Header Ads



ஜனாதிபதி மஹிந்தவை நிச்சயமாக தோற்கடிப்போம் - அத்துரலியே ரத்தன தேரர்

நாம் முன்வைத்துள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் நிச்சயம் நாங்கள் அவரை தேர்தலில் தோற்கடிப்போம். இதற்கான சக்திகள் அனைத்தும் இன்று ஒன்றிணைந்துள்ளன. எனவே மக்களின் பலத்துடன் ஜனாதிபதியை தோற்கடிக்க நாம் தயாராகிவிட்டோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத்தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்தார்.

ஒரு இரவில் 10 இலட்சம் மக்களை திரட்ட எம்மால் முடியும். எனவே நீங்கள் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள். நாங்கள் உங்களை வீட்டுக்கு அனுப்புகின்றோம். நாங்கள் அதற்கு தயாராகிவிட்டோம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு முத்தையா மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தூய்மையான நாளை ஒன்றுக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் தொழிற்சங்க அமைப்புக்கள் சமூக அமைப்புக்கள் என்பன கலந்துகொண்டன.

அத்துரலியே ரத்தன தேரர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் நலனுக்காகவே 19 ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைத்துள்ள நாங்கள் அதனை நிறைவேற்றுமாறு கூருகின்றோம். ஆனால் அரசாங்கம் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிடுகின்றோம்.

தோற்கடிப்போம்

அதாவது நாம் முன்வைத்துள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலுக்கு செல்வாராக இருந்தால் அவரை நிச்சயம் நாங்கள் தோற்கடிப்போம்.

10 இலட்சம் மக்களை திரட்ட முடியும்

ஒரு இரவில் 10 இலட்சம் மக்களை திரட்ட எம்மால் முடியும். எனவே நீங்கள் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள். நாங்கள் உங்களை வீட்டுக்கு அனுப்புகின்றோம். நாங்கள் அதற்கு தயாராகிவிட்டோம். மக்களின் பலத்துடன் ஜனாதிபதியை தோற்கடிக்க நாம் தயாராகிவிட்டோம்.

முக்கிய தலைவர்கள் களத்தில்

இந்த மேடையில் ரணில் விக்ரமசிங்க கருஜயசூரிய சஜித் பிரேமதாச ஓமல்பே சோபித்த தேரர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ஒன்றிணைந்துள்ளனர். அந்தவகையில் 19 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றாமல் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமாயின் ஜனாதிபதியை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவோம்.

ஆரம்பமாகிவிட்டது

மக்களின் பலம் எம்மிடம் உள்ளது. ஒரு சில தினங்களில் இன்று ( நேற்று) இந்தளவு எண்ணிக்கை மக்களை ஒன்றுகூட்டியுள்ளோம். இன்று (நேற்று) பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் இது அதற்கான கூட்டம் அல்ல. பொது வேட்பாளரை உருவாக்குவதற்கான ஆரம்பத்தை இங்கு ஏற்படுத்தியுள்ளோம். நாங்கள் ஆரம்பித்துவிட்டோம்.

யுத்த வெற்றி பெருமை எமக்கே உரியது

இந்த முககிய தலைவர்களை இங்கு ஒன்றிணைத்தமை தொடர்பில் தூய்மையான நாளைக்கான அமைப்பு மகிழ்ச்சியடைகின்றது. தாம் யுத்தத்தை வெற்றிபெற்றதாக சிலர் மார்தட்டுகின்றனர். ஆனால் வெற்றிபெற முடியாது என்று கூறப்பட்ட யுத்தத்தை வெல்ல முடியும் என்று நாங்களே கூறினோம். எனவே இந்த யுத்த வெற்றியின் பெருமை எமது கட்சியையே வந்துசேரவேண்டும்.

கட்சிகளின் எழும்புக் கூடுகள் மட்டுமே ஆளும் கூட்டணியில்

இன்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள் சிதைவடைந்துள்ளன. இந்தக் கூட்டத்தில் பலரை பார்க்கின்றேன். கட்சிகள் எழும்புக் கூடுகள் மட்டுமே அங்கு உள்ளன. மேலும் இன்று பல அமைச்சர்கள் இங்குவர முயற்சித்தனர். ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வரும்வரை காத்திருக்கின்றனர்.

10 அமைச்சர்கள் வருவர்

எனவே அறிவிப்பு வெளியானதும் 10 முக்கியஸ்தர்கள் அரசாங்கத்திலிருந்து எமது பக்கம் வருவார்கள். உபாய அபிவிருத்தி சட்டமூலத்தின் ஊடாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்கினர். ஆனால் அதில் கசினோவை யாருக்கும் தெரியாமல் கொண்டுவந்தனர். ஆனால் நா்ஙகள் அதனை எதிர்த்தோம். இன்றும் ஜேம்ஸ் பெக்கரினால் இங்கு வர முடியாமல் உள்ளது. இந்த அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு உள்நாட்டு வர்த்தகரும் முன்னேற்றமடைந்தனரா என்று கேள்வியெழுப்புகின்றோம்.

சீனாவின் சந்தையாக இலங்கை

இலங்கை இன்று சீனாவின் சந்தையாக மாறிவிட்டது. ஒரு பட்டம் பறந்தாலும் அது சீனாவினுடையாகவே உள்ளது. கொழும்பில் சீன நகரை அமைக்கப்போகின்றனர். அவ்வாறு அமைதததும் கசினோ விபசாரம் என்பன இங்கு வரும். கடலை நிரப்பி என்ன செய்யப்போகின்றனர் என்று தெரியவில்லை.

தேர்தலை நோக்கிய வரவு செலவுத்திட்டம்

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்துள்ளார். சம்பள அதிகரிப்பை வழங்கியுள்ளார். இதனால் நாட்டில் விரைவில் பாரிய பொருளாதார பணவீக்கம் உருவாகும். இந்த சம்பள அதிகரிப்பை கடந்த வருடம் ஏன் வழங்கவில்லை எ்னறு கேட்கின்றோம். அலரி மாளிகையின் சமையலறையில் பணிபுரிபவரும் நீதியரசராக நியமிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது என்றார்.

No comments

Powered by Blogger.