Header Ads



'அப்பமும், கோப்பியும்'

(நஜீப் பின் கபூர்)

இலங்கை அரசியல்வரலாற்றில் 2015 ஜனாதிபதித் தேர்தல் பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் நெருக்கடிகள் மிகுந்ததாகவும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. ஜனாதிபதியாக இருந்த ஒருவர் இரண்டு தவணைகளுக்கு மேல் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது என்ற முன்னைய விதி நீக்கப்பட்டு ஜனாதிபதியாக இருந்த ஒருவர் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பதவி வகிக்க முடியும் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டு பாதை திறந்து விடப்பட்டதால் மூன்றாவது முறையாகவும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோதாவுக்கு வர முடிந்திருக்கின்றது.

இந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாராக இருந்தால் தொடர்ச்சியாக மூன்று தவணைக்கு பதவிக்கு வருகின்ற முதல் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷ வரலாற்றில் இடம் பிடிப்பார். அரசியல் யாப்புத் திருத்தம் அப்படி ஒரு வரலாற்று மாற்றத்துக்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றது. அந்த விவகாரங்கள் அப்படி இருக்க 2015 தேர்தலில் அதிகம் பேசப்படுகின்ற விவகாரமாக அப்பம், கோப்பி, பைல்கள், ஊழல், குடும்ப ஆதிக்கம், அபிவிருத்திப் பணிகளில் கமிஷன் என்ற விவகாரங்கள் மேடைகளில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இரு பிரதான வேட்பாளர்களும் தத்தமது வெற்றியில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். பொதுவாக மக்களும் இந்தத் தேர்தலில் நெருக்கமானதொரு போட்டி இருக்கும் என்று கருதுகின்றார்கள். ஆனாலும் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் குறிப்பாக பொதுசன ஐக்கிய  முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த மகிந்த ராஜபக்ஷ 18 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றிபெறுவார் என்று அடித்துக் கூறுகின்றார்.

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரி 60 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்று முன்னாள் மீன் பிடி அமைச்சர் ராஜித சேனாரத்தன தமது தரப்பு சார்பில் உறுதி கூறுகின்றார். அதனை அரசு உளவுத்துறையும் உறுத்திப்படுத்துகின்றது என்பது அவரது கருத்து. எனவே இந்த இருகருத்துக்களும் தமது தரப்பு சார்பாக தாமே கொடுக்கின்ற கணக்கு வழக்குகள்,சான்றிதழ்கள் என்பதால் வாக்காளர்கள் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பது எமது கருத்து.

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் நாட்டிலிருந்து தப்பியோட முடியாதவாறு ஜனவரி 8ஆம் திகதி இரவு 10 மணியுடன் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் என்று பொது வேட்பாளர் மைத்திரி அறிவிப்புச் செய்ய, ஏன் எங்களுக்கு ஹம்பாந்தோட்டை  மத்தளயில் ஒரு விமான நிலையம் இருக்கின்றது என்று நாமல் ராஜபக்ஷ அதற்குப் பதில் கொடுத்திருந்தார். 

ஜனாதிபதி ராஜபக்ஷ நான் பெந்தர நதிக்கரைக்கு அப்பால் பிறந்தவன். அப்படி கோழைத் தனமான தப்பி ஓடுகின்ற ஆள் நானில்லை, என்று ராஜபக்ஷ தனது வீரம் தொடர்பாக மைத்திரிக்குப் பதில் கொடுத்திருந்தார். பெந்தரை நதிக்கு அப்பால் பிறந்தவர்கள் துணிச்சல்காரர்கள் எதற்கும் பயப்பட மாட்டார்கள் என்பதுதான் இந்த வார்த்தையின் அர்த்தம்.

இதற்கிடையில் தன்னுடன் ஒரு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பொது வேட்பாளர் மைத்திரி ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு பகிரங்கமாக சவால் விட்டிருக்கின்றார். இந்த சவாலை பெரும்பாலும் ராஜபக்ஷவும் ஏற்றுக் கொள்ளக்கூடும் என்பது கட்டுரையாளனின் கருத்து. இதுபோன்ற சவால்களுக்கு ராஜபக்ஷ அச்சப்பட மாட்டார் என்பதால் நாமும் அப்படிக் கருதுகின்றோம்.இந்த விவாதம் நடந்தால் இலங்கை அரசியல் வரலாற்றில் நடக்கின்ற பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான முதல் நேரடி விவாதமாக இதுவும் வரலாற்றில் இடம் பிடிக்கும். எனவே மேற்கு நாடுகளைப் போன்று நமது நாடும் ஜனநாயக ரீதியில் முன்னேறிவிட்டதோ என்று நாம் கருத இடமிருக்கின்றது. 

இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றால் நடக்கப்போவது என்ன? மைத்திரி வெற்றி பெற்றால் நடக்கப்போவது என்ன? என்பதனை ஒரு முறை பார்ப்போம்.

