முஸ்லிம் காங்கிரஸ் Vs மைத்திரி
(முஸ்லிம் காங்கிரஸ் அதன் முடிவை அறிவித்தது தொடர்பாக உள்ள மாற்றுக்கருத்துக்கள் பல இருந்தும் அதனை ஒரு நீண்ட கட்டுரையில் எழுதி முடிக்காமல் ஒவ்வொரு விடயமாக தலைப்பிட்டு எழுதவே முதலில் கடந்த திங்கள் 29 ஆம் திகதி 'மக்களின் தலைவர்கள் வாழ்க' எனும் தலைப்பில் ஜப்னா முஸ்லிமில் பிரசுரமான கருத்தை எழுதினேன். இன்றைய அரசியல் சூழலில் எமது பெரும்பான்மையான மக்கள் எப்படியான தலைவர்களைத் தூக்கிச் சுமக்கிறார்கள் என்ற அவல நிலையை புகழ்வதுபோல் இகழந்தே எழுதினேன் அதனை சிலர் பிழையான வாசிப்புச் செய்து பின்னூட்டல் செய்திருந்தார்கள் - அதில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவில் உடன்பாடில்லாத கருத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறேன் அதாவது முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியுடன் இணைந்தவுடன் முஸ்லிம்கள் மீதான பிரச்சினை எல்லாம் முடிந்துவிட்டது என்ற தவறான புரிதலை சாதாரணமான ஒரு கருத்தாக பெரும்பான்மையான மக்கள் பேசுகின்றார்கள் என்பதை அவர்களின் பக்கம் இருந்தே எழுதினேன்.
இதனை எதற்காக முற்குறிப்பிடுகிறேன் என்றால் மக்களின் தலைவர்கள் வாழ்க என்று ஹக்கீமை ஒவ்வொருவராகத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று புகழ்ந்து அதில் எழுதிவிட்டு இப்போது அவரின் முடிவு குறித்து எதிராக விமர்சிக்கின்றேன் என்று பின்னூட்டல் செய்தவர்கள் போன்று இன்னும் பலரும் ஒரு முரணை எனது எழுத்தில் பார்கக்கூடாது என்பதற்காகத்தான்.
அதேநேரம் எந்த முடிவையும் எடுக்காமல் காலத்தைக் கடத்தும் ஹக்கீமின் நிதானத்தினை மிக வெளிப்படையாக வரவேற்று பல கருத்துக்களை நான் ஹக்கீமின் நிதானம் குறித்து பாராட்டியுமிருக்கிறேன். அதற்கு மாற்றமான ஒரு முடிவை அறிவித்ததால் அதிலுள்ள மாற்றுக்கருத்துக்களை முன்வைக்கிறேன்.)
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து மிகவும் நிதானமாக தனது முடிவை அறிவிக்காமல் இதுவரையும் காலத்தைக் கடத்திய ஹக்கீமின் நிதானம் மிகவும் பொருத்தமான ஒரு நிலைப்பாடாகும் என நேற்றுவரை அவரை சமூக நோக்கோடு பாராட்டி வந்தோம். அந்த நிதானத்தை இழுத்துப்பிடிக்க முடியாமல் இறுதியில் மைத்திரியின் மக்கள் வெள்ளத்தில் தானும் நணைய இன்று தனது கட்சியோடு அவரும் குதித்துவிட்டார்.
ஆனாலும் ஹக்கீம் மைத்திரியை ஆதரிப்பதற்கான முடிவினை அறிவித்திருக்கும் விதம் முன்னுக்குப் பின் முரணான கொள்கைகளை உடையதாகவும் ஒரு பயனில்லாத இணைவாகவுமே தெரிகிறது. இதற்கு தனது முடிவினை அறிவித்த ஹக்கீம் ஊடகவியலாளர்களிடத்தில் கூறிய கருத்துக்களே சான்றாகின்றது :
....... கிழக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் மீது பழிவந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சுக்களை இராஜினாமாச் செய்தாலும் மாற்றுக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை பேசாமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது என்பதனால் அடுத்து கூடுகின்ற சபையில் முதலமைச்சரால் முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்திற்கு எமது கட்சி ஆதரவு அளிக்கும் என்பதையும் இங்கு கூறியே ஆகவேண்டும்.
