியமான உணவு முறை, முறையான உடற்பயிற்சி, உடல் நிறையை அளவோடு பேணுதல் மற்றும் புகையிலை உற்பத்திகளின் பாவனையை தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் வளர்ந்தோரில் ஏற்படும் நீரிழிவு நோயை தடுக்க அல்லது தாமதப்படுத்த முடியுமாயிருப்பதுவும், முறையான சிகிச்சையை பெறுவதன் மூலம் நீரிழிவு நோயின் பாரதூரமான விளைவுகளினால் ஏற்படும் இறப்புகளை தடுக்க அல்லது குறைக்க முடியுமாக இருப்பதுமாகும். எனவே நீரிழிவு நோயைப் பற்றியும், அதன் அறிகுறிகள் மற்றும் அதன் பாரதூரமான விளைவுகள் பற்றியும், அது எம்மைப் பீடிக்காது தடுக்க பிரயோகிக்கத்தக்க வழிமுறைகள் பற்றியும் நாம் அனைவரும் அறிந்து வைத்திருப்பது மிக அவசியமாகும். அந்த நோக்கோடே இந்தக் கட்டுரை வரையப்படுகிறது.
A. நீரிழிவு நோய் என்றால் என்ன???
உலக சுகாதார அமைப்பின் வரைவிலக்கணப்படி, நீரிழிவு நோய் எனப்படுவது, சதையி(Pancreas) எனப்படும் எமது உடலின் ஒரு உறுப்பின் மூலம் சுரக்கப்படும், இன்சுலின்(Insulin) எனப்படும் இரசாயனப் பதார்த்தம், (ஹோர்மோன்) தேவையான அளவில் சுரக்கப்படாமை காரணமாக அல்லது இன்சுலினை எமது உடல் திறம்பட உபயோகிக்க முடியாமை காரணாமாக, ஏற்படும் நீண்ட கால நோய் நிலமையாகும்.
இன்சுலின் எனப்படுவது, எமது உடற் குருதியில் குளுக்கோசு (வெல்லம்/சர்க்கரை) மட்டத்தை மாறாது பேண உதவும் ஒரு ஹோர்மோன்/ இரசாயனப் பதார்த்தம் ஆகும். இன்சுலின் குறைவடையும் போது அல்லது இன்சுலினை எமது உடல் திறம்பட பயன்படுத்தாத போது, எமது உடற் குருதியின் குளுக்கோசு மட்டம் அதிகரிக்கும்.
இதுவே நீரிழிவு நோய் எனப்படுகிறது.
B. எமது உடற் குருதியில் குளுக்கோசு/வெல்லம் ஏன் தேவைப்படுகிறது???
எமது உடல், கோடான கோடிக் கலங்களாலும், கலங்களின் சேர்க்கையான இழையங்களாலும் ஆக்கப்பட்டுள்ளது. பல இழையங்கள் சேர்ந்தே எமது உடலின் பல்வேறு அங்கங்களை உருவாக்கியுள்ளன. யாதாயினும் ஒரு பொருள் இயங்கவைக்கப்படுவதற்கு சக்தி (Energy) தேவைப்படுகிறது. அதுபோல எமது உடற்கலங்கள் இயங்குவதற்கும் சக்தி தேவையாகும். இச்சக்தி ஏடிபி (ATP - Adenosine Tri Phosphate) எனப்படுகிறது.
பொதுவாக நாம் சக்தியைப் பெறுவதற்கு பல்வேறு பொருட்களை உபயோகிக்கவேண்டி இருக்கிறது. உதாரணமாக விறகடுப்பில் சமைப்பதற்குத் தேவையான வெப்ப சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கு, எமக்கு விறகு, மண்ணெய், தீக்குச்சி, காற்று (ஆக்ஸிஜன்) என்பன தேவைப்படுகின்றன. இதுபோல எமது உடற்கலங்களிலும் ஏடிபி சக்தி உற்பத்தி செய்யப்படுவதற்கு பிரதானமாக இரண்டு மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றன. அவை குளுக்கோசு. (Glucose) மற்றும் ஆக்ஸிஜன் (Oxygen) என்பவையாகும்.
