Header Ads



ரவூப் ஹக்கீமுக்கு 'பையத்' செய்துவிட்டு, அவரை ஏமாற்றலாமா..?

(நவாஸ் சௌபி)

ஜனாதிபதித் தேர்தலுக்கான முஸ்லிம் காங்கிரஸின் முடிவானது தபால் மூல வாக்களிப்பு தினங்களான 23, 24 ஆம் திகதிக்கு முன்னர் வெளியாகும் என மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரச ஊழியர்களை தங்களின் மனச்சாட்சிப்படி வாக்களிக்குமாறு அறிவிப்புவிடுத்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்ட அறிவிப்பை கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்கள் மனச்சாட்சிப்படி என்பதை மைத்திரிக்கு வாக்களிக்கும்படியாக எடுத்துக் கொள்ளவும் எனவும் வியாக்கியானம் கூறி இருந்தார்.

இதுபோக, ஹக்கீம் மனச்சாட்சிப்படி வாக்களிக்க கூறியதன் பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹக்கீமின் வீட்டில் காரசாரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்ததாகவும் கட்சிக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாற்று அணியாக மைத்திரியின் பக்கம் செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதன்படி செயலாளர் நாயகம் ஹஸன்அலி அவர்கள் ஹக்கீமின் மனச்சாட்சி என்பதற்கு மைத்ரி என்று அர்த்தம் கற்பித்ததும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹக்கீமிடம் அவரது அறிவிப்புக்கு மாற்றமாக மைத்ரியை ஆதரிக்கும் முடிவை எடுக்க வற்புறுத்தியதுமான இரண்டு நிலைப்பாட்டினையும் பார்க்கின்ற போது இம்மாதம் 11 ஆம் திகதி வியாழக்கிழமை தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் இவர்கள் செய்துகொண்ட 'பையத்' என்பதற்கு என்ன அர்த்தம் இருக்கிறது என்ற கேள்வியை இவர்களது கொச்சை அரசியலைப் பார்த்துக் கேட்க வேண்டி இருக்கிறது.

கிழக்கு மாகண உலமாக்களின் முன்னிலையில் முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு மாகாணசபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனையயோர்கள் அனைவரும் தலைவரிடம் செய்துகொண்ட பையத் எதற்காக? தலைமைத்துவமும் கட்சியும் மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதாக என்ற உறுதி மொழியை அந்த பையத் கொண்டிருக்கவில்லையா? 

பையத் செய்த பிறகு தலைவரின் முடிவுக்கு கட்டுப்படாமல் தலைவரை நெருக்கிப் பிடிக்கும் உறுதியான நிலைப்பாடில்லாத இவர்கள் உலமாக்கள், பையத் என்று எதற்காக மார்க்க சட்டதிட்டங்களை இத்தகைய உப்பில்லாத அரசியலுக்காக உள்இழுக்க வேண்டும். சமூகத்தையும் ஏமாற்றி இஸ்லாத்தையும் ஏமாற்றி தொடரும் இந்த அரசியலை எப்படி சரி காண்பது என்பதுதான் மக்கள் சிந்திக்க வேண்டிய பகுதி.

தலைவரின் இறுதி முடிவு எப்படி அமையும் என்று தெரியாத நிலையில் பையத் செய்துவிட்டு அந்த முடிவு சரியா? பிழையா? என்று எப்படி வாதாட்டம் செய்ய முடியும். மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்ற அறிவிப்பு இத் தேர்தல் குறித்து தலைவர் எடுத்த ஒரு முடிவாகவே பார்க்கப்பட வேண்டும். இதுவரைகால நிதானத்தின் பின்பு கட்சிக்குள்ளும் வெளியிலும் காணப்பட்ட அழுத்தங்களைக் கடந்து தலைமை அந்த முடிவை அறிவிக்கிறதென்றால் அதனை ஏற்று அடுத்த நடவடிக்கையைப் பற்றி தலைமைக்கு பக்கபலமாக இருக்காமல் பையத் செய்த நீங்களே துள்ளிக் குதித்தால் இது பையத்தை மையத்தாக்கும் செயற்பாடில்லையா? 

இந்த சந்தர்ப்பத்தில் மைத்திரியை ஆதரிக்க ஆவேசப்படும் இவர்கள் மக்களின் எதிர்காலப் பாதுகாப்புக் குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் தாங்கள் பாராளுமன்றம் செல்வதற்கு வழி தேடுகிறார்கள் என்றுதான் பார்க்கவேண்டி இருக்கிறது. 

