Header Ads



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, முஸ்லிம் சகோதரரிடமிருந்து பகிரங்க கடிதம்

உங்களின் வெற்றிக்களிப்பை இன்று நாடே கொண்டாடுகின்றது. உங்கள் வெற்றி ஜனநாயகத்தின் வெற்றி. உங்கள் வெற்றி இனவாதத்திற்கு எதிராக கிடைத்த வெற்றி, உங்கள் வெற்றி,  ஊழல் மோசடி, சுரண்டல்களுக்கு எதிராக கிடைத்த வெற்றி என்று இந் நாட்டின் சமாதானத்தையும், சமூக ஒற்றுமையையும் , வளமான அபிவிருத்தியையும் விரும்பும் இந் நாட்டின் கௌரவ பிரஜைகள் என்ற அபிமானத்துடன்  மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த கால கசப்பான இனவாத அனுபவங்களால் புண் பட்டிருந்த முஸ்லிம்களும் இவ்வெற்றிக் கொண்டாட்டங்களில் இனமத பேதங்களை மறந்து பங்கேற்ற்றுள்ளார்கள் .  

   இவ்வாறனதொரு வெற்றிக் களிப்பை கடந்த 2009 மே மாதம் 18ந் திகதியும் இந் நாட்டு மக்கள் கொண்டாடினார்கள். முஸ்லிம்களும் அவ்வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்றார்கள். வரலாற்று நெடுகிலும் பிரிவினை வாதத்துக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிராக செயற்பட்ட இந்நாட்டு முஸ்லிம்கள் இந்நாட்டில் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனை உளப்பூர்வமாகவும், இலங்கையர் என்ற அபிமானத்துடனும் கொண்டாடினார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த செய்தியை முன்னாள் ஜனாதிபதி அவர்களால் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் அறிவிக்கும் போது , “  இந்நாட்டில் இனிமேல் சிறுபான்மையினர் எனும் ஓர் இனம் இல்லை. நாம் இலங்கையர் என்ற ஒரேயொரு ஒரு இனம் மட்டுமே உள்ளனர்” என்ற கூற்றில் நம்பிக்கை வைத்தனர். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவப் பிரஜைகள் என்ற அபிமானமும்,கௌரவமும் நமக்கு உண்டு என்ற எண்ணப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது. ஆனால், இந்த எண்ணம் தற்காலிகமாக்கப் பட்டது. கடந்த சுமார் இரண்டுவருடக் காலமாக  இந்நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தேறிய நிகழ்வுகள், எமது இத் தாய் திரு நாட்டிமீது எமக்கிருந்த பற்றை களங்கப் படுத்தியதும்  கசப்பான உண்மையாகும். 

ஒரு ஜனநாயக அரசின் பிரதான கடப்பாடு...
முப்பது வருடகால கொடிய யுத்தத்தை கடந்துள்ள இலங்கை மக்கள், மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்வு ஏற்படாதிருக்க வகைசெய்துகொள்ள வேண்டும். தமிழ் இளைஞர்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறி தம்மை தாமே அழித்துக் கொண்டு தாக்கியழித்துக் கொண்டது  , அவர்கள் வாழும் பிரதேசங்களுக்கு தார் வீதிகளையோ, பெருந் தெருக்களையோ, மின் கம்பங்களையோ, அல்லது மேம் பாலங்களையோ  வேண்டியல்ல. அந்த கொடிய யுத்தமானது ஜனநாயக ரீதியிலான கோரிக்கைகளுடன் ஆரம்பித்து வன்முறையை நோக்கி நகர்ந்த அரசியல் கோரிக்கைகளை நோக்காக கொண்டதொரு  யுத்தமாகும். 