இக்கருத்தின்படி ஒரு பக்கம் தேர்தலுக்காக மைத்திரியுடன் இணைந்துகொள்வதும் மறுபக்கம் மாகாணசபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்து மஹிந்தவுடன் கைகோர்த்து நிற்பதுமான இரண்டு முடிவுகள் எடுக்கப்பட்டதாகவே உறுதியாகிறது. இது பாலும் குறையக் கூடாது பூனையும் குடிக்க வேண்டும் என்ற நொடியாகவே தெரிகிறது.
இது ஆகவும் முரணான ஒன்றாகும் இது மைத்திரியை திருமணம் முடித்துக் கொண்டு மஹிந்தவுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் கதையாகவே இருக்கிறது. அடுத்து மைத்திரியுடன் எந்த ஆதாரமும் இல்லாத ஒரு திருமணத்தை ஹக்கீம் முடித்திருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்துகிறது.
மேலும், ஹக்கீமின் முடிவின்படி தற்போது மைத்திரியுடன் எந்த உடன்பாடும் இல்லாமல் பேச்சுவார்த்தையும் இல்லாமல் அழையா வீட்டுக்கு நுழையா விருந்தாளி என்ற அடிப்படையில் ஹக்கீம் சென்றிருக்கிறார். அதனால்தான் எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது என்று கூறி கிழக்கு மாகாண சபையின் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொள்ளாமல் அதன் வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதென இப்போதே அறிவித்திருக்கிறார்.
இதன்படி தேர்தலில் மைத்திரி வெற்றி பெற்றாலும் கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தே ஆகவேண்டும். அதற்கான உறுதி மொழியை ஹக்கீம் இப்போதே வழங்கிவிட்டார். இவ்வாறு மைத்திரி வெற்றி பெற்ற பிறகு ஹக்கீம் தான் உறுதியளித்தபடி செய்யாவிட்டால் அவரை மீண்டும் ஒருமுறை மஹிந்த முனாபிக் என்று அழைக்க நேரிடும்.
அடுத்து தான் வெற்றிபெற்ற பிறகு கிழக்கு மாகாண சபை வரவு செலவுத்திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளிப்பதை மைத்திரி ஏற்றுக்கொள்வாரா? அது ஒரு அரசியல் நியாயமாகுமா? எனவே ஹக்கீமின் இத்தேர்தல் முடிவானது அவர் இரட்டை வேடம் போட்டுள்ளதைக் காட்டுகிறது.
இவ்வாறு மைத்திரியுடன் இணைந்துகொண்டு தேர்தல் முடிவும் தெரியாத நிலையில் ஹக்கீம் கிழக்கு மாகாண சபை வரவு செலவுத்திட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிக்கும் எனக் கூறியதில் உள்ள இராஜதந்திரம் அல்லது அவருடைய பாஷையில் கூறுவதாயின் அதன் வியூகம் என்னவென்றால்.
முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதில் உள்ள முடிவினை எடுப்பதில் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் இருந்தன அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மைத்திரியை ஆதரிப்பதற்கும் மாகாணசபை உறுப்பினர்கள் மஹிந்தவை ஆதரிப்பதற்கும் தங்கள் நிலைப்பாட்டை பகிரங்கமாக முன்வைத்தும் அதன் பின் ஹக்கீமிடம் அதனைத் தனித்தனியாக வற்புறுத்தியும் வந்தது நாம் அறிந்ததே.
இந்நிலையில் தற்போது மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களின்; விருப்பப்படி மைத்திரியை ஆதரிக்கும் முடிவினை எடுக்க வேண்டிய கட்டாயம் ஹக்கீமுக்கு வந்ததால் இந்த முடிவில் மாகாணசபை உறுப்பினர்களைத் திருப்திப்படுத்த முடியாது என்பதற்காக அவர்களின் பதவிகளையும் கதிரைகளையும் தக்க வைத்து கிழக்கு மாகாண ஆட்சியை தொடந்து கொண்டு செல்ல அங்கு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பது என்ற உறுதியினை இப்போதே அளிவித்துவிட்டார்.
இதனால் கிழக்கு மாகாணசபை கலையாது தொடர்ந்து இயங்கும் என்ற நம்பிக்கை மாகண சபை உறுப்பினர்களுக்கு உத்தரவாதமாக வழங்கப்பட்டுவிட்டது. மேலும் தேர்தல் முடிந்த பிறகு வரவு செலவுத் திட்டத்திற்கு வாக்களிப்பதற்கான பேரம் பேசுதலைப் பேசி கொடுத்த அமைச்சுக்களை மீண்டும் பெற்றுக்கொள்வார்கள்.