எமது உடற்கலங்களின் சக்தி உற்பத்திக்குத் தேவையான குளுக்கோசினை நாம் உட்கொள்ளும் உணவிலிருந்தே பெற்றுக்கொள்கிறோம். பொதுவாக நாம் உட்கொள்ளும் உணவில் காணப்படும் மாப்பொருட்கள் சிக்கலான மூலக்கூறு வடிவினைக் கொண்டவையாகும். அவை எமது சமிபாட்டுத் தொகுதியினுள் குளுக்கோசு எனும் எளிய மூலக்கூறுகளாக உடைக்கப்படுகின்றன. இவ்வாறு உடைக்கப்பட்ட எளிய குளுக்கோசு மூலக்கூறுகளை சமிபாட்டுத் தொகுதியிலிருந்து அகத்துறிஞ்சி, உடலின் எல்லாக் கலங்களுக்கும் கொண்டு சென்று விநியோகிப்பது குருதியின் தொழில்களுள் ஒன்றாகும். இதனாலேயே குருதிக்குள் குளுக்கோசு வந்தடைகிறது.
எது எவ்வாறிருப்பினும், எமது உடற்கலங்களின் தொழிற்பாட்டிற்கு குறித்தளவு குளுக்கோசு போதுமானதாகும். எமது உடலுக்குத் தேவையான குளுகோசின் அளவு என்னவெனப் பார்த்து நாம் உணவுட்கொள்வதில்லை. சாதாரணமாக நாம் உணவுட்கொண்ட பின்னர் எமது குருதியின் குளுகோசு மட்டத்தில் திடீரென அதிகரிப்போன்று ஏற்படும். எனினும் ஒரு நபரின் ஒரு டெசி லீட்டர் குருதியில் 80-110 mg குளுக்கோசு இருப்பது போதுமானதாகும். இம்மட்டத்தினை விட எமது குருதி குளுகோசு மட்டம் தொடர்ச்சியாக, நீண்ட நாட்களுக்கு அதிகரித்துக் காணப்படுமாயின், அது மூளை (Brain), சிறுநீரகம் (Kidney) உள்ளிட்ட எமது உடலின் பல உறுப்புகளுக்கு சேதம் விளைவித்து, இறுதியில் இறப்புக்கு வழிவகுக்கும். எனவே எமது உடற்குருதியில் குளுகோசு மட்டத்தினை 80-110 mg/dl எனும் அளவில் பேணுவதற்கு ஒரு பொறிமுறை அவசியப்படுகிறது.
C. எமது உடற் குருதியில் குளுக்கோசு/வெல்ல மட்டம் அதிகரிக்காமல் எவ்வாறு பேணப்படுகிறது?
சதையி (Pancreas) எனப்படுவது எமது இரைப்பையின் கீழே காணப்படும் ஒரு உறுப்பாகும். இதில் புறஞ்சுரக்கும் பகுதி (Exocrine part), அகஞ்சுரக்கும் பகுதி (Endocrine part) என இரு பாகங்களுண்டு. சதையியின் அகஞ்சுரக்கும் பகுதி, பல கலக்கூட்டங்களால் ஆனது. இக்கலக் கூட்டங்கள், இலங்ககானின் சிறு தீவுகள் (Langerhan's islets) என அழைக்கப்படுகின்றன. இத்தீவுகளில் அல்பா(alpha), பீட்டா(beta), காமா(gamma) எனும் மூன்று வகைக் கலங்கள் உண்டு.
எமது உடற்குருதியில் குளுகோசு மட்டம் குறித்தளவை விட அதிகரிக்கும் போது, சதையியின் இலங்ககான் சிறுதீவுகளில் காணப்படும், பீட்டா கலங்கள் தூண்டப்பட்டு, அவற்றிலிருந்து இன்சுலின் எனப்படும் ஹார்மோன் குருதிக்குள் விடுவிக்கப்படுகிறது. இவ் இன்சுலின் குருதி வழியாக உடல் முழுக்கச் சென்று, உடற்கலங்களில் காணப்படும் இன்சுலின் உணரிகளுடன் (Insulin receptor) இணைந்து, குளுகோசை கலங்களுக்குள் உள்ளெடுப்பதற்கான வாயில்களை திறந்துவிடுகின்றன. இதனால் குருதியில் மேலதிகமாகக் காணப்படும் குளுக்கோசானது, கலங்களுக்குள் செல்வதால், குருதியின் குளுக்கோசு மட்டம் பழைய நிலைக்குத் திரும்புகிறது.
