Header Ads



கத்தார் நாட்டில் தொடர் கதையாகும், வெளிநாட்டு பணியாளர்களின் இறப்பு

வரும், 2022ம் ஆண்டில், உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இதற்காக, பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களில் பலர், அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மரணமடைவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தான் அதிகளவில் கட்டுமான பணிகளில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதாக, கார்டியன் நாளிதழ் சுட்டிகாட்டியுள்ளது.

நேபாள தொழிலாளர்கள்:

இதன்படி, நடப்பாண்டில், ஜனவரி - நவம்பர் வரையில் மட்டும், நேபாளத்தைச் சேர்ந்த, 157 கட்டுமான தொழிலாளர்கள் மாரடைப்பு மற்றும் விபத்துகளால் மரணமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த, 2013ம் ஆண்டின் இதே காலத்திலும், 168 ஆக மிகவும் அதிகரித்து காணப்பட்டது. அதாவது, ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு, ஒரு நேபாள தொழிலாளி தன் இன்னுயிரை இழக்கிறார். இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் மரணங்களையும் சேர்த்து கணக்கிட்டால், ஒவ்வொரு நாளும் மரணமடைபவரின் எண்ணிக்கை நிச்சயம் இன்னும் அதிகமாகவே இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் பணிபுரியும் சூழலை மேம்படுத்தி தர, வளைகுடா நாடுகள் உறுதியளித்துள்ள நிலையிலும், தொடரும் இந்த மரணங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து, கத்தார் அரசு, தீவிர விசாரணை மேற்கொண்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது.

அதிக வெப்பநிலை:

இச்சம்பவம் குறித்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான மனித உரிமை ஆராய்ச்சியாளர் நிக்கோலஸ் மெக்கீகன் கூறுகையில், ''அதிக வெப்ப நிலையில், தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை பார்ப்பதே இது போன்ற மரண சம்பவங்கள் நிகழ முக்கிய காரணம். இது தொடர் கதையாகி வருவதை, சம்பந்தப்பட்ட நாடு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

No comments

Powered by Blogger.