முதலில் ராஜபக்ஷ வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்று பார்ப்போம். நடு நிலையாக நோக்குகின்ற போது ஜனாதிபதியின் 2015 வரவு செலவுத் திட்டம் கவர்ச்சிகரமான அம்சங்கள் அடங்கிய யோசனைகள். அதில் கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு நெருக்கடிகள் நிறையவே இருக்கும். எனவே ராஜபக்ஷ வெற்றி பெற்று விட்டால் உடனடியாக பொதுத் தேர்தல் அறிவிப்பு வரும்.

பொதுத் தேர்தலை நடத்தி அரசு தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முனையும். அப்போது பிரச்சினைகளின்றி அடுத்தப் பதவிக் காலத்தை  முன்னெடுத்துச் செல்வதில் ஆளும் தரப்புக்கு ஒரு பாதுகாப்பு நிலை கிடைக்கும். தற்போது நாட்டில் இருக்கின்ற அரசியல் கலாசாரத்தின் படியும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்ற பலவீனங்கள் காரணமாக ராஜபக்ஷ வெற்றி பெற்றதன் பின் நடக்கின்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற உறுப்பினர்களில் கணிசமானவர்கள் மூன்றாவது தடைவையும் பதவிக்கு வருகின்ற ராஜபக்ஷ அரசில் பட்டம் பதவிகளுக்காக நிச்சயம் விலைபோவார்கள். எனவே, மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ராஜபக்ஷ அடுத்த அரசாங்கத்திலும் பெற்றுக் கொள்ள இடமிருக்கின்றது.வழக்கம் போல் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

அடுத்து தற்போது தனது கட்சிக்குள் இருக்கின்ற சுதந்திரக்கட்சிக்காரர்கள் நிறையப் பேர் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதனை ராஜபக்ஷாக்கள் தற்போது நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள். எனவே, வருகின்ற அரசில் சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களை ராஜபக்ஷாக்கள் கௌரவப் படுத்தும் வகையில் தமது அமைச்சரவையை நியமனம் செய்ய வேண்டி இருக்கும். சிரேஷ்ட அமைச்சர்களுக்கு நல்ல  அமைச்சுக்கள் கொடுக்கப்படலாம்.

தனது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை  ராஜபக்ஷ  தொடந்து முன்னெடுத்தாலும் மூன்றாம் தவணை இறுதிக்கட்டத்தில் அந்த அதிகாரத்தை நீக்க அவர் முனைய அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அடுத்த அரசாங்கத்தில் தனது குடும்ப ஆதிக்கத்தையும் ராஜபக்ஷ  சற்றுத் தளர்த்த வேண்டி வரும். ஊழல் முறைகேடுகள் அபிவிருத்திப் பணிகளில் கமிஷன் பெறுவது போன்ற விடயங்களிலும் ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.

தனது இமேஜுக்கு இந்த வேகத்தில் நெருக்கடி வரும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ  ஒரு போதும் எதிர்பார்த்திருக்க மாட்டார். எனவே மக்கள் எழுச்சியை புரிந்து கொண்டு ராஜபக்ஷ தனது மூன்றாவது பதவிக் காலத்தை முன்னெடுப்பார் என்று எதிர்பார்க்க முடியும்.

தனது மூன்றாவது பதவிக்காலத்தில் ராஜபக்ஷ நிறையவே அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டி வரும் என்பது எமது கருத்து. 2015 ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்ஹ விடயத்தில் ராஜபக்ஷவுக்குநிறையவே மனக்கசப்புகக்ள்   இருந்தாலும் அவரைப் பழிவாங்குகின்ற ராஜதந்திரத்தில் ராஜபக்ஷ இறங்க மாட்டார்என்று எதிர்பார்க்க முடியும்.

எப்படியும் மகிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது பதவிக் காலம் பொதுமக்கள் மீது நல்லபிப்பிராயத்தைப் பெற்றுக் கொள்கின்ற ஒன்றாக அமையாத இடத்தில் அது நெருக்கடியான காலப்பகுதியாக அமையவே அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே, தனது பரம்பரைக்கு எதிர்காலத்தில்  அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டிய தேவை இருக்குமாக இருந்தால் அவர் தனது மூன்றாவது பதவிக் காலத்தை மக்கள் நல்லாட்சிக்கான திட்டங்களை நிறையவே முன்னெடுக்க வேண்டி இருக்கும்.