D. நீரிழிவு நோயில் குருதி குளுக்கோசு மட்டம் அதிகரிப்பதேன்?
நீரிழிவு நோயின் வரைவிலக்கணப்படி, அந் நோய் ஏற்படக் காரணம், இன்சுலின் குறைவாகச் சுரக்கின்றமை அல்லது உடற்கலங்கள் இன்சுலினைத் திறம்பட பயன்படுத்தாமை ஆகும். இவை இரண்டில் எது இடம்பெற்றாலும், உடற்கலங்களில் காணப்படும், குளுக்கோசை உள்ளெடுப்பதற்கான வாயில்கள், குறைந்த அளவிலேயே திறக்கப்படும். இதனால் எமது உடற்குருதியில் காணப்படும் மேலதிக குளுகோசு கலங்களுக்குள் உள்ளெடுக்கப்படாது. எனவே குருதியின் குளுக்கோசு மட்டம், சாதாரண மட்டத்திலும் பார்க்க உயர்வடைகிறது.
E. நீரிழிவு நோயின் வகைகள் எவை?
நீரிழிவு நோய் பொதுவாக மூன்று வகைப்படும்.
1. வகை 1 நீரிழிவு நோய் (Type 1 Diabetes mellitus) 2. வகை 2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes mellitus) 3. பிரசவத்தின் போதான நீரிழிவு நோய் (Gestational diabetes mellitus)
F. வகை 1 நீரிழிவு நோய் (Type 1 diabetes mellitus) என்றால் என்ன?
வகை 1 நீரிழிவு நோய் (Type 1 diabetes) எனப்படுவது, சதையியின் பீட்டா கலங்களில் ஏற்படும் அழிவு காரணமாக, எமது உடல், இன்சுலினைச் சுரப்பதற்கான ஆற்றலை இழப்பதனால் ஏற்படும் நீரிழிவு நோயாகும். இவ்வகை நீரிழிவு நோயானது, பொதுவாக சிறுபராயத்தில் ஏற்படுகிறது. எனினும் சிலரில் 30, 40 வயதிலேயே நோய் உருவாக ஆரம்பிக்கிறது. ஆரம்ப காலங்களில் இது இன்சுலினில் தங்கிய (Insulin - Dependent)/ சிறுபராய (Childhood onset) நீரிழிவு எனவும் அழைக்கப்பட்டது.
இந் நோயைத் தோற்றுவிப்பதில் பங்களிப்புச் செய்யும் காரணிகள் தொடர்பிலான தெளிவான விளக்கங்கள் காணப்படாத போதிலும், பரம்பரை காரணிகளும், சூழல் காரணிகளும் இந் நோயின் உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்வதாக நம்பப்படுகிறது. பரம்பரைக் காரணிகளின் செல்வாக்கு இந் நோயின் உருவாக்கத்தில் அதிகம் காணப்படுவதால், இந் நோயை வருமுன் காப்பதென்பது அரிதானதாகவே பார்க்கப்படுகிறது. எனினும் சதையின் பீட்டா காலங்கள் அழிவடைந்து, இன்சுலின் உற்பத்தி குறைவடைவதனாலேயே இந் நோய் நிலைமை ஏற்படுகிறதென்பதால், வெளியிலிருந்து எமது உடலினுள் இன்சுலினை உட்செலுத்துவதன் மூலம், இவ்வகை நீரிழிவு மூலம் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்து/குறைத்துக் கொள்ளவியலும்.
G. வகை 2 நீரிழிவு நோய் (Type 2 diabetes mellitus) என்றால் என்ன?
உலகிலுள்ள மொத்த நீரிழிவு நோயாளர்களுள் 90% ஆனோர் வகை 2 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. வகை 2 நீரிழிவு நோயின் உருவாக்கம் ஒரு சிக்கலான பொறிமுறையைக் கொண்டதாகும். இங்கு எமது உடல் இன்சுலினை உற்பத்தி செய்த போதிலும், அவ்வின்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதானாலேயே இந்நோய் நோய் நிலைமை ஏற்படுகிறது. எமது உடற்கலங்கள் இன்சுலினுக்கு காண்பிக்கின்ற எதிர்ப்பே, இவ்வாறு எமது உடல் திறம்பட இன்சுலினை பயன்படுத்த முடியாமைக்கு காரணம் என நம்பப்படுகிறது. அத்தோடு, வகை 2 நீரிழிவு நோயாளர்களில் இன்சுலின் உற்பத்தியும் குறைவாகவே காணப்படுகிறது.
