Header Ads



வாக்களிப்பை புறக்கணிப்பது, தற்கொலைக்கு ஒப்பானது..!

(வ.திருநாவுக்கரசு)

1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இடம்பெற்ற  பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை விடவும் அதிகளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே ஜனவரி 8, 2015 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அமையப்போகின்றது. 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிலவுவதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல், மோசமான மக்கள் விரோத சுகாதாரக் கொள்கைகள் மற்றும் எதேச்சாதிகாரம் போன்ற இழுக்குகள் தாண்டவமாடுவதை தடுத்து நிறுத்த முடியாத விரக்தி நிலையில், ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால  சிறிசேனவே பிரதான எதிரணி வேட்பாளராகப் போட்டியிடுவது இலங்கை அரசியல் வரலாற்றில் அதி முக்கியத்துவமானதொரு அத்தியாயமாகும்.

அரசாங்கத்தின் பொட்டுக் கேடுகள் அம்பலப்படுத்தப்பட்டதன் காரணமாக ஆத்திரமடைந்துள்ள நிலையில், முதல்நாள் ஒன்றாக முட்டை அப்பம் சாப்பிட்டு விட்டு, மறுநாள் மைத்திரிபால முதுகில் குத்திவிட்டார் என்ற முறுகலும் ஓய்ந்த பாடில்லை.

தேர்தல் விஞ்ஞாபனங்கள்  மூலம் அளிக்கப்படும் வாக்குறுதிகள் எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளன என்பதை சற்று பின்னோக்கிப் பார்ப்போமாயின், விஞ்ஞாபனங்களைப் படித்துப்பார்த்த பின்பு தான் தீர்மானம் மேற்கொள்ள வேண்டுமென்பதற்கில்லை எனலாம். ஒட்டு மொத்தமாக, சம்பந்தப்பட்ட தரப்பினரது  கடந்த கால, சமகால செயற்பாடுகளைக் கருத்திற் கொண்டு மதிப்பீடு செய்து, பல்லின மக்களின் சுபீட்சமான எதிர்காலம், அவர்களது பாதுகாப்பு, இருப்பு போன்ற காரணிகளே சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டியவையாகும்.

இரு பிரதான வேட்பாளர்களுமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் என்றும், தமிழ் மக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குச் சீட்டுகளை செல்லுபடியற்றதாக்கி விட வேண்டும். தமிழரைப் பொறுத்தவரை, இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன ஒன்றுதான் என்று எதிர்மறையான வகையில் சில வட்டாரங்களில் சிந்திக்கப்பட்டு வருவது தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

தமிழ்த் தலைமைகள் தீர்மானம் எடுப்பதில் தாமதம் காட்டி வருகின்றனவாயினும்  மக்கள் ஏறத்தாழ தீர்மானித்து விட்டதாகவே தென்படுகிறது. தமது நில புலங்கள் இடையறாது அழிக்கப்படுவதையும் நடைப்பிணங்கள் வரிசையில் வைத்திருப்பதையும் அவர்கள் திட்டவட்டமாக நிராகரிதாக வேண்டும்.

பொதுவாகப் பார்க்குமிடத்து, ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது ஒரு புறத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள் சம்மேளனம்  போன்ற  தரப்பினர் விரக்தியும் விசனமும் அடைந்திருப்பதைக் காணலாம். தென்னிலங்கையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளரின் போராட்டங்கள, சிலாபத்தில் மீனவர் நடத்திய போராட்டங்கள், வெலிவேரியா ரத்துபஸ்வல கிராமத்தில் சுத்தமான குடிநீருக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து உயிர்கள் பறிக்கப்பட்டமை சில அண்மைக்கால உதாரணங்களாகும். 

மறுபுறத்தில், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்தல் என்ற போர்வையில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதோடு,  உயர் பாதுகாப்பு வலயங்களிலிருந்து 25 வருடங்களுக்கு மேலாக வெளியேற்றப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களில் குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையினர் இதுவரை மீள் குடியேற்றப்படவில்லை.