ஏனெனில் இதுவரைகாலமும் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த அரசாங்கத்தில் நடைபெற்ற அத்தனை அழிவுகளையும் அவதானித்தவர்கள் இன்று ஹக்கீமின் வீட்டை ஒரு முடிவுக்காக முற்றுகை இடுவதுபோல் இதற்கு முன்பிருந்த எத்தனையோ சந்தர்ப்பங்களில் ஹக்கீமை அரசைவிட்டு விலகும்படி காரசாரமாகக் கேட்டிருக்கலாம்தானே? அப்படி கேட்டும் அதனைக் கருத்தில் எடுக்காமல் ஹக்கீம் இதுவரை காலமும் இந்த அரசாங்கத்தடன் இருந்து வந்தார் என்றும் இதற்கு மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதில் கூறலாம். 

அப்படி ஹக்கீம் தங்களுக்குப் பிடிக்காத அரசுடன் இருந்துவந்தால் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதனை மக்கள் மயப்படுத்தி கட்சிக்குள் ஒரு எதிரணி இப்போது உருவாக நினைப்பதுபோல் அப்போது உருவாகி அதை நிறைவேற்றி இருக்கலாமே! ஆனால் இவற்றையெல்லாம் செய்யாமல் மஹிந்தவின் ஆட்சியில் நடந்த கொடுமைகளைக் கடந்தும் அபிவிருத்தி நிதிகளை மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுவரவில்லையா? செயலாளர் நாயகம் ஹஸன் அலி அவர்களைத்தவிர மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த அரசின் அபிவிருத்தி நிதிகளைப் பெற்று மக்கள் சேவை செய்ததாகவே கதைகள் உள்ளன. அப்படிப் பெறாதவர்கள் இன்னும் இருந்தால் அவர்களும் இதனை மறுக்கலாம். 

ஆனாலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக கடந்த 21 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை வந்த மஹிந்த தனது பேச்சில் பெரிதாக எதையுமே பேசாமல் கல்முனைத் தொகுதிக்கு வழங்கிய தனது அபிவிருத்தி நிதியை சரியாக 480 மில்லியன் என குறிப்பிட்டுப் பேசி அதனை மக்களுக்கு நினைவுபடுத்திச் சென்றிருக்கிறார். இதுபோன்றே மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள ஏனைய தொகுதிகளையும் பார்க்கலாம். இவ்வாறு மஹிந்த அரசுடன் இதுவரை இணைந்திருந்த மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது காட்டும் சமூகம் விரும்புகின்ற முடிவு என்பது சமூகத்தைக் காப்பாற்ற அல்ல தங்களைக் காப்பாற்ற என்றுதானே நோக்க வேண்டும்.

அழுத்கம சம்பவத்தின் பின்னால் அரசைவிட்டு வெளியாக வேண்டும் அமைச்சுப் பதவியை விடவேண்டும் என்ற அழுத்தங்கள் மேல் எழுந்தபோது.. 'எமது மக்களின் பாதுகாப்புக்கு யாராவது உத்தரவாதம் வழங்கினால் பதவி விலகத் தயார்' என 2014 ஜூன் 18 ஆம் திகதி புதன் கிழமை கூடிய விஷேட பத்திரிகையாளர் மாநாட்டில் ஹக்கீம் மிகத் தெளிவாக ஒரு கருத்தைச் சொன்னார். 

அந்த உத்தரவாதம்தான் இன்றும் ஹக்கீமை நிதானப்படுத்தி வைத்திருக்கிறது என்று நாம் நம்புகின்றோம். இதற்கு முன்னரான ஹக்கீமின் அரசியல் முடிவுகளுக்குப் பின்னால் பல விமர்சனங்கள் இருந்தாலும் அதற்கு என்போன்றோர் பல எழுத்துக்களை எழுதினாலும் இத்தேர்தலில் அவரது நிதானம் சமூகத்தை நோக்கிய தூரநோக்கோடு இருப்பதை நாங்கள் மறுக்க முடியாது.

விமர்சனம் என்பது குறைகாண்பது மட்டுமல்ல அது நிறைகளையும் மக்கள் அரங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் இந்த சந்தர்ப்பத்தில் ஹக்கீம் இருக்கும் நிதானம் எதிர்கால அரசியலில் எதையும் சாதிக்க கூடியது என்பதில் ஐயமில்லை. மக்கள் தங்களுக்கு எதிராக இருக்கின்றார்கள் என்று தெரிந்தும் தான் தனது நிதானத்தில் காலத்தைக் கடத்தியது ஹக்கீமின் மிகுந்த அரசியல் துணிச்சலாகும். மக்களுக்கு இப்போது பிழையாகத் தெரிகின்ற ஹக்கீமின் நிதானம் 9 ஆம் திகதி சரியான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படலாம். 

இதற்காகவே ஹக்கீம் இப்படியே எந்தப் பக்கமும் இல்லாமல் இருந்து எதிர்வருகின்ற 7 ஆம் திகதியும் உங்களின் மனச்சாட்சிப்படி வாக்கயுங்கள் என முஸ்லிம் மக்களை நோக்கி அறிவிப்பதே சரி எனப் பார்க்கின்றோம். 