இந்நோய் பொதுவாக 30, 40, 50 போன்ற பிற்பட்ட வயது காலப்பகுதியிலேயே தோற்றம் பெறுவதால் இது வளர்ந்தோரில் உருவாகும். (Adult - onset ) நீரிழிவு எனவும் அழைக்கபடுகிறது. அத்தோடு வெளியிலிருந்து இன்சுலினை வழங்குவதன் மூலம் மாத்திரம் இந்நோயை கட்டுப்படுத்த முடியாதிருப்பதால் இது இன்சுலினில் தங்கியிராத நீரிழிவு (Insulin - Non dependent) எனவும் அழைக்கப்படுகிறது.
வகை 1 நீரிழிவு நோயைப் போன்று, இங்கும் பரம்பரை மற்றும் சூழல் காரணிகள் நோயின் உருவாக்கத்தில் பங்குபற்றிய போதிலும், சூழல் காரணிகளின் தாக்கம் அதிகளவில் இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக அதிகரித்த உடல் நிறையும், போதியளவு உடற்பயிற்சி இன்மையும் வகை 2 நீரிழிவு நோயின் உருவாக்கத்தில் அதிக பங்களிப்புச் செய்வதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் வகை 2 நீரிழிவு நோயானது வருமுன்னர் காக்கப்பட முடியும்.
H. நீரிழிவு நோயின் அறிகுறிகள் யாவை?
நீரிழிவு நோய் கீழே குறிப்பிடப்படும் அறிகுறிகளால் எதிர்வு கூறப்பட முடியுமெனினும், அநேகமான நீரிழிவு நோயாளிகள், அறிகுறிகள் அற்றவர்களாகவும், நீண்ட காலங்களுக்கு நோய் கண்டுபிடிக்கப் படாதவர்களாகவுமே உள்ளனர் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயின் மிகப்பொதுவான அறிகுறிகள் வருமாறு:
- வழமையை விட அதிகமாக சிறுநீர் கழித்தல் (Polyuria)
- வழமைக்கு மாறான அதிகரித்த தண்ணீர் தாகம் (polydipsia)
- வழமையை விட அதிகரித்த பசி (polyphagia)
- திடீர் நிறைக் குறைவு (weight loss)
அநேகமான நீரிழிவு நோயாளிகள், அந்நோயின் பாதகமான விளைவுகள் தோன்றிய பின்னரேயே வைத்திய ஆலோசனையை நாடுகின்றனர். நீரிழிவு நோயின் பாதகமான விளைவுகளால் தோன்றும் அறிகுறிகள் சில வருமாறு:
- கண்பார்வை குறைவு (Blurred vision)
- கால்களில் வித்தியாசமான உணர்ச்சிகள் தோன்றுதல்(Lower-extremity paresthesias)
- பங்கஸ் நுண்ணங்கித் தொற்றுகள் (Yeast infections) மற்றும் அடிக்கடி நுண்ணங்கித் தோற்றுகளுக்குள்ளாதல்
- காயங்கள் விரைவில் குணமடையாமை மற்றும் பாதங்களில் காயங்கள் தோன்றுதல்
- பாதங்கள் வீங்குதல்
- நெஞ்சு வலித்தல்
- தலை சுற்றுதல்
I. நீரிழிவு நோயின் பாதகமான பின் விளைவுகள் எவை?
நீரிழிவு நோயாளர்களின் உடற் குருதியில் குளுக்கோசு மட்டம் குறித்தளவிலும் பார்க்க கூடுதலாக காணப்படுகிறது என நாம் அறிந்து வைத்துள்ளோம். இவ்வதிகரிப்பானது, தொடர்ந்து கட்டுப்பாடின்றி காணப்படுகின்ற போது, காலப் போக்கில், நீரிழிவு நோயாளிகளின் இதயம், குருதிக் குழாய்கள், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகள் என்பன பாதிக்கப்படலாம்.