அது மட்டுமல்லாம, வடக்கிலும் கிழக்கிலும் நில அபகரிப்பும் அரச படையினரின் போர்வையில் சிங்கள குடியேற்றங்களை விஸ்தரித்து தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் திட்டம் கனகச்சிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழ் மக்கள் மட்டுமல்லாமல் முஸ்லிம் மக்களும் தான் பல்வேறு அடக்குமுறைகளுக்கும் நில அபகரிப்புகளுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

பல பள்ளி வாசல்கள் சிதைக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் பேருவளை, அளுத்கம, தர்கா நகர் ஆகிய பிரதேசங்களில் பொதுபலசேனா ஏவிவிட்ட முஸ்லிம் மக்கள் விரோத கலவரங்கள் ஏற்படுத்திய காயங்கள் ஆறியும் ஆறாமலும் உள்ள நிலையில், இன்னொரு கலவரத்துக்கு பொதுபலசேனா தூபமிடுவதாகத் தோன்றுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கக் கூடாது என்று பொதுபலசேனா மிரட்டல் விடுத்துள்ளது.

அது ஒருசாதாரண மிரட்டலன்றி, 1915 இல் சிங்கள  முஸ்லிம் இனக்கலவரம் வெடித்து, முஸ்லிம் மக்கள் பலத்த தாக்குதலுக்கு  ஆளாக்கப்பட்டது போன்றதொரு நிலைமைக்கு ஆளாக்கப்படுவர் என்ற தொனியிலேயே பொதுபலசேனா பேசியுள்ளது. உண்மையில, பொதுபலசேனா தரப்பினர் கையில் எடுத்துவரும் காடைத்தனம் பௌத்தத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பானதாகும். அவர்கள் வரம்பு மீறிச் செயற்படுவது உலகறிந்த விடயமாகும்.

அந்த வகையில் மியன்மாரிலுள்ள 969 என்று அழைக்கப்படும் அதிதீவிர பௌத்த அமைப்பினரோடு கைகோர்த்து செயற்பட்டு வருவதைக் காண்கிறோம். அண்மையில் 969 அமைப்பின் தலைவர் வண. விராது தேரர் இலங்கை வந்து பொதுபலசேனாவோடு இணைந்து மாநாடு மற்றும் கலந்துரையாடல்கள் நடத்திச் சென்றதைக் கண்டோம்.

இந்த நிலையில் பொதுபலசேனா அமைப்பானது ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்தாலோ,  ஆதரவளித்தாலோ, தான் கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகிக்கப் போவதில்லை என பிரதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியதாக அறியக்கிடக்கிறது. பொதுபலசேனா ஆளும் கூட்டணியில் இரண்டறக்கலந்து நிற்பதும் அதற்கு அதிகபட்ச அரச அனுசரணை உண்டு என்பதும் நாடறிந்த சங்கதி என்ற வகையில்,  ஏன் பைசர் முஸ்தபா அதனை கண்டு கொள்ளவில்லை என்பது புரியாத புதிராய் உள்ளது. பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா என்பார்கள்.

எனவே ஆட்சி அதிகாரம் எதிரணி பக்கம் சென்று விட்டால் நாட்டில் தற்போது நிலவுவதாக அவர் கூறும் ஸ்திரத்தன்மை அற்றுப் போய்விடும் என்று பைசர் ஆதங்கப்படுவது அர்த்தமற்றதாகும். 

மறுபுறத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். சுகைர் நிஜம் எது என்பதை நன்குணர்ந்து, தமது நிலைப்பாட்டினை வெட்டொன்று துண்டிரண்டாக கூறிவைத்துள்ளதைக் காணலாம்.

அதாவது, ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் தெரிவு செய்யப்பட்டால், முஸ்லிம்களின் தலைவிதி இருள் சூழ்ந்ததாகிவிடும் என்றும், மைத்திரிபால சிறிசேன வெற்றியீட்டுவது தான் முஸ்லிம்களின் இருப்பிற்கே அவசியமாகிறது என்றும் கூறியுள்ளார். ஏனென்றால், பொதுபல சேனாவுடனேயே மகிந்த ராஜபக்ஷ அணி  களமிறங்கியுள்ளது என்பதையும் அவர் வெட்ட வெளிச்சமாக எடுத்துக் கூறியுள்ளார். 

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம்

2009 மே மாதம், 26 வருட கால யுத்தம் முற்றுப் பெற்று  ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் அனைவரும் உண்மையான சுதந்திரக் காற்றைச்  சுவாசிக்கிறோம். நாளுக்கு நாள் வளர்ந்துவரும் சமாதானத்தை பூரணமாக அனுபவிக்கிறோம என்று மகிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் விளம்பரமொன்றில் குறிப்பிட்டுள்ளதைக் காண்கிறோம்.