  யுத்தத்திற்கான மூல காரணம், அரசியல் கோரிக்கைகளுக்கு எந்தவித  நிரந்தர தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை என்பதனாலாகும். அதற்கான நிரந்தர தீர்வை தேடிக் கொள்வதாயின் சிங்கள பொதுமக்கள் தமிழ் அரசியல் தலைவர்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றார்கள்  என்பது பற்றியும்  தமிழ் மக்கள் சிங்கள அரசியல் தலைவர்கள் இதுவிடயத்தில் எப்படி செயற்படுகிறார்கள்  என்பது பற்றியும் அஷ்ரப் போன்ற முஸ்லிம் தலைமைகள் எதை நோக்கி தமது அரசியல் வியூகங்களை வகுத்திருந்தார்கள், என்பது பற்றிய தெளிவோடு நம் முன்னைய தலைவர்கள்  இந் நாட்டு சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை அணுகி தீர்வுகளை எட்டியிருக்க வேண்டும். அது தவற  விடப்பட்டதால் இன்று இனவாதமே அரசியல் மூலதனமாக ஆக்கப் பட்டுள்ளது.    

   1983 இல் வீரியம் பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம், 2௦௦9ம ஆண்டு முள்ளிவாய்க்காலலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை இலங்கையின் இரண்டாவது சுதந்திரம் என்று அழைக்கப்பட்டாலும்  இந் நாட்டின் பௌத்த மேலாண்மை வாதம் மேலும் இஸ்திரப் படுத்தபடுவதரற்கும் வழிகோலியது என்பதையும் மறுக்க முடியாது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு தமிழ் தரப்பினருக்கு  எதிரான  கெடுபிடிகள்  எவ்வாறு ; தமிழர்களை அரசியல்ரீதியாக இரண்டாம் பிரஜைகளாக்குவதாக கொண்டிருந்ததோ, அதே போல்  முஸ்லிம்களுக்கு எதிராக  தொடுக்கப் பட்ட   நிழல் யுத்தமும் அவர்களை பொருளாதாரரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்  இரண்டாந்தர பிரஜைகாளாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பொது பல சேனா அமைப்பினால் நாட்டில் பல பாகங்களில் மேடை போட்டு “முஸ்லிம்கள் இந் நாட்டின் பூர்வீக குடிகள் அல்ல” என்று பகிரங்கமாக கூறப் பட்டது. அதாவது முஸ்லிம்கள் வந்தேறு குடிகள், இந் நாட்டில் வாழ்ந்து விட்டு போகலாம் அனால் உரிமைகளுக்காக போராடவோ குரல் கொடுக்கவோ முடியாது என்று கூறப் பட்டது.     

    பிரஜா உரிமை என்பது நாட்டின் யாப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைக்கப்பெற்ற சமநிலை அந்தஸ்தாகும். இதன் மூலமாகவே இந்நாட்டில் வாழவும், சாகவும் வியாபாரம் செய்யவும் கருத்தைச் சொல்லவும், சமயத்தைப் பின்பற்றவும், சமயத்தை துறக்கவும், வாழ்வில் இன்னோரன்ன அனைத்து விடயங்களுக்கும் உரித்துடையவனாகிறான். இதன்மூலம் சட்டத்தின் முன் யாவரும் சமம் என்ற உறுதிப்பாட்டிற்கு உரித்துடையவனாகிறான். இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட பிரஜா உரிமைக்கு முன்னால் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதம், இனத்துவப் பாகுபாடுகள், பூர்வீகக் குடிகள், வந்தேறு குடிகள் என்ற அத்தனை வேற்றுமைகளும் அடிபட்டு போய்விடும். ஆகவே இந் நாட்டின் அனைத்து குடிமக்களினதும்  உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதே ஒரு ஜனநாயக அரசின் பிரதான கடப்பாடாகும். 

பொது பல சேனா உருவாக்கமும் அரச பின்னணியும் ..
ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது அதிகாரத்தை நீண்டகாலத்திற்கு தக்க வைக்கும் நோக்கில் பல குறுகிய வழிகளை பின்பற்றத் தொடங்கினார். இனவாதம் இதற்கான முதற் தர இலகு வழியாக இவருக்கு ஆலோசனை வழங்கப் பட்டது.  தெற்கில் சிங்கள பௌத்த வாக்குகளை மாத்திரம் தம் வசம் கவர்வதால் ஜனாதிபதி தேர்தலில் இலகுவாக வெற்றிபெறலாம் என்ற கணிப்பில் அரசாங்கம் பொதுபல சேனா இயக்கத்தை உருவாகியது. 

        தனியான சிங்கள வாக்குகளால் மாத்திரம் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 70%மான வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷ பெறவேண்டும் என்று கோதாபய கணித்திருந்தார். யுத்த வெற்றியை தொடர்ந்து 2௦௦5 இல் நடைபெற்ற ஜனாதிபதிதேர்தலில் 60% சிங்கள வாக்குகளை மஹிந்த ராஜ பக்ஷ தம்வசப்படுத்தி இருந்தார். பொது பல சேனா வை உருவாக்கி அவர்களை வீதியில் இறக்கி முஸ்லிம் விரோதத மனப்பாங்கை பௌத்தர்களுக்கு மத்தியில் ஏற்படுத்துவதால் மிகுதி 10% சிங்கள பௌத்த வாக்குகளை இலகுவாக தம்சவசப்படுத்தலாம் என்று ராஜபக்ஷேக்கள் கணித்திருந்தார்கள். இச் சித்தாந்ததத்தின் அடிப்படையிலேயே நாடெங்கிலும் முஸ்லிம்களுக்கெதிரான சுமார் 3௦௦க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு பொதுபல சேனா சம்பந்தப் பட்டது. பேருவல அளுத்கம வன்செயல்களின் மூலமாகவே இவ்விடயம் சமூகமயமாக்கப் பட்டது.

நிம்மதி பெருமூச்சி விடும் முஸ்லிம்கள் .....
      மகிந்த எதிர்ப்பிற்கு இந்த நிகழ்வே மைய்யப் புள்ளியாக இருந்தது. யுத்த வெற்றியின் பின் “மகா ரஜானோ”  என்று மக்களால் அழைக்கப்பட்ட மகிந்த ராஜ பக்ஷவை வீட்டுக்கு அனுப்ப, அவரை ஆட்சிபீடம் ஏற்றியவர்களே வாரிக்கட்டிக்கொண்டு மல்லுக்கு வந்தார்கள். அவரின் செயற்பாடுகளே அவருக்கு எதிராக பெரும் சக்தியாக திரண்டு இறுதியில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தது. ஒரு அநியாயக் கார ஆட்சியாளனிடமிருந்து விடுதலை பெற்ற உணர்வு இன்று பெரும்பானமையானவர்களிடம் ஏற்பட்டுள்ளது.  
 அவரின் ஆட்சிக்கவிழ்ப்பில் (உங்களின் ஆட்சியேற்பில்) இன்று இந் நாட்டு சிறும்பான்மை சமூகம் நிம்மதி பெருமூச்சி விடுகின்றது. முஸ்லிம்களை பொறுத்த மட்டில் கடந்த ஆயிரம் வருடங்களுக்கு மேல் இந்நாட்டு பெரும்பான்மை சமூகத்துடன் கொண்டிருந்த சுமுகமான உறவை  மீண்டும் தமது மத கலாசார தனித்தவங்களை பேணியவாறு கட்டி எழுப்பலாம் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்கள். 

மைத்ரி எதிர்பார்ப்பு............................
மாண்புமிகு ஜனாதிபதியவர்களே ! 
      வேற்றுமையில் ஒற்றுமை கண்டு இந் நாட்டை புதியதொரு சித்தாந்தத்தில்  ஆட்சி செய்ய புறப்பட்ட நீங்கள் “ மைத்ரி ஆட்சி” ( கருணையை மைய்யமாக கொண்டதொரு ஆட்சிமுறை) எனும் தொனிப் பொருளையே உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில்  மணிமகுடமாக கொண்டிருந்தீர்கள். உலக அளவில் முன்னுதாரணமிக்க நாடாக இலங்கையை முன்னேற்ற நினைக்கும் உங்களுக்கு பல் சமூக அமைப்பை கொண்டதொரு தென் ஆபிரிக்காவை உருவாக்கிய (rainbow nation)    நெல்சன் மண்டேலாவின் கொள்கைகளை  மிகப் பணிவுடன் பரிந்துரைக்கின்றோம். இதன் அடிப்படையிலான ஆட்சி மாற்றத்தையே “ மைத்ரி எதிர்பார்ப்பாக ” நாங்கள் கொள்கிறோம்.   

புதியதொரு தென் ஆபிரிக்காவை தோற்றுவித்த நெல்சன் மண்டேலா...... 
       தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா 27 வருடகாலம் சிறைவாசம் அனுபவித்தவர். 1950 ம் ஆண்டில் ஆபிரிக்க கொங்கரசினால் நெல்சன் மண்டேலா ஆயுத போராட்டத்தின் தலைவராக ஆக்கப் பட்டார். ஆயுத போராட்டமொன்றின் தேவையுணரப் பட்ட போது நெல்சன் மண்டேலா அதன் தலைவராக ஆக்கப் பட்டார். ஆனாலும் 27 வருடகாலம் சிறைவாசம் அனுபவித்தவர், விடுதலையான பின் தாங்களால் ஏற்பட்ட பிழையை உணர்ந்துகொள்ளும் மனப் பக்குவத்தை தன சமூகத்திற்கு ஏற்படுத்திய காரணத்தினால் தான் இன்று அந்நாடு சௌபாக்கியமான தொரு நாடாகவும், மக்களின் உரிமைகளை பெற்றுகொடுக்கும் ஒரு நாடாகவும் மிளிர்கின்றது. அது எந்தளவுக்கென்றால் நெல்சன் மண்டேலாவின் மனைவி வினி மண்டேலாவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்ற விடயம் நிரூபணமான போது, புதைக்கப் பட்டிருந்த வினி மண்டேலாவின் பிரேத உடலை வெளியில் எடுத்து ஆய்வுகளை மேற்கொண்டு சாட்சிகளை திரட்டினார்கள். இதன் மூலம் நாம் அறிய முடிவது என்ன வென்றால் அவர்கள் எதையும் மூடி மறைக்க முயற்சிக்க வில்லை என்பதைதான் . 

 கறுப்பின பெரும்பானமையினரான அந் நாட்டின் பூர்வீக குடிகளை அடிமை படுத்தி ஆட்சி செய்த சிறும்பான்மை வெள்ளைக்காரர்களை மன்னித்து அவர்களுக்கும் அந் நாட்டில் குடியுரிமை வழங்க நெல்சன் மண்டேலா முன்வந்தார். அதன் மூலம் கருப்பர்களை அடக்கி ஆழ்ந்த வெள்ளைக் கார நிலச் சுவாந்தர்கள், பண்ணைகாரர்களும் அந் நாட்டின் குடிகளாக நாட்டை முனேற்ற பாரிய பங்களிப்பு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.    இது போன்றே ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மூலம் கடந்த காலங்களில் நடைபெற்ற  அநீதிகள், தவறுகளை பகிரங்கமாக ஏற்றுகொண்டு தம்மை சரி செய்துகொண்டு  அவர்கள்  முன்னோக்கி சென்ற  காரணத்தினால் தான் அந் நாட்டு மக்கள் அனைவரினதும் உரிமைகளை  சமமாக மதிக்கின்றதொரு  முன்னுதாரணமான தேசமாக உலகில்   அது இன்று திகழ்கின்றது.

 “ நீங்கள் மோகன்தாஸ்  காந்தி என்ற வழக்கறிஞர் ஒருவரை எங்கள் நாட்டிற்கு அனுப்பினீர்கள். நாங்கள் அவரை மகாத்மா காந்தியாக மாற்றி உங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தோம்”  என்று தென் ஆபிரிக்க மக்கள் இன்று இந்தியர்களை பார்த்து பெருமையுடன் கூறுகின்றார்கள். தென் ஆபிரிக்காவிலிருந்தே காந்தியவர்கள் தமது அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.  

மாண்புமிகு ஜனாதிபதியவர்களே ! 
40 வருட கால அரசியல் அனுபவமிக்க உங்களுக்கு ஆட்சி முறைபற்றி தெளிவுபடுத்துவது எமது நோக்கமல்ல. ஆனால் சித்தாந்தங்களை யதார்த்தங்களாக்குவதற்கு உங்களுக்கோர் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆதலால் இந் நாட்டின் மீது பற்றுள்ளவர்களாகவும், முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்களாகவும் உங்கள் ஆட்சிக் காலத்தில் நீங்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய இரண்டு விடயங்களை குறிப்பிடலாம் என்று நினைக்கின்றோம்.

எதிராளியை மன்னிப்பதும் குற்றவாளியை மன்னிப்பதும் 
எதிராளியை மன்னிப்பதும் குற்றவாளியை மன்னிப்பதும் இருவேறு விடயங்களாகும். எதிராளியை மன்னிப்பது ஒரு மனிதனின்  மனிதநேயத்தை, நல்ல பண்பை, முன்னுதாரணத்தை கொண்ட செயலாகும். அனால் குற்றவாளியை மன்னிப்பதென்பது அவன் செய்த குற்றத்தைப் பொறுத்ததாகும். இந் நாட்டு ஏழை மக்களின் வரிப்பணத்தை சுரண்டி கொள்ளையடித்து, ஜனநாயகத்தின் பெயரில் பாரிய குற்றமிளைத்தவரை சட்டத்திற்கு முன் கொண்டுவரப் படவேண்டும் என்று இந் நாட்டின் நல்லாட்சியை விரும்பும் மக்கள் மிகவும் எதிர் பார்போடு உள்ளார்கள். உங்களுக்கு அளிக்கப்பட வாக்குகள் சொல்லும் செய்தியும் அதுவாகத்தான் உள்ளது. 
   முன்னால் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தின் கடைசி நிமிடங்கள் கூட ஜனநாயகத்தின் ஓட்டைகள் வழியே ஆட்சியையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகள் நடந்தேறியுள்ளன. இது உங்களுக்கெதிராக உருவெடுக்கவுள்ள  பாரிய சவால்களின் முன்னெச்சரிக்கையாகவே நாங்கள் காண்கின்றோம். ஆகவே உங்கள் மைத்ரி (கருணை) ஆட்சியில் கள்வர்கள் தப்பித்துக்கொள்ள வாய்ப்பளிக்கப் படுவதால் மீண்டும்மீண்டும் இந் நாட்டு வளங்களை கொள்ளையடிக்கும்  வாய்ப்புக்களுக்காக  சந்தர்ப்பம் அளிக்கப் படக் கூடாது என்பதை எதிர்பார்க்கின்றோம்.

உங்களின் புரட்சிக்கு கைகொடுத்த எமது சமூகத் தலைமைகள் 
 உங்களின் புரசிக்கு கைகொடுத்த எமது சமூகத் தலைமைகள் கடந்த சுமார் இரண்டரை வருடங்களாக இந் நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டவர்கள். அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஏற்படுத்தப் பட்ட முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கெதிராக அரசாங்கத்தின் வெளியில் இருந்து குரல் கொடுத்த தலைவர் அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் முதல் அரசாங்கதிற்குள்ளிருந்து குரல் கொடுத்த ரிஷாத் பதியுதீன், ரவுப் ஹகீம், பைசர் முஸ்தபா போன்றோர் வரை பாரிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் செயற் பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக வடக்கிலிருந்து விரட்டப் பட்ட வன்னி மக்களின் ஏகப் பிரதிநிதியான ரிஷாத் பதியுதீன் அவர்கள் நாட்டில் நாளா பக்கத்திலும் முஸ்லிம் சமூகத்திற்கு  எதிராக  நடந்த பிரச்சினைகளுக்கு மிக காத்திரமாக குரல் கொடுத்தவர். ஜனாதிபதி மற்றும் அவரின் சகோதரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த அவர் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையிலேயே எமது சமூகத்திற்காக தைரியமாக முடிவெடுத்து அரசாங்கத்தை விட்டு வெளியேறினார்கள்  என்பதை எங்கள் சமூகம் அறிந்தே வைத்துள்ளது. 

      மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு நடந்தேறிய இந்த ஆட்சி மாற்ற நிகழ்வில் ஆளும் கட்சியை சேர்ந்த ஐம்பத்தட்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் பொது எதிரணியுடன் கை கோர்ப்பார்கள் என்ற எதிர் பார்ப்புடனேயே இந் நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப் பட்டது. ஆனால் மேற்குறித்த உறுப்பினர்கள் அடங்களாக 27 பாராளுமன்ற உறுப்பினர்களே இச்செயற்பாட்டில் ஒன்றிணைந்தார்கள். தேர்தலில் கிடைக்கப் பெற்ற வாக்குகளை கணித்து பார்க்கும் போது இவ்வாட்சி மாற்றத்தில் இவர்களின் பங்களிப்பை எவ்வகையிலும் குறைத்து மதிப்பிட முடியாதுள்ளது.

    இவ்விடத்தில் நாம் மேற்சொன்ன முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை தனியாக கோடிட்டு காட்ட வேண்டிய தேவை ஏற்பட்டதையிட்டு எமது கவலையை தெரிவிக்கும் அதேவேளை இதன் தேவையை உணர்த்தும் கடப்பாடும் எமக்குண்டு. உங்கள் தலைமையில் ஒன்றுபட்டிருக்கும் புதிய ஆட்சியில் நேர் எதிர் கருத்துகளை கொண்ட பல அரசியல் கட்சிகள் பங்காளிகளாக ஒன்றிணைதுள்ளனர். குறிப்பாக கடந்த காலங்களில் இந் நாட்டு முஸ்லிம்கள் விடயத்தில் பல முரணான கருத்துகளை பகிரங்கமாக வெளியிட்டுவந்த ஜாதிக ஹெல உறுமய இவ்வாட்சி மாற்றத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளததை நாம் அறிவோம். இவர்கள் தற்கால அரசியல் சூழலில் மன மாற்றத்துடன் கருத்தொருமித்து இந் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதில் இணங்கி  செயல் படுவதில்  எந்தப்பிரச்சினையும் இல்லை . ஆனால் முரண்பாடுகள் எழும் போது, கடந்த அரசாங்கத்தில் நேர்ந்தது போல் உதாசீனப் போக்கிற்கு இவர்கள் ஆளாக்கப் படக் கூடாது. 

       அதாவது இவர்கள் வெறும் அமைச்சுப் பதவிகளால் அலங்கரிக்கப் பட்டுவிடுவதால் மாத்திரம்  இவர்களுக்கான (எமது சமூகத்திற்கான) கௌரவமும் மதிப்பும் கிடைத்து விடாது, மாறாக வெளிப்படை தன்மையாக எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வாய்ப்பு இவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் நாம் உங்கள் முன் வைக்கும்  வேண்டுதலாகும். 

  உங்கள் தரப்பினால் நடத்தப் பட்ட முதலாவது ஊடக சந்திப்பிலேயே, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பா ம உறுப்பினர் திரு சம்பிக்க ரணவக அவர்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளை சமூக அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளை விளக்கமளிக்க முற்பட்டதை காண முடிந்தது. இதன் காரணமாகவே எம்மை இவ்வாறானதொரு கடிதத்தை எழுத தூண்டியது.  இது நல்லதொரு ஆரம்பமாக கருத முடியாது.  ஆகவே இந் நாட்டின் அனைத்து சமூகத்தவர்களும் இவ்வாட்சி மாற்றத்தில் சம பங்காளிகள் என்ற உயர் சிந்தனையின் அடிப்படையில் உங்கள் மைத்ரி ஆட்சி மலர எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏ எம் எம் முஸம்மில், (B A Hons)

1 comment:

Powered by Blogger.