அத்துடன் அரச தரப்புடன் பேச்சு என்று இருக்கின்ற காலத்திற்குள் கரையோர மாவட்டத்தை எப்படியோ பெற முயற்சிப்பதாக ஹக்கீம் மேலும் மேலும் இதனைப் பேசிப் பேசி மஹிந்த அரசை முஸ்லிம் சமூகத்தினுள் இன்னும் விரோதியாக காட்ட முயற்சிப்பதாகவே தெரிகிறது. இந்த தருணத்தில் இலங்கையின் ஆட்சியில் யார் இருந்தாலும் கரையோர மாவட்டம் உடனடித் தீர்வாக தேர்தலுக்கு முன் கிடைக்க வழி சமைக்க மாட்டார்கள். சந்திரிகாவானாலும் ரணிலானாலும் மைத்திரியானாலும் இதைச் செய்யமாட்டார்கள் எனவே யாரும் செய்ய முடியாத ஒன்றை மஹிந்தவிடம் கேட்டு மக்களையும் ஏமாற்றி மஹிந்தவையும் ஆத்திரப்படுத்தி இருக்கின்ற நிலைமைகளையும் இன்னும் நெருக்கடியாக்காது கரையோரக் கதையை இனி உள்ள காலத்திற்கு விட்டுவிட்டு, அடுத்த ஆட்சியில் அதனை இப்போது விடாப்பிடியாக இருப்பதுபோல் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிக்கலாம்.

இன்னும் அரசுடன் பேசி ஏதாவது பெற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென்றால் குறைந்தபட்சம் கல்முனை பிரதேச செயலகத்திலுள்ள பிரதேச செயலாளரை மாற்றி அந்த இடத்திற்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க முயற்சிக்கலாம் இப்படி நிறைவேற்றக்கூடிய சின்ன சின்ன விடயங்கள் நிறையவே இருக்கின்றன அவற்றை செய்து முடிப்பதும் போதுமானது.

5 comments:

  1. No body has now asked you to vote for MR, Be strong in your decision to vote for MY3

    ReplyDelete
  2. First of all, we need to understand the validity of "Baiath". This is applicable only for real Islamic governance.- Kalifaath. Not for these garbage politics which exists right now.

    Unfortunately, our Muslim leaders are so selfish that people do not trust on them. Our Muslim community need to be united rather than being devided into pieces. Athaaullah, Rauf Hakeem. Azaath Sally, Hisbullah, Bazeer Sheigh Dawood , Abdul Cader, Fauzy,Muzammil and many many more. Where are we heading?? Is there any suchthing called Kaleefath here for Baiath??

    Oneday, we are all going to die and are accountable for what we do in this world.

    ReplyDelete
  3. True brother. I also wonder even our great great shabas who never done anything against the will of Allah have done some act which is not acceptable in common due to the wrong decision of Ameer (leader ) .

    Leader has already told to act according to our mind. then why he is behind discussion with government. Does he mean if he get coastal district then will he ask us to vote MR. Why this baiath ? is it only to politicians or indirectly to all.

    Can some body quote any example from prophets or kulafaurraashdeens life to follow this baiath.

    Donot play with Islam. we are accountable to each and every act.

    Why this essay refer the future protection of muslim can only come from MR. Will this not be a shirk. What muslim MPP or general public is against MR is only considering the past. ALLAH is MAALIKUL MULK. even a man named as malikkul amlaak is going to hell because of this name . No body can challenge Allahs attribute.

    So my brothers be strong in your decision. Whatever will happen is only depend on our Amaal. Read the Jammiathul Ulamas guidance and Make dua

    ReplyDelete
  4. Every thing is ok.But vote for my3

    ReplyDelete
  5. தட் போது முஸ்லிம் காங்கிரசில் உள்ள ( எம்பி கள் மாகான சபை உறுப்பினர்கள்.. etc..) அரசியல் வாதிகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ( எல்லாம் பேய்கள் ) ஆனால் கெட்டவையில் குறைந்த கெட்டவையே நாம் தெரிவு செய்ய வேண்டும்.

    பையத் பற்றிய கேள்வி மிக மிக நியாயமான கேள்விதான். ஆனால் முஸ்லிம் மக்களை பயம் காட்டுவதை ( பாதுகாப்பு சம்பந்தமாக ) தவிர்த்து, அவர்களை துனிவுள்ளவர்கலாகவும் தமது பாதுகாப்பு என்பது எந்த அரசாங்கம் வந்தாலும் உறுதிபடுத்தப்பட வேண்டும், அது தமது உரிமை, அரசாங்கத்தின் கடமை என்பது ஊட்டப் பட வேண்டும்.

    Nabees Ismalbbai, very nice comment...ha..ha.. please try to do..ie vote for MY3

    ReplyDelete

Powered by Blogger.