நாட்டில் அனைத்து இன மத மக்களும் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார ரீதியாக உண்மையான சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நிலை நிலவிக் கொண்டிருக்குமாயின், தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு அவர் செய்துவரும் பகீரதப் பிரயத்தனமானது பெரிதும் அவசியப்பட்டிருக்காது எனலாம்.

சுதந்திரம் எனக் கூறும் போது மக்கள் பயமோ, பீதியோ இன்றி சமாதானத்துடனும் சுபீட்சத்துடனும் வாழ விடப்பட வேண்டியது முதன்மை பெற வேண்டும்.  அரசாங்கம் ஒன்று மக்களுக்குப் பயப்படுமாயின் அங்கே ஜனநாயகம் உண்டு . மாறாக, அரசாங்கம் ஒன்றிற்கு மக்கள் பயப்பட வேண்டுமாயின் அங்கே நிச்சயமாக நிலவக் கூடியது கொடுங்கோல் ஆகும் என்று அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி தோமஸ் ஜெஃபேசன் கூறிவைத்தார். இதுவே இலங்கையின் இன்றைய நிலைமை என்பது நிதர்சனம். 

மேலும், ஜனநாயகம் என்பதும், கோட்பாடு ரீதியாக இன்றைய தேர்தல் பிரசார மேடைகளில் உரத்து ஒலிக்கப்பட்டு வருவதைக் காண்கின்றோம்.  வெறுமனே ஜனநாயகம் என்று கூறும் போது, அது உருப்படியான உள்ளீடினைக்  கொண்டிருப்பது அல்ல.அது ஆட்சியாளர்கள் தம்மகத்தே கொண்டிருக்கும் கொள்கைகளைப் பொறுத்ததாகும் என்று பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல வரலாற்றாளர் நோர்மன் டேவிஸ் கூறியுள்ளார்.

"சகிப்புத்தன்மையுடையவர்களின் கைகளில் அது இடம் பிடித்திருக்குமாயின், அது ஒரு தாராளமய, சகிப்புத் தன்மையுடைய அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு வழிசமைக்கும். மாறாக,  அட்டூழிய சிந்தனை கொண்டவர்களின் கைகளில் அது அகப்பட்டுக் கொள்ளுமாயின், அட்டூழியங்கள் தழைத்தோங்கும்' என்று அர்த்தப்படக் கூடியதாக டேவிஸ் மேலும் கூறியுள்ளார்.

ஆக,  ஒட்டு மொத்தமான நாட்டு நலனின் முக்கியத்துவத்தை கருத்திற் கொள்ளாது, சர்வதேச ரீதியில் அன்னியப்படுத்தப்பட்டு வருவதை உண்மையான நாட்டுப் பற்றுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆட்சியாளர், நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு சித்தமாயில்லாது, சர்வதேச சூழ்ச்சிகள் புகுந்து விளையாடுகின்றன என்று மேடைகள் தோறும் எவ்வளவு தான் விளாசினாலும் சர்வதேச நாணய நிதியத்தின் பிடியில் தான் நாடு சிக்க வைக்கப்பட்டிருக்கிறது.  

அண்மையில் இலங்கை விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் மலேசியப் பிரதமர் மஹத்கர் முகமட் தனது ஆட்சிக் காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிராகரித்து, நாட்டை மீட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது போலவே, தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் ரக்சின் சினவாத்திராவும் செயற்பட்டார்.

பின்பு அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட போது பாராளுமன்றத்தில் உரையாற்றி வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் இலங்கை ஆட்சியாளர் மேற்குறித்த முன்னுதாரணங்களை கண்டு கொள்வதில்லை என்பது மட்டுமல்லாமல், சீனாவின் கடன்பொறிக்குள்ளேயும் நாட்டை தள்ளியுள்ளனர். எனவே இந்த நாட்டை வீழ்ச்சிப் பாதையிலிருந்து மீட்டு உண்மையான நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் மலரச் செய்யக் கூடியதாக எதிர்கால நகர்வுகள் அமைய வேண்டும். 

1 comment:

  1. brothrs kalwarkalukku vote podu wady vida tat koli saiwadu mallanadu

    ReplyDelete

Powered by Blogger.