Header Ads



இந்தியாவில் நின்றுகொண்டு, மதச் சுதந்திரத்தை வலியுறுத்திய ஒபாமா..!

தனி நபர் மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தனது இந்திய பயணத்தின் நிறைவுரையில் வலியுறுத்தி உள்ளார். 

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்த ஒபாமா, டெல்லி டவுன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில், 'இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்' (India and America: The Future We Can Build Together) என்ற தலைப்பில் உரையாற்றினார். 

'நமஸ்தே!' ( வணக்கம்) என்று இந்தியில் தனது உரையை தொடங்கிய அவர், நேற்று குடியரசு தின விழா நிகழ்வுகளைக் கண்டு வியந்தேன். குறிப்பாக பைக் சாகசங்கள் என்னைக் கவர்ந்தன. இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன். நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்திய மக்களின் பெருமிதத்தையும், வேறுபட்ட கலாச்சாரத்தையும் கண்டு வியந்தேன்.

என்னை ஈர்த்த இரு பெரிய மாமனிதர்கள் மார்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி. மார்டின் லூதர் கிங் அமெரிக்கர், மகாத்மா காந்தி இந்தியர். இதன் காரணமாகவே நான் இன்று இங்கு நிற்கிறேன். இந்திய அரசியல் சாசனமும், அமெரிக்க அரசியல் சாசனமும் 'வீ த பீப்பிள்' என்ற வார்த்தைகளுடனேயே துவங்குகிறது. இந்தியா - அமெரிக்கா என்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும்போது இந்த உலகமே பாதுகாப்பாக இருக்கும்.

நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்ததத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியர்களும் மிகவும் தேவைப்படும் மின்சாரம் கிட்டும். எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு காண அமெரிக்கா உதவும்.

இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை கூட்டாக நாம் எதிர்கொள்ள வேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதில், இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும். (அரங்கத்தில் பலத்த கைதட்டல்).

அமெரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில வேண்டும்

அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும் என விரும்புகிறேன். தற்போது இந்திய மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் அமெரிக்கா வந்து கல்வி பயில்கின்றனர். அதேபோல் எதிர்காலத்தில் அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும். இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும்போது நம் தேசம் வலுப்பெறும்.

மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்

ஒவ்வொரு தனி நபரும் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற இந்திய அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. இந்திய அரசியல் சாசனத்தில் சட்டப் பிரிவு 25 - மதச் சுதந்திரத்தை விரிவாக எடுத்துரைக்கிறது. எனவே தனி நபர் மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும்.

எனவே, ஒரு தனிநபர் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பயமின்றி, பாகுபாடின்றி பின்பற்ற உரிமை இருக்கிறது. மத, இன, நிறப் பாகுபாடுகள் நம்மைப் பிரித்தாளாமால் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

ஷாருக்கான், மேரிகோம், மில்காசிங் இவர்கள் அனைவரது வெற்றியையும் சமமாக கொண்டாட வேண்டும். அவர்கள் மதம், நிறம் சார்ந்த பேதங்கள் கூடாது.

இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாட்டு அரசியல் சாசனங்களிலும் மத உரிமை இடம் பெற்றிருக்கிறது. நானும், மிஷெலும் எங்களுக்கு நாட்டம் உள்ள கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறோம். அதுபோல் ஒவ்வொரு தனி நபருக்கும் அவருக்கான மத உரிமை வழங்கப்பட வேண்டும்.

அதேவேளையில், மத நம்பிக்கை என்ற பெயரில் சிலர் வன்முறைகளை, தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதையும் நாம் கண்டு வருகிறோம்" என்றார். 

மோடி தலைமையில் மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சில இந்து அமைப்புகள் மறு மதமாற்ற நிகழ்ச்சிகளை நடத்துவது, சமஸ்கிருத திணிப்பு மூலம்  இந்துத்வா கொள்கைகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்,  இந்தியா வந்த ஒபாமா  மதச் சுதந்திரம் பற்றி பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தை உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது. 

No comments

Powered by Blogger.