Header Ads



மகிந்தவை, மைத்திரியால் மட்டுமே காப்பாற்ற முடியும் - ரஜீவ விஜேசிங்க எம்.பி.

சர்வதேச அழுத்தங்களிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாதுகாக்கப்பட வேண்டுமாயின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வர வேண்டும். மைத்திரிபால சிறிசேனவால் மட்டுமே மகிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற முடியுமென பாராளுமன்ற உறுப்பினரும் லிபரல் கட்சித் தலைவருமான ரஜீவ விஜயசிங்க தெரிவித்தார்.

கொழும்பு  7 இல் அமைந்துள்ள தொழில் வல்லுனர்கள் அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்த ரஜீவ விஜேசிங்க மேலும் கூறுகையில்;

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான பிரச்சினை மேலெழுந்த போது கடந்த அக்டோபர் மாதம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதினேன். அக்கடிதத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தேர்தலை நடத்த வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தேன்.

கல்வி, உயர்கல்வி, தேர்தல் முறை, பிரதேச சபை முறைமை போன்றவற்றில் திருத்தங்களைக் கொண்டு வருவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம்  தீர்மானித்ததால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு நாம் தீர்மானித்தோம். எமது  கோரிக்கைகளை எமது எதிரணி ஏற்றுக் கொண்டதுடன், பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன வருவாரென நாம் அறிந்து கொண்ட பின்னரே நாம் எமது ஆதரவை பொது எதிரணிக்கு வழங்கினோம்.

கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதை எம்மால் மறுக்க முடியாது. ஆனால் மக்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் வகையில் மேற்படி அபிவிருத்திப் பணிகள் அமையவில்லை என்பது உண்மையான விடயமாகும்.

இதேவேளை பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நாம் வெளிநாட்டு சக்திகளின் கீழ் செயற்படுவதாக அரசாங்கம் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றது.ஆனால் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியும் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கெதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இலங்கை அரசாங்கம் தோல்விகண்டு வருகிறது. இதற்கு பிரதான காரணம் இந்த அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை மிக மோசமாக அமைந்திருப்பது தான். தவறான வெளியுறவுக் கொள்கையால் இலங்கைக்கு அவப்பெயர் மட்டுமே எஞ்சியுள்ளது.

குறிப்பாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தவறான வெளியுறவு அணுகுமுறைகள் சர்வதேசத்தின் மத்தியின் இலங்கைக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளன. சிலவேளைகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எண்ணி நான் கவலையடைந்துள்ளேன்.

அவரைச் சுற்றியுள்ள சில திருடர்களின் முட்டாள்தனமான செயற்பாடுகளால் ஜனாதிபதி பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளார். யுத்தக் குற்றங்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்த போது அதற்கான பதில்களை ஆரம்பத்திலேயே உரிய முறையில் வழங்கியிருக்கலாம். ஆனால் அரசாங்கம் தவறிவிட்டது. குறிப்பாக இலங்கையில்பணிபுரிந்த ஐ.நா செயலக அதிகாரிகளின் கருத்துகளைக் கொண்டு அதற்கு உரிய பதில்களை அளித்திருக்கலாம்.

யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்த வேண்டுமென ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதனை ஐ.நா. சபை கொண்டு வர வேண்டும் என்ற அவசியமில்லை.

ஜனாதிபதி கூறும் வகையில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தப்பிக்க வேண்டுமாயின் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வர வேண்டும். மைத்திரியால் மட்டுமே தற்போது மகிந்தவை காப்பாற்ற முடியும் என்றார்.

No comments

Powered by Blogger.