இப்படி ஹக்கீம் மைத்திரியுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர்களையும், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதிகூறி மாகாண சபை உறுப்பினர்களையும் திருப்திப்படுத்தியதோடு தன்னையும் மக்கள் விரும்பிய முடிவினை எடுத்த ஒரு தலைவனாக நிரூபித்திருக்கிறார். இது ஒரு கல்லில் மூன்று மாங்காய்களை ஆய்ந்த தந்திரமாகும். (ரஊப் ஹக்கீம் என்றால் சும்மாவா?)
மேலும் மைத்திரிக்கு ஆதரவளித்த அறிவிப்போடு கிழக்கு மாகாணசபை வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது என்ற உறுதியினையும் அளித்ததில் உள்ள இன்னுமொரு விடயம் ஹக்கீம் தன் முழுமனதோடு மஹிந்த அரசிலிருந்து வெளியாகாமல் தனக்கு விருப்பமில்லாத ஒரு முடிவை எடுத்திருப்பதாகவும் மஹிந்த தோற்றுவிடுவார் என்பதில் அவருக்கு இன்னும் சந்தேகங்கள் இருப்பதாகவும் மறுபுறம் புரிய வைக்கிறது. அதற்காகத்தான் மஹிந்த வெற்றிபெற்றாலும் மாகாண சபையில் பிடிக்கலாம் என்ற ஒரு துரும்பை வைத்து அதற்கான அறிவிப்பை இப்போதே செய்திருக்கிறார்.
இவ்வாறு கட்சியும் தலைமையும் ஒரு முரண்பட்ட முடிவினை அறிவித்த பிறகு, கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவுத் மஹிந்தவின் வெற்றிக்கு பிராத்திப்பதாகவும் அவருடன் தேர்தல் பணிபுரிய முடியாமல் போனமைக்கு வருத்தம் தெரிவித்தும் கடிதம் அனுப்பி வைத்தமையும், கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர்கள் ஹாபிஸ் நஸீர்,மன்சூர் ஆகிய இருவரும் தங்கள் அமைச்சுப்பதவிகளை இராஜினாமா செய்யாது இருந்தமையும் மஹிந்தவுடனான கட்சியின் உள்ளார்ந்த கள்ளக் காதல் நிலைப்பாட்டை மேலும் தெளிவாக வெளியில் எடுத்துக் காட்டுகிறது.
ஆனாலும் இதில் பஷீர் சேகுதாவுத் மற்றும் கிழக்குமாகாண அமைச்சர்களின் நிலைப்பாட்டைத்தான் எல்லோரும் பிழைகண்டு அவர்களை விமர்சிக்கப்பார்க்கிறார்கள். கட்சிக்குள் இரட்டை வேடம் போடுகின்றார்கள் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. இது உண்மையில் இவர்களின் தவறு அல்ல ஹக்கீம் எடுத்த முடிவிலுள்ள தவறு. இவர்களை விமர்சிப்பதில் எந்தப் பயனுமில்லை உண்மையில் இவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு இடம்கொடுக்கும் ஒரு முடிவினை எடுத்த ஹக்கீமின் தவறுதான் இது என்பதை மேலே நான் தெளிவாக விளக்கி இருக்கிறேன்.
எனவே இதில் ஆகவும் பிழை விட்டிருப்பவர் ஹக்கீம். இதனால் கட்சியுள்ளவர்கள் விடுகின்ற அரசியல் தவறுகளுக்கும் ஹக்கீம்தான் பதில் கூறவேண்டும். ஏனெனில் அவர் முழுதான மனதுடன் மைத்திரியுடன் இணையவில்லை இதனை நிரூபிக்கும் வகையில் ஹக்கீம் கட்சியின் முடிவினை அறிவிக்கும்போது அரசை தாறுமாறாக விமர்சிக்காது எந்த காழ்புணர்ச்சிகளும் இல்லாமல் மிகவும் பக்குவமாக நேர்மையான பிரச்சாரங்களைச் செய்வோம் என்றும் தனது உரையில் கூறி, மஹிந்தவுடனான கள்ளக் காதலை காட்டாமல் காட்டி இருக்கிறார்.

Mr. Nawas,
ReplyDeletePlease stop your future articles, we do not like this.