பொது வேட்பாளர் மைத்திரி வெற்றி பெற்றால் நடக்கப்போவது என்ன என்பதனை இப்போது ஒரு முறை பார்ப்போம். ஒன்றுக்கொன்று முரணான 40இற்கும் மேற்பட்ட கட்சிகள் குழுக்கள் மைத்திரி அணியில் இருக்கின்றன. அப்படி பல்வேறு கருத்துக்களையுடைய கட்சிகள், குழுக்கள் இருந்தாலும் ஒரு பொது வேலைத் திட்டத்துடன்தான் நாம் இதில் இணைந்திருக்கின்றோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

அவர்கள் குறிப்பிடுகின்ற படி 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறையை ஒழித்தல். தொகுதிவாரியான தேர்தல் முறையை அமுல்படுத்தல். நடுநிலையான ஆணைக் குழுக்களை நியமனம் செய்தல் போன்றவை இவர்களுடைய முக்கிய திட்டங்களாக சொல்லப்பட்டிருக்கின்றன. எனவே, மைத்திரி வெற்றி பெற்றால் இந்த விடயங்களை அவர் தட்டிக் கழிக்க முடியாது. எனவே, சொல்கின்ற விடயங்களை அவர்கள் நிச்சயம் அமுல் படுத்த வேண்டி இருக்கும்.

தற்போது இவர்கள் கூறுகின்ற எதையும் செய்ய முடியாது. நிறைவேற்று அதிகாரம்முள்ள ஜனாதிபதியை மைத்திரி வெற்றி பெற்றாலும் நீக்க முடியாது. அதற்குப் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று தற்போது ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் கூறுகின்றார்கள்.

நாட்டிலுள்ள அரசியல் நாகரிகத்தின் படி மைத்திரி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் வெற்று சிகரட் பக்கட்டுக்களை அடுக்கி ஒன்றைத் தட்டிவிட்டால் அனைத்தும் வீழ்வது போல் ஆளும் தரப்பிலுள்ள அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் மைத்திரி பக்கம் வந்து சேர்வார்கள் என்பது உறுதி. 

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை  இதே பாராளுமன்றத்தில் பெற்றுக் கொள்வது என்பது மைத்திரிக்குப் பெரிய காரியமாக இருக்க மாட்டாது. எனவே, இதே பாராளுமன்றத்தை வைத்துக் கொண்டும் இந்த மாற்றங்களை அவருக்குச் செய்ய முடியுமாக இருக்கும். அத்துடன் நாம் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பொது அரசாங்கம் ஒன்றையே இரண்டு வருடங்களுக்கு அமைக்க இருக்கின்றோம். எனவே, சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என்ற பேதங்கள் ஏற்பட இடமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் போகுமிடமெல்லாம் கூறி வருகின்றார். ராஜபக்ஷ கூட வேண்டுமானால் எங்களுடன் இணைந்து கொள்ள முடியும் என்பது அவர் கருத்து.

பொது வேட்பாளர் மைத்திரிக்காக  களமிறங்கி இருக்கின்றவர்கள் மேடைகளில் பேசுகின்ற வார்த்தைகளில் ஆங்காங்கே முரண்பாடுகள் இருந்து வருகின்றன என்பதனையும் அவதானிக்க முடிகின்றது. உதாரணத்துக்கு மைத்திரி வெற்றி பெற்றால் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு என்று ரணில் கூறுகின்றார். ஆனால், மைத்திரி 10,000 அதிகரிப்பில் ஜனவரி முதல் 5000 முதல் கட்டமாக வழங்கப்படும் என்று  கூறுகின்றார். எனவே 2015இற்கு ராஜபக்ஷ போட்ட வரவு செலவுத்திட்டம் மைத்திரி ஆட்சியில் கிழித்து எறியப்படும் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இதே போன்றுதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொன்சேக்கா அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்புப் பற்றி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லி வாக்குக் கேட்டார். ஆனால் அவருக்கு வாக்குக்கிடைக்க வில்லை.

தனது அரசில் 30இற்கும் மேற்படாத அமைச்சர்கள் தான் இருப்பார்கள் என்று மைத்திரி தரப்பில் கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தில் உள்ள எல்லோரும் அமைச்சர்கள் என்று இருக்கின்ற நமது நாட்டு அரசியலில் மைத்திரி இதனை 30இற்கு மட்டுப்படுத்துவது என்பதும் ஒரு சவாலான விடயம் என்று தான் எமக்குத் தோன்றுகின்றது.

எப்படியும் மைத்திரி ஜனாதிபதியானால் நடைமுறை அரசியலில் நிறையவே மாற்றங்கள் நடக்க இடமிருக்கின்றது.

இதற்கிடையில் சில பௌத்த குருமார் மைத்திரி வெற்றிபெற்றாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு ராஜபக்ஷ தான் ஜனாதிபதியாக இருப்பார். அதற்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கின்றது என்று முட்டாள் தனமான ஒரு வாதத்தை ஊடகங்கள் முன் வந்து குறிப்பிடுகின்றார்கள். இது ஒரு அரசியல் வேடிக்கையான நடவடிக்கையாகவே பார்க்க வேண்டி இருக்கின்றது.

இதற்கிடையில் பொது வேட்பாளரின் தேர்தல் பரப்புரைகளுக்கு தொல்லை கொடுக்கின்ற நடவடிக்கைகளுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து எதிர்க்கட்சி அரசியல் செயல்பாட்டாளர்கள் சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் திணைக்களத்தை சுற்றி வளைத்து சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்தி இருக்கின்றார்கள். 

No comments

Powered by Blogger.