113 வயதில் பேஸ்புக்கில் இணைந்த பாட்டி, 114 வயதில் மரணம்
அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்த பாட்டி அன்னா மிகவும் வயதான ஃபேஸ்புக் பயனாளியாக கவனத்தை ஈர்த்தவர். மேலும் ஃபேஸ்புக்கில் இணைவதற்காக பாட்டி தனது வயதை குறைத்து சொல்லியதற்காக பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஃபேஸ்புக்கின் வயது கொள்கைக்கு சவால் விட்டவராகவும் வர்ணிக்கப்பட்ட இந்த பாட்டி, கடந்த ஞாயிறு அன்று இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னா ஸ்டோஹர் 1900 ம் ஆண்டு பிறந்தவர். தனது 87 வயது மகனால் ஐபேட் மற்றும் இணைய உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பாட்டி, கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் இணைய விரும்பினார். ஆனால் ஃபேஸ்புக் விதிகளின் படி 1905 ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் மட்டுமே அதில் உறுப்பினராக சேர முடியும். இதனால் பாட்டி தனது வயதை குறைத்து சொல்லி ஃபேஸ்புக்கில் சேர்ந்தார். இந்த செய்தி வெளியாகி இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதற்கு முன்னதாக ஃபேஸ்புக்கின் வயது கொள்கை தொடர்பாக அவரது மகன் இமெயில் மூலம் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் பலனில்லாமல் போனது. இதனால் கடுப்பான பாட்டி, ஃபேஸ்புக்கிறகு கடிதம் அனுப்ப சொல்லி கட்டளையிட்டிருக்கிறார். அந்த கடிதத்தில் ’நான் இன்னமும் இங்கே இருக்கிறேன்” என அவர் குறிப்பட்டிருந்தார்.
பாட்டி 113 வயதில் ஃபேஸ்புக்கில் இணைந்த செய்தி, உலகம் முழுவதும் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதன் பிறகு பாட்டி 114 வது பிறந்த நாளை கொண்டாடிய போது ஃபேஸ்புக் சார்பில் 114 மலர்களுடன் வாழ்த்து அனுப்பி வைக்கப்பட்டது.
புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வயது ஒரு தடையல்ல என உணர்ந்த்திய இந்த ஃபேஸ்புக் பாட்டி அதற்காகவே என்றென்றும் நினைவில் நிற்பார்.

Post a Comment