தென்கிழக்கு உட்பட சகல பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்ற மோசடிகளை ஆராய விசேடகுழு
(இஸ்மாயில் தீன்)
தென்கிழக்குப் பல்கலைக் கழகம் உட்பட நாட்டிலுள்ள பல பல்கலைக் கழகங்களில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடி, முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக விசேட விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் பல்கலைக் கழகங்களில் இடம்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இச்சந்திப்பில் பிரதமருடன் உயர் கல்வி, நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விபரித்ததுடன் அது தொடர்பிலான ஆதாரங்கள் அடங்கிய முழுமையான அறிக்கையொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை பிரத்தியேகமாக சந்தித்த தென்கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து விளக்கிக் கூறியுள்ளதுடன் அவரிடமும் மேற்படி அறிக்கையை கையளித்துள்ளனர்.
அத்துடன் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடமும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இச்சங்கத்தினரால் முறையிடப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி செயலகத்திலுள்ள ஊழல், மோசடி விசாரணைப் பிரிவிடமும் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழகம் உட்பட நாட்டிலுள்ள பல பல்கலைக் கழகங்களில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து அவை தொடர்பில் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குறித்த பல்கலைக் கழகங்களின் கல்வி மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளன.
கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளைகளில் தம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எதனையும் மேற்கொள்ள முன்வரவில்லை என தொழிற் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த ஊழல் மோசடிகளுடன் குறித்த பல்கலைக் கழகங்களின் உபவேந்தர்களுக்கும் உயர் கல்வி அமைச்சருக்கும் நேரடி தொடர்புகள் இருந்து வந்தமையினாலேயே தமது முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் அவை கிடப்பில் போடப்பட்டிருந்தன என்றும் தொழிற் சங்கங்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றன
.jpg)
Post a Comment