நீரிழிவு நோயானது, இருதய நோய்கள் மற்றும் மூளை இறப்பு என்பன ஏற்படும் வாய்ப்பை அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. 50% ஆன நீரிழிவு நோயாளிகள் இருதய மற்றும் குருதிக் குழாய்களில் ஏற்படும் நோய்களினாலேயே இறப்பதாக அத்தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை நீரிழிவு நோயாளர்களின் இரத்த ஓட்டத்தின் வேகம் குறைவடைவதனால் நரம்புகள் பாதிப்படைகின்றன. இப்பாதிப்பானது பாதத்தில் காயங்கள் தோன்றுதல், கால்கள் கிருமித் தொற்றுக்குள்ளாகுதல் என்பனவற்றுக்கு வழிகோலுகின்றது. அத்தோடு படிப்படியாக கால்களை இழந்து போகும் நிலையும் உருவாகலாம்.
நீரிழிவு நோயின் காரணமாக, விழித்திரையில் காணப்படும் மிகச்சிறிய குருதிக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகள், பார்வையை இழக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லலாம். உலகிலுள்ள பார்வையற்றவர்களில் 1% ஆனவர்கள் நீரிழிவு நோயினால் பார்வையை இழந்தவர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. அத்தோடு நீரிழிவு நோயாளர்களின் நிர்பீடனமானது சாதாரண நபர்களிலும் பார்க்க குறைவடைவதனால், அவர்கள் நோய்த் தோற்றுகளுக்குள்ளாகும் வாய்ப்பும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் காச நோய், எய்ட்ஸ் போன்ற நோய்களுக்குள்ளாகும் வாய்ப்பு நீரிழிவு நோயாளர்களில் அதிகமாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நீரிழிவு நோயானது, சிறுநீரகங்களைச் செயலிழக்கச் செய்யும் பிரதான காரணிகளுள் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வெல்லாக் காரணிகளாலும், சாதாரண ஒரு நபரிலும் பார்க்க முறையான சிகிச்சைகளைப் பெறாத நீரிழிவு நோயாளி இரு மடங்கு இறக்கும் வாய்ப்புகளை அதிகம் பெறுகின்றனர்.
J. நீரிழிவு நோய் வருமுன் காக்கும் வழிமுறைகள் என்ன?
வகை 1 நீரிழிவு நோயானது, பரம்பரைக் காரணிகளுடன் அதிகம் தொடர்புறுவதால், அதனை வருமுன் காப்பது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் வகை 2 நீரிழிவு நோயைப் பொறுத்தவரை, அது அதிகளவில் சூழலியல் காரணிகளில் தங்கியிருப்பதால், அதனை வருமுன் காக்க முடியுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பின்வரும் வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் நீரிழிவு நோயை வருமுன் காக்கலாம்.
1. உடல் நிறைக் குறைப்பும், வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற நிறையை பேணுதலும்.
2. தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதலும், உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாய் வைத்திருத்தலும். குறைந்தது ஒவ்வொருநாளும் 30 நிமிடமாயினும் நடுத்தரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடல் வேண்டும்.
3. தேவையான அளவுகளில் அனைத்து போசனைப் பதார்த்தங்களும் கிடைக்கும் விதமாக தினசரி உணவுப் பழக்கவழக்கத்தை மாற்றியமைத்தல் வேண்டும். உடல் நிறையை அதிகரிக்கும் மாப்பண்டங்களையும், விலங்குக் கொழுப்புணவுகளையும் குறைத்து, அவற்றை அளவோடு உட்கொள்வதோடு, தினசரி மரக்கறி மற்றும் பழங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கதிகமாக இனிப்புச் சுவையுடைய பதார்த்தங்களை உட்கொள்வதை குறைப்பது சிறந்தது.
4. புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பாவனையை நிறுத்தல்; நீரிழிவு தொடர்பான பல ஆய்வுகளின் முடிவின் படி புகைப்பிடித்தல் மற்றும் புகையிலைப் பாவனை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக இணங்கானப்பட்டுள்ளது. அத்தோடு இன்னும் பல நோய்களின் மூலமாகமும் புகைத்தல் காணப்படுகிறது. இதனால் புகைத்தலை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

Post a Comment