Header Ads



மஹிந்த புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள சில கட்சிகள் தீர்மானித்துள்ளன.

லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி, மக்கள் கட்சி உட்பட சில கட்சிகள் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்பதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தலைமையில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுதந்திரக்கட்சியை சேர்ந்த மகிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டளஸ் அழகபெரும ஆகியோரும் இருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி தலைமையில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவே கூடிய அக்கறை காட்டி வருகிறார்.

இதனடிப்படையில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார். நாட்டின் இன்றைய அரசாங்கத்தினால், மக்களுக்கும் நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும் என தான் உணர்வதாகவும் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்காததால் மகிந்த தோல்வியடைந்தார் என முன்னெடுக்கப்படும் வரும் பிரசாரம் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டும் முயற்சியாகும்.

தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது முழுமையான பொய், சிங்கள பிரதேசங்களில் வாக்குகள் கிடைக்காத காரணத்தினாலேயே மகிந்த தோல்வியடைந்